September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேயார் விஜயாவின் ஜெயின் மாப்பிள்ளை

ச. சுப்பாராவ்

உலகம் உருண்டைதான். அதுவும் ரொம்பச் சின்ன உருண்டை என்று அவளைப் பார்த்ததும் தோன்றியது. இல்லாவிட்டால் எப்போதோ நாற்பது வருடங்களுக்கு முன் எங்கள் தெருவில் இருந்தவளை இங்கு ரோட்டர்டாமில் மாரத்தால் சந்தையில் வைத்துப் பார்க்க முடியுமா? எனக்குத் தெரிந்த அக்கா. என் அக்காவின் ஸ்நேகிதி. நல்ல எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் பச்சை, சிவப்பு, பிங்க் என்று கோடுகளும், பெரிய வட்டங்களும், சதுரங்களும் நவீன ஓவியம்போல் அள்ளித் தெளித்திருக்கும் புடவை. என்ன கலர் ரவிக்கை என்று தெரியவில்லை. தோலால் ஆன கனமான முழுக்கை ஜாக்கெட் போட்டிருந்தாள். பெரிய கூலிங் கிளாஸ் போட்டிருந்தாள். கேயார் விஜயா வெளிநாட்டில் டூயட் பாடும்போது போடும் கூலிங் கிளாஸ். அவளே மேயர் மீனாட்சி கேயார் விஜயா மாதிரிதான் இருந்தாள். நம் ஊர் முருங்கைக்காயின் நீளத்திற்கு இருக்கும் அந்த நாட்டின் முள்ளங்கியை ஆஃப்கனிஸ்தான் பெண் ஒருத்தி ஐநூறோ..ஐநூறோ…என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். உலகின் எந்த மூலையிலும் சந்தை என்றால் கூவி விற்பதுதான் வழக்கம்போல. முள்ளங்கி வாங்கிக் கொண்டு நிமிர்ந்தவள் என்னைப் பார்த்து நீ இன்னாரின் தம்பிதானே என்றாள். ஆமென்றேன். என்னைத் தெரிகிறதா என்று கேட்டாள். அக்காவின் ஸ்நேகிதி என்று நினைவிருக்கிறது..சுமதியா என்றேன். இல்லை சுமித்ரா. நான் பெரிய கிளாஸ் வரும்போது அவளுக்கு திருமணம் ஆகி வெளியூர் சென்றுவிட்டதால், எனக்கு சரியாக அடையாளம் தெரியவில்லை போல என்றாள். ஆனால் நான் மாறவில்லையாம்.
ஆஃப்கன்காரி திரும்பவும் ஐநூறோ.. ஜபத்தை ஆரம்பித்தாள். இங்க வந்த புதுசுல என்ன ஒரு முள்ளங்கி ஐநூறு ரூபான்னு நம்ம தமிழ்ல விக்கறாளேன்னு பாத்தேன். டச்சுல ஐன் அப்படின்னா ஒண்ணு. ஒரு யூரோன்னு கூவறதுதான் நமக்கு ஐநூறோன்னு கேக்கறதுன்னு என் பொண்ணு சொன்னா, என்றாள் சுமித்ரா அக்கா. பொண்ணுக்கு டெலிவரிக்கு வந்துருக்கேளா என்றேன். ஆம் என்றாள். நானும் அவ்வண்ணமே என்றேன்.
சர்தார்ஜி ஒருவரின் தள்ளுவண்டி இந்தியன் ஸ்நாக்ஸில் சமோசா வாசனையும், ஏலக்காய் வாசனையும் என்னை மதுரை ரீகல் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் ஜம் ஜம் டீக்கடைக்குக் கொண்டு போய் நிறுத்தியது. சுமித்ராக்காவுடன் ஒரு சமோசா, டீ சாப்பிட்டுக் கொண்டே பேசினால் நன்றாகத்தான் இருக்கும். மனது அந்த செலவை எண்பத்தியொன்பதால் பெருக்கிப் பார்த்து வேண்டாம் என்றது. அந்தக் காசுக்கு நான் தீபாவளிக்கு துணி எடுத்துவிடுவேன்! இங்கு வந்ததிலிருந்து எண்பத்தியொன்பதாம் வாய்ப்பாடு மனப்பாடமாகிவிட்டது. நான் டீக்கடையைப் பார்த்ததைக் கவனித்த அக்கா, இங்கு நம் ஊர் மாதிரி நினைத்ததை வாங்க முடியவில்லை என்றாள். விமான நிலையத்தின் அதே பளபளப்புடன்தான் கட்டணக் கழிப்பறையும் இருக்கிறது. ஆனால் ஒரு மூச்சாவிற்கு எண்பத்தியொன்பது ரூபாய் என்றால், என்ன செய்வது? மகள் வீடு ரோட்டர்டாமின் புகழ்பெற்ற கியூப் வீடுகளுக்குப் பின்புறம் இருக்கிறது. சிவப்பு ஆப்பிள் அடுக்ககம். நாற்பதாவது மாடியில் இருக்கிறார்கள். வீட்டின் ஜன்னலிலிருந்து இரவில் செக்கச் செவேலென்று ஒளிரும் எராஸ்மஸ் பாலத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமாம். மறுநாள் காலை டிபன் முடிந்ததும் கிளம்பினேன். வர்ஷாவைத் தனியாக விட்டுவிட்டு வர காயத்ரி விரும்பவில்லை. எனவே நான் மட்டும் போனேன். நாற்பதாவது மாடிக்கு லிஃப்டில் நாற்பது செகண்டில் போனதுபோல் இருந்தது. சக லிஃப்டரான சீனப் பெண் ஒருத்தி சுஜாதா சொல்வது மாதிரி பாக்கெட் டிரான்ஸிஸ்டர் சைசில் ஒரு நாய்க் குட்டியை தனது தோள் பையில் வைத்திருந்தாள். லிஃப்டில் நாங்கள் இருவர்தான் என்றாலும், லிஃப்ட் நின்றதும், அந்தப் பெண் வெளியே வந்து நான் வெளியே வர இடம் விட்டு நின்றாள். நான் வெளியே வந்ததும், கையசைத்து விட்டு திரும்பவும் லிஃப்டினுள் சென்றாள். வெளிநாட்டில் நாளும் ஒவ்வொரு பாடம்தான் எனக்கு.
சுமித்ரா அக்கா என்னை வரவேற்றாள். வரும்போது மதுரையிலிருந்து வாங்கி வந்த நாகப்பட்டினம் ஒரிஜினல் கடையின் காராச்சேவு இன்னும் தீரவில்லை. காராச்சேவும், நரசுஸ் காப்பியுமாக பழைய கதைகளைப் பேச ஆரம்பித்தோம். சுமித்ராக்கா என் அக்காவுடன் படிக்கவில்லையாம். எங்கள் பெரியம்மா பெண் புவனாவின் கிளாஸ்மேட். புவனாவுடன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாளாம். ‘இப்போ சொன்னா என்ன, உங்க அண்ணாவப் பாக்கத்தான் வருவேன். ஆனா, உங்க அண்ணா கொஞ்சம் மக்கு. அத புரிஞ்சுக்கவே இல்ல’ என்றாள். ‘புரியாம இருக்காது. நீங்க இப்படி கேயார் விஜயா மாதிரி இருக்கறதுனால, கண்டுக்கல்ல போல’ என்றேன். ‘போடா, இப்போத்தாண்டா இப்படி ஆயிட்டேன். அப்போல்லாம் ஸ்லிம்மாத்தான் இருந்தேன்’ என்றாள். அவள் அப்பா சாஸ்திரிகள். எஸ்எஸ்எல்சிக்கு மேல் வேண்டாம், கல்யாணம் என்றார்கள். இவள்தான் போராடி பியூசி படித்தாள். அதற்கு மேல் படிக்க வைக்கவில்லை. தூரத்து சொந்தம் என்று அரசுப் பணியில் இருந்த பையனுக்குக் கட்டி வைத்தார்கள். பெரிய குடிகாரன். வரிசையாய் மூன்று பெண்கள் பிறந்த நேரத்தில் குடல் வெந்துபோய் எப்போதும் ஆஸ்பத்திரி வாசம். நல்லவேளையாக கருணை அடிப்படையிலான பணிநியமனத்திற்கான வயது வரம்பை அவள் தாண்டுவதற்கு ஓராண்டிற்கு முன் இறந்து போனான். இவள் வேலைக்குப் போனாள். ஒவ்வொரு மகளாகக் கரையேற்றினாள். ஓய்வு பெற்ற பிறகுதான் கடைசி மகளுக்குக் கல்யாணம். அவளது பிரசவத்திற்குத்தான் இங்கு வந்திருக்கிறாள். குரலில் எந்த துக்கமும் வருத்தமும் இல்லாமல், என் அம்மா எனக்கு அவ்வப்போது டிவி சீரியல் கதைகளைச் சொல்வாளே, அந்தக் குரலில் யார் கதையையோ சொல்வது போலச் சொல்லி முடித்தாள். ஓ..அதுதான் நெற்றியில் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக கறுப்பு ஸ்டிக்கர் பொட்டும், சின்ன விபூதிக் கீற்றுமா? இரண்டு அறை கொண்ட வீடு. மகளின் அறையில் மாப்பிள்ளையோடு மகள் நிற்கும் படம். ஹிந்திக்காரன் போன்ற மாப்பிள்ளை. என் பார்வையின் கேள்விக்கு அவளே பதில் சொன்னாள். மாப்பிள்ளை ஹிந்திக்காரர்தான். ஜெயின்ஸ். நாம சாஸ்திரிகள் பரம்பரையேம்மான்னேன். நீ பிராமணன்னு கல்யாணம் பண்ணிண்டு என்ன சந்தோஷமா இருந்தேன்னு கேட்டா.. என்னால ஹானஸ்ட்டா பதில் சொல்ல முடியல்ல. ‘நா லவ் பண்றவன் குடிகாரன் இல்ல. உங்க பரம்பரைய விட ஒழுக்கமாத்தா இருப்பான்’னு சொன்னா. சரின்னு சொல்லிட்டேன். ‘பையனும் அப்படித்தான் இருக்கான். ரொம்ப மரியாதை. பெரியவா யாரைப் பார்த்தாலும் கால்ல விழுந்துடுவான்’ என்றாள் பெருமையாக.

அப்போது அவள் முகத்தைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
( 94421 82038 – [email protected])

படம் : Subbarao

Spread the love