January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கிழக்கின் வெனிசில் ஒரு அறிவாலயம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
கேரளாவின் ஆலப்புழை நகரில் அலைகள் ஆர்ப்பரிக்கும் கடற்கரைப் பகுதியில் ஒரு அருங்காட்சியகம் உருவாகி வருகிறது. இங்கு அமைந்துள்ள துறைமுகம் ஒரு காலத்தில் கடல் வணிகத்திற்கு பெயர் பெற்று விளங்கியது. கயிறு, விரலி மஞ்சள், ஏலம், கொப்பரை போன்ற எண்ணற்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நகரம், உலகத் தொழிலாளர் இயக்கத்தின் வரைபடத்தில் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. உலகில் கடல் மட்டத்திற்குக் கீழே வயல் அமைத்து நெற்பயிரிடப்படும் இரண்டு இடங்களில் ஒன்றான குட்டநாடு என்ற காயல் பிரதேசம் இங்கு உள்ளது.
அருங்காட்சியகத்தில் உலகத் தொழிலாளர் இயக்கங்களின் வரலாறு, பல்வேறு காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள், இந்தியாவில் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு, இன்றைய நிலை குறித்த ஆவணங்கள், புகைப்படங்கள், காட்சிப்பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆலப்புழை நகரின் வரலாறு, அதன் கடல்சார் வணிகப் பெருமை போன்றவற்றை விவரிக்கும் காட்சிகளும் இங்கு உள்ளன.
மேற்கித்திய காலனி ஆதிக்கத்தினரின் வருகை, அவர்களின் கடல்சார் வணிகம், தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியபோது அவர்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள், தொழிலாளர் இயக்கங்களின் தோற்றம், போராட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஆய்வு செய்யும் மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு இவை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் இங்கு வசதி உள்ளது. ரூ. 9.95 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. 97 சதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது. நகரக்காடுகள் திட்டம், கடல்சார் சமிக்ஞைகள் குறித்த அருங்காட்சியகம், நகரில் ஓடும் கால்வாய்கள், காந்தி அருங்காட்சியகம், சௌவார் மசூதி, மக்கம் மசூதி ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகளும் நடந்துவருகின்றன. புகழ்பெற்ற புனரமைப்புக் கட்டிடக் கலைஞர் டாக்டர் பென்னி குரியகோஸ் அவர்கள் தலைமையில் இப்பணிகள் நடந்து வருகின்றன.
ஆலப்புழை நகரத்தின் சுற்றுலா வரைபடத்தில் இனி இந்த அருங்காட்சியகம் முக்கிய இடம் பெறும். இந்த முன்மாதிரி அருங்காட்சியகம் உதிரத்தை உழைப்பாக்கும் தொழிலாளர்களுக்கு நன்றி சொல்லும் திருத்தலமாகத் திகழும் என்பது உறுதி.
(73390 89961 – [email protected])

Spread the love