September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கால மாற்றங்களும் கருத்து மாற்றங்களும்

சு.ஆறுமுகம்

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக காலமாற்றத்திற்கேற்ப கருத்து மாற்றங்கள் உண்டாவது இயல்பு. நேற்றுவரை சாத்தியமில்லாத ஒன்று இன்று சாத்தியமாகிப் போவதெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்பே என தந்தை பெரியார் கூறுவார். திரைப்பாடல்களில் கவிஞர்கள் பொதுவுடைமை, வீரம், நல்லொழுக்க நெறிகள் குறித்து எழுதினாலும் ஒரு சில கருத்துக்களை அறிவியல் பார்வை கொண்டு பார்க்கும்போது அறிவியல் மனப்பாங்கிற்கு எதிராகவே உள்ளது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 51 ஹ(h) ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை அரசாங்கம் வளர்க்க வேண்டும் என்று கூறுகின்றது. நாளொரு மேனி/ பொழுதொரு நடிப்பு/ அவன் பேர் மனிதன் அல்ல எனத் தொடங்கும் பாடலில் ‘காட்டில் நிலவாய் திரிந்தால்/ கடலில் மழையாய் பெய்தால்/ யாருக்கு என்ன லாபம்’ வரிகளில் மழை கடலில் பெய்தால் பயனற்றது என்பது கவிஞரின் கருத்து.
வானியல் ஆய்வாளரிடம் இது குறித்து கருத்து கேட்டால் ‘நிலத்தில் மட்டும் மழை பொழிந்து கடலில் மழை பொழியவில்லை என்றால் சமச்சீரற்ற வெப்பநிலை ஏற்படும்.. பருவமழை மாறிப் போகும்’ என்பார். ‘பொம்பள சிரிச்சா போச்சு/ புகையிலை விரிச்சா போச்சு/ பெண்ணே உனக்கென்ன ஆச்சு/நெருப்பாய் கொதிக்குது மூச்சு..’ என்கிறது ஒரு பாடல். சிரிப்பும் நகைச்சுவை உணர்வும் மனிதனின் அடிப்படை உரிமை அல்லவா, இதில் ஆண்-பெண் என்ற பேதம் எதற்கு? ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் ஆம்பள’ இந்த வசனம் இடம்பெறாத திரைப்படங்கள் மிகக்குறைவு. ஆம்பள.. அவன் சிங்கம்டா.. இப்படி ஆண்கள் மத்தியிலே ஒரு உரையாடல் ஆண்கள் நடந்து வருவதை ‘சிங்க நடை’ என்று சொல்வதுண்டு. அவ்வளவு ஏன் ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்று திரைப்பாடல் உண்டு. பெண் சிங்கம் ஒன்றும் வீரத்தில் குறைந்தது இல்லை. ஆனால் கலைஞரின் கைவண்ணத்தில் ‘பெண் சிங்கம்’ திரைப்படம் வெளி வந்தபோது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாம்பு பால் குடிப்பதை நம்பும் தேசம்தான் நம் இந்திய தேசம். ‘விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்/ வீணர் எல்லாம் மாறணும்/ வேலை செஞ்சால் உயர்வோம் என்ற விவரம் மண்டையில் ஏறணும்’ -என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரும், ‘விதியென்று ஏதுமில்லை/ வேதங்கள் வாழ்க்கையில்லை’-என்று கவிஞர் கண்ணதாசனும் எழுதிய நிலையில் ‘விதி வரைந்த கோட்டினிலே வாழ்க்கை ஓடுது என்றும், எல்லார்க்கும் தலைமேல் எழுத்தொன்று உண்டு/ யார் யார்க்கு அவன் போடும் பாதை’ -என்று வேறொரு கவிஞர் எழுதுகின்றார். படத்தின் காட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் எழுத வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தாலும் சிந்தனையாளர் எம்.எஸ். உதயமூர்த்தி ‘எங்கே நிம்மதி என்ற பாடலைக் கேட்கின்ற இளைஞன் மனதளவில் துவண்டு போகிறான். இசை வெள்ளத்துடன் வருகின்ற பாடலுக்கு வலிமை அதிகம்’ என்கிறார். ‘மணமகளே மணமகளே/ வா! வா! உன்/வலது காலை எடுத்து வைத்து/வா! வா!..’-என்றொரு பாடல். காலில் வலது கால், இடது கால் என்ன? இரண்டு கால்கள், இரண்டு கைகள் இரண்டுமே சிறப்புதான். ‘தேவி வந்த நேரம் செல்வம்/ தேடாமல்தான் வந்து சேரும்’-என்றதொரு பாடல். தேடாமல் வருகின்ற செல்வம் முறையற்ற வழி அல்லவா? ‘முள்ளில்லா ரோஜா/ முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்/ முள்ளில் ரோஜா பிறந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை/ சிப்பிக்குள்ளே பிறந்ததாலே சிப்பிக்கு என்ன சிறுமை..’ மேற்கண்ட வரிகளை பகுத்தறிவோடும் அறிவியல் சிந்தனையோடும் பாருங்கள். ரோஜா சிறிய மொட்டாகத் தோன்றி முழு ரோஜாவாக வளர்ச்சி அடைகின்றவரை அதற்கு பாதுகாப்பு வேலியாக முள் உள்ளது. அந்த முள் இல்லையென்றால் சிறிய மொட்டிலேயே அதை சில வானரங்கள் பறித்துவிட வாய்ப்புள்ளது. பெருமையை எதிர்பார்த்து முள் வளரவில்லை. அது தன் வாழ்நாள் முழுதும் காவல்காரனாகத்தான் வாழ்ந்து மடிகின்றது. முத்து பாதுகாப்பாக வாழ்வதற்கும் வளர்வதற்கும் சிப்பியை விட சிறப்பான இடம் உண்டா? காலம் மாறுது..கருத்து மாறுது. அதனால் நாமும் மாற வேண்டும்.
அறிவுக்கு வேலை கொடு.. பகுத்தறிவுக்கு வேலை கொடு-என்று கவிஞர் ஒருவர் கூறுகின்றார்.
காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். பழைய கருத்துகள் எல்லாம் பரிசீலிக்கப்பட வேண்டும். அப்படி பரிசோதிப்பதிலும் திறந்த மனதுடன் இருந்து பரிசீலிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அறிவியலுக்குப் பொருந்திவராத கருத்துக்களை நிராகரிக்க வேண்டும். தான் ஏற்றுக் கொண்ட உண்மைகளை உரிய நேரத்தில் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதும் அவசியம். நாளும் அறிவியல் கருத்துகளைப் பரப்பிடுவோம்.
(தொடர்புக்கு : 8248347702)

Spread the love