June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

குழந்தைகளின் பாதுகாப்பு – என்ன செய்யப்போகிறோம்?

நாள்தோறும் நடக்கும் நிகழ்வாகிப் போயுள்ளது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. வீடு, வீதி, பள்ளிக்கூடம் என எந்தவொரு பொதுவிடமும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பது எவ்வளவு கொடுமையானது! செய்தி அறிந்ததும் வெகுண்டு எழுகிறோம்; போராடுகிறோம், சில நாட்களில் மறந்தும் விடுகிறோம். பாதுகாப்பான தொடுதல்,பாதுகாப்பற்ற தொடுதல் என்பதையெல்லாம் தாண்டி, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற வேறுபாடின்றி குழந்தைகள் வித்தியாசமாக உணரும் அனைத்துத் தொடுதல்களும் தவறானவையே என்று சொல்லித்தர வேண்டும். உன் மீது நடத்தப்படும் அத்துமீறலுக்கு நீ எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதையும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்பதையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்களால் மட்டுமே குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை நிதானத்துடனும், அக்கறையுடனும் கையாள முடியும். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் அசம்பாவிதம் குறித்து மனந்திறந்து பேசிடும் சூழல் வீட்டிலும் பள்ளியிலும் இருந்திட வேண்டும்.
தன் உடல் மீது செய்யப்படும் அத்துமீறல்களை பயமின்றி எதிர்க்க வேண்டும்; தனியாகப் போராடி நம்மால் இப்பிரச்சனைக்கு தீர்வு பெற முடியாது; இதை அவமானமாகவோ, களங்கமாகவோ நினைக்காமல் எதிர்த்து உறுதியாகப் போராடினால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்திட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பள்ளி நிர்வாகம் ஆலோசனை மையங்கள் அமைத்து உதவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறை நிகழும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலன் மட்டுமே பிரதானம் என்பதை உணர்ந்து பள்ளி நிர்வாகங்கள் காத்திரமான நடவடிக்கையினை எடுத்திட வேண்டும். பொதுவாகவே நமது கலாச்சாரம் பெண்களுக்கு எதிரானதாகவும், இறுக்கமானதாகவும் இருப்பது பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கு ஏதுவானதாக இருக்கிறது. பெற்றோர் ஆசிரியர், பள்ளி நிர்வாகம், சிவில் சமூகம் அனைவரும் இணைந்து செயல்பட்டாலே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை வேரறுக்க முடியும். அதை நோக்கி நம்முடைய சமூகம் நகர வேண்டும் என்பது முக்கியம்.
ஆசிரியர் குழு

Spread the love