September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்விகள் ஆயிரம்!!

டாக்டர் ஜி. ராமானுஜம்


‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று ஒரு திரைப்படம். அதில் பாண்டியராஜனும் செந்திலும் தெருவில் திரியும் மனநிலை பிறழ்ந்தவர்களை அழைத்துப் பயிற்சி கொடுத்து வைத்திருப்பார். யாராவது ‘ஆயிரம்’ எனச் சொன்னால், உடனே வரிசையாக ரெண்டாயிரம், நாலாயிரம் எனச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். (பத்தாயிரத்துக்கு ‘பிம்பிளிக்கி பிலாப்பி’ என்பார் ஒருவர்). மனநிலை பிறழ்ந்தவர்களை இந்த காட்சி கிண்டல் செய்வதாக இருக்கிறது. ஆனாலும் மனநிலை சரியாக இருப்பதாக நம்பப்படும் நம் மக்கள் இந்தக் காமெடியில் வருபவர்களைப் போல்தான் பல நேரம் நடந்து கொள்கிறார்கள். தானாக எதையும் செய்யாமல் அடுத்தவர் ஒருவர் செய்யும் விஷயத்தைப் பார்த்து அப்படியே செய்து பழக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். திடீரென கரெண்ட் கட் ஆகிவிட்டால் ஜப்பான்காரர் பேட்டரி, டைனமோ என எதையாவது உபயோகித்து வீட்டில் லைட்டை எரிய வைப்பார்.. பிரெஞ்சுக்காரரோ மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு, ஒரு கிளாஸ் ஒயினை எடுத்துக்கொண்டு பியானோவை இசைக்க ஆரம்பிப்பார்.. இந்தியரோ வேகவேகமாக அடுத்த வீட்டை எட்டிப்பார்த்து அங்கு கரெண்ட் இல்லை என்றால் அப்பாடா என்று நிம்மதிப் பெருமுச்சு விடுவார். அந்த அளவுக்கு நாம் எல்லா விஷயங்களிலும் அடுத்தவர்களைப் பின்பற்றி நடக்கிறோம்.
இது எந்த விஷயத்தில் உண்மையோ இல்லையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி கேட்கும் விஷயத்தில் சத்தியமான உண்மை. சிலசமயம் தொலைக்காட்சி, வானொலிகளில் நேரலையாக மன நலம், உடல் நலம் தொடர்பான சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். நிகழ்ச்சியை ரசித்துக்(???) கொண்டிருக்கும் நேயர்கள் கேள்வி கேட்கலாம் என்றவுடன் ஒருவர் நிலையத்துக்கு ஃபோன் செய்து “டங்காமாரி ஊதாரி பாடலைப் போடுங்க” என்பார். உடனே அறிவிப்பாளர் ‘இது மனநலம் தொடர்பான நிகழ்ச்சி சார்!’ எனத் திருத்துவார். உடனே அந்தத் தொலைபேசி அழைப்பாளர் “ஓகே சார்! அப்ப மனசே மனசே குழப்பம் என்ன அப்படீங்கற பாடலை ஒலிபரப்புங்க” என்பார். அவரைத் தொடர்ந்து வரிசையாக பாடல்களாகக் கேட்டுத் தள்ளிவிடுவார்கள். சிலசமயம் என்ன நிகழ்ச்சி என்றே தெரியாமல் “ஆதார் கார்டில் என் ஃபோட்டோ அழகா இல்லை சார். ஃபோட்டோவை மாத்தணும். அதுக்கு என்ன நடைமுறை?” என ஒருவர் கேட்டுவிட்டால், அவ்வளவுதான்! வரிசையாக ரேஷன் கார்டில் சர்க்கரை வாங்க என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்! தொலைக்காட்சி நேரலை என்றில்லை. கூட்டங்களிலும் அப்படித்தான். நாம் பேசி முடித்ததும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என அறிவிப்பாளர் சொன்னவுடன், சிறிது நேரத்துக்கு அமைதியாக இருப்பார்கள். பின்னர் ஒருவர் ஒரு கேள்வியைத் தொடுப்பார். பெரும்பாலும் அந்தக் கேள்விக்கும், நம் உரைக்கும் எந்தவிதத் தொடர்பையும் ஸ்காட்லாந்து யார்டு துப்பறியும் போலீஸார் வந்தால்கூடக் கண்டுபிடிக்க முடியாது. அப்படிக் கேள்வி ஒன்றைக் கேட்டுவிட்டு பதிலைக்கூட எதிர்பாராமல் என்கடன் கேள்வி கேட்பதே என வேறு பக்கம் கவனிக்க ஆரம்பித்து விடுவார். அவருக்குப் பின் அவரது வாரிசுகளாக வரிசையாக அதே சிலபஸில் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை என் மருத்துவ நண்பர் ஒருவர் இரத்த அழுத்தம் பற்றிப் பேசினார். உணவில் உப்பின் அளவைக் குறைப்பதைப் பற்றிப் பேசினார். பின் கூட்டத்திலிருந்த ஒருவர் உப்பில்லாமல் ஊறுகாய் எப்படிப் போடுவது என ஒரு கேள்வி கேட்டார். தொடர்ந்து தக்காளியை எப்படி தாளிப்பது, தயிரை எப்படிப் புளிக்காமல் வைத்திருப்பது எனச் சமையல் குறிப்பு சந்தேகங்களாகக் கேட்டு அந்த மருத்துவரை சமையல் மாஸ்டராக மாற்றிவிட்டனர். கொரோனா காலமானதால் அதுபற்றிய கேள்விகள்தான் அதிகம் வரும். அதுவும் ஆன்லைன் கூட்டம் என்றால் கேட்பவர் முகம் தெரியாது என்பதால் அடித்துத் தூள் பரத்திவிடுவார்கள். இப்படித்தான் இசை பற்றிய ஒரு கருத்தரங்கில் பேசியதும் ஒருவர் கேட்டார் ‘டாக்டர்.. கொசு கடித்தால் கொரோனா பரவுமா?’ என. சம்பந்தமே இல்லாமல் இதென்ன அபத்தமான கேள்வி என்பதுபோல் அவரை முறைத்தபடியே இன்னொருவர் கேட்டார்: “ஆவி பிடிப்பது அடுப்பிலே பாத்திரம் வைத்துப் பிடிக்கணுமா? இல்லை குக்கர் வைத்துப் பிடிக்கணுமா?” இப்போது தடுப்பூசி சீசன். ஆகவே எது சம்பந்தமாகப் பேசினாலும், ஒருவர் தடுப்பூசி பற்றி ஆரம்பித்தால் அவ்வளவுதான்..


சமீபத்தில் மன அழுத்தம் பற்றிப் பேசியபின் வரிசையாக என்னிடம் கேட்கப் பட்ட கேள்விகளும் என் பதில்களும்:
“டாக்டர்! கொரோனா ஊசி போட்டுக்கலாமா?”
“தாராளமாப் போட்டுக்கோங்க!”
“கோவாக்சினா? கோவிஷீல்டா??”
“எதாவது போட்டுக்கோங்க!”
“வலது கையில் போட்டுக்கலாமா? இல்லை இடது கையில் போடணுமா?”
நல்ல வேளை தடுப்பூசியைக் கையில் போட்டுக் கொள்கிறோம்.
கூட்டம் முடிந்த சில நாட்கள் கழித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அமைப்பினைச் சேர்ந்த ஒருவர் எனக்கு போன் செய்து,
“அன்னிக்கு ஆன்லைன் மீட்டிங்கில் நல்லா பேசினீங்க டாக்டர். நிறைய பேர் கேள்வி கேட்டாங்க..” என்றார்.
“ஆனா எல்லோரும் தடுப்பூசி சம்பந்தமாகவே கேட்டாங்க. இது மனநலம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஆச்சே..” என்றேன் நான்
“இது பரவாயில்லை டாக்டர். நீங்களாவது டாக்டர்! உங்ககிட்ட கேட்கலாம். போன வாரம் ஒரு தமிழ்ப் பேராசிரியர் புறநானூறு பற்றிப் பேசினார். அவரிடமும் எல்லோரும் தடுப்பூசி பத்திதான் சந்தேகம் கேட்டாங்க..” என்றாரே பார்க்கலாம்!
(9443321004 – [email protected])

படம் : Doctor Aug

Spread the love