September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வியா கேக்குற கேள்வி…?

தேனி சுந்தர்
பயிற்சிகள் நடைபெறும்போது இடையிடையே கருத்தாளர்களிடம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பது வழக்கம்.. கொஞ்சம் கலந்துரையாடலும் இருந்தால்தான் பயிற்சியும் உயிரோட்டமாக நடக்கும்.. ஒரு கட்டுரை, கவிதை எழுதினால் வாசிப்பவர்கள் அதை நேரடியாக எழுதியவருடன் சம்பந்தப்படுத்தி புரிந்து கொள்வதுபோல இதையும் புரிந்து கொள்ளக் கூடாது.. நாம் கேட்கிற கேள்விகள் நமக்காக மட்டுமல்ல.. கேள்வி கேட்கத் தயங்கி, உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டு உட்கார்ந்து இருப்பவர்களுக்காகவும்தான் கேட்கிறோம்.!
அப்படி ஒரு பயிற்சியில் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தபோது, பின் வரிசையில் அமர்ந்திருந்த முக்கியமான அதிகாரியை நான் கவனிக்கவில்லை… பயிற்சி முடியும்போது அதே அதிகாரிதான் நிறைவு செய்து பேசினார்..
அவ்வாறு பேசும்போது பங்கேற்ற ஆசிரியர்களிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தவர், எனக்கு முன் வரிசை வரும்போதே எட்டிப் பார்த்து என்னிடம் சொன்னார்..
“உங்களுக்கு ஒரு தலைப்பு கொடுப்பேன். அந்த தலைப்பில் நீங்கள் பேச வேண்டும்” என்றார்..
“இப்பவா சார்?” என்றேன்.. “ஆமாம், இப்ப, இன்னும் கொஞ்ச நேரத்தில்..” என்றார்..
கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு கேள்வி கேட்பது சுலபம்.. முன்னாடி நின்று பேசு பார்க்கலாம் என்பது அவர் நமக்கு விடுக்கும் சவால்..!
தலைப்பையும் கொடுத்தார். நான் எழுந்து சென்று அங்கிருந்த மைக்கை எடுத்தேன்.
“அதெல்லாம் எடுக்கக் கூடாது. ஆசிரியரின் குரல் கடைசி வரிசைவரை தெளிவாகக் கேட்க வேண்டும்..!” என்றார். நான் தடுமாற வேண்டும். தோற்று நிற்க வேண்டும். அதிலிருந்து எனக்கும் கூடியிருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்பது அவர் திட்டம்..! இனி ஒரு பயலும் எந்திரிச்சு பேசணும், கேள்வி கேட்கணும்னு மனசுல கூட நினைக்கக் கூடாது..!
மைக் வைத்துப் பேசினால் ஒரு வாரம் பேசலாம். இல்லையென்றால் குறைந்தபட்சம் மூன்று நாள் பேசலாம். அப்படியொரு தலைப்பு. கிடைத்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி முப்பது நிமிடங்களில் பேசி முடித்துக் கொண்டேன்..!
அந்த அதிகாரியின் சிறப்பு என்னவென்றால் உரையாக இல்லாமல் கலந்துரையாடல் பாணியிலேயே பேசினார். பாராட்டத் தகுந்த அணுகுமுறை..! அடுத்து ஒரு கேள்வியை முன்வைத்தார்..
“நீங்கள் யார்..?”
ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொன்னார்கள். என் வரிசை வந்ததும் நான் எழுந்து ஒரு பதிலைச் சொன்னேன். என் இரண்டு கைகளும் பேண்ட் பாக்கெட்டில் இருந்தன. அது அவருக்குப் பொறுக்கவில்லை..!
“கையை எடுங்க மிஸ்டர்.. உங்க வகுப்பறையில் ஒரு பையன் இப்படி நின்றால் ஏற்றுக் கொள்வீர்களா..?” என்று கேட்டார்..
அவர் கேட்டது ஒரு மதிப்பெண் வினா. நான் சொன்னது பத்து மதிப்பெண் கேள்விக்கான விடை..!
“நான் ஏற்றுக் கொள்வேன் சார்.. என் வகுப்பில் ஒரு பையன் இப்படி நின்றால் நான் ஏற்றுக் கொள்வேன். அதை மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.. என் வகுப்பறை ஒரு ஜனநாயக வகுப்பறை. ஒரு பையன் கேள்வி கேட்டால், அவனை மிரட்ட மாட்டேன். கட்டம் கட்டி, அவனை எழுப்பி விட்டு, அவனைச் சிக்க வைத்து, குற்றவாளி ஆக்கி, நீ கேள்வி கேட்கத் தகுதி அற்றவன் என்று கூட்டத்தின் முன் அவனை தோற்கச் செய்து, அவனுடைய தோல்வியின் மூலம் கேள்வி கேட்க நினைக்கும் மற்றவர்களுக்கும் பாடம் கற்பிக்க நான் நினைக்க மாட்டேன்.. வகுப்பறையில் என் அதிகாரத்தைக் காட்ட மாட்டேன்.. ஏனென்றால் என் வகுப்பறை ஜனநாயக வகுப்பறை..! பாவ்லோ பிரையரே என்ற ஒரு கல்வியாளர் இருந்தார். அவர் கலந்துரையாடி கற்கும் முறையை முன்வைக்கிறார். இது அவருடைய நூற்றாண்டு.. உலகம் முழுவதும் வகுப்பறை ஜனநாயகம் குறித்து பேசப்பட்டு வருகிறது. நமது பள்ளிக் கல்வித் துறையும் கூட அடிக்கடி ஜனநாயக வகுப்பறைகள் குறித்து பேசி, வலியுறுத்தி வருகிறது. ஆசிரியர் தன் நிலையில் இருந்து இறங்கி ஆசிரிய-மாணவராகவும், மாணவர் ஒரு படி முன்னேறி மாணவ-ஆசிரியராகவும் திகழ வேண்டும். முன்னாடி நின்று பேசுவதாலேயே ஒருவர் எல்லாம் தெரிந்தவர் ஆகி விட முடியாது. உட்கார்ந்து கேட்பதாலேயே ஒன்றும் தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது..
எது சந்தோசம்? எது இன்பம்? எது மரியாதை? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.. இந்தியாவின் பிரதமர் யார் என்று கேட்டால் இந்தியா முழுக்க ஒரே பதில்தான் கிடைக்கும்! தமிழகத்தின் முதல்வர் யார் என்று கேட்டால் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ற பதில்தான் கிடைக்கும்..! ஆனால் நீ யார் என்ற கேள்வி அப்படிப்பட்ட ஒன்று அல்ல.. எனவே ஐயா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல, அவர் எதிர்பார்க்கும் ஒரு பதிலைச் சொல்ல என்னால் முடியவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறி முடித்தேன்..
“பொறுடி எங்க ஐயா வரட்டும்.. அவர்ட்ட உன்னையச் சொல்லி மாட்டி விடுறேன்..!”என்று நினைத்துக் கொண் டிருந்தவர்கள் என்ன செய்திருப்பார்கள்? பொத்திக் கொண்டு போக வேண்டியதுதான்..!
அது இருக்கட்டும்.. இங்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா.. குடும்பத்தில்? வகுப்பறையில்.. பொது சமூகத்தில் நடப்பது இல்லையா..? நாம் அப்படி யாரிடமும் நடந்து கொண்டது இல்லையா..? அதிகாரம் கோலோச்சும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. அதிகார வியாதி உள்ள எல்லாரிடமும் இந்த பிரச்சினை இருக்கும்.. ஆனால் அடுத்தவர் அப்படி நடந்து கொள்ளும் போது மட்டும்தான் அது நம் கண்ணுக்குத் தெரியும்..
“நேத்து அந்த டீக்கடைகிட்ட பார்த்திட்டு பாக்காத மாதிரியே போற .. சொல்லிவிட்ட கேள்வி-பதிலைப் படிச்சிட்டு வந்தியா இல்லையா..? ஊரு சுத்துறது.. நீட்றா கைய்ய..!!”
நாம் நம் அதிகாரத்தைக் காட்டும் சிறு சிறு இடங்கள் ஆயிரம் இருக்கும்.. அது என் இயல்பு என்று கடந்து விடாமல் நாமும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..! யோசிக்கலாமா..?!
(9047140584 – – [email protected])

Spread the love