September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

காற்றிலாடும் வேர்கள்

ம. மணிமாறன்


கிடத்தப்பட்டிருக்கும் இந்தக் குழந்தைக்கு வாழ்வது குறித்த பெரும் கனவு மட்டுமல்ல,வாழ்க்கை குறித்த பெரும் விருப்பமும் கூட கடைசி நொடிவரையிலும் இருந்தது. சுற்றி நின்று கதறுகிற சொந்தங்களும், நண்பர்களும் இப்படியாகும் இன்றைய நாள் என நினைத்திருக்க வாய்ப்பேயில்லை. அவளின் கனவு அவளுடையது மட்டுமல்ல, ஊரின் கனவாகவும் இருந்தது. ஊரே கண்டிருந்த பெரும் கனவை பொசுக்கிய வன்முறையாளர்கள் யார்?..
கல்வியாளர்கள் எனும் பெயரில் காலப்பொருத்தமற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்துக்கொண்டேயிருக்கும் சிலர்தானே! மாற்றத்தினை நிகழ்த்தப் போகிற சமூகமான ஆசிரியர்களோடு எந்த மாற்றத்தின் போதாவது உரையாடலை நிகழ்த்தியிருக்கிறதா அதிகார மட்டம்? சொல்கிறோம் கேளுங்கள்.. சொல்வதைச் செய்யுங்கள் என ஒரு சக்கரவட்டச் சுழற்சிக்குள் அமிழ்த்தியிருக்கிறார்கள் பாடசாலைகளின் வித்தகர்களை. அதன் பிறகு அவர்கள் ஏதோ செய்து, எப்படியோ நகர்ந்திட விதிக்கப்பட்டவர்களாகி உழல்கின்றனர். எல்லாவற்றிலும் வன்மம் கொண்டதாகியிருக்கிறது நம்முடைய தேர்வு முறைகள்.
தேர்வு தந்த பயத்திற்கு உயிரை ஈந்திருக்கும் செல்லங்களின் பெயர்கள் காலத்தின் முகத்தில் கரும்புள்ளிகளென ஒட்டியிருக்கிறது. தேர்தல் அரசியலின் லாவணிக் கச்சேரிகளின் பாடுபொருளாகிவிட்ட நீட் , ஜெ.இ.இ… இவை யாவும் காசுள்ளோர் கைக்கருவிகளாகி விட்டன… நேற்றைய அனிதாவும், இன்றின் கனிமொழியும் வேறு, வேறு பெயர்கள் அல்ல. அவர்களின் பெயர் நீட், ஜெ.இ.இ., தகுதி, திறமை. நுழைவுத் தேர்வுகளின் நூதனச் சொற்கள். கடுங்காலத்தின் சொற்கள் பலியெடுத்த பெருந்துயர்…
“பாதகத்தி.. பெத்த மகளே நீ படிச்சு ஆளா வருவேன்னு பாத்தா, இப்பிடி பாதியிலே போயிட்டியே…உன்னை வளத்து ஆளாக்கி படிக்க வைச்சதெல்லாம் எதுக்கு? இப்பிடி கேட்பாரில்லாம தீக்கு திங்கக் குடுக்கவா?. . சார்! அப்பிடி படிப்பா சார். அவ பத்தாவதில ஃபஸ்ட் மார்க் வாங்கீட்டு வந்தப்ப ஊரே கூடி நின்னு பாராட்டுனது இன்னும் என் கண்ணுக்குள்ளயே கிடக்கு சார்..படிச்சு பெரிய ஆளா வருவான்னு பார்த்தா. இப்பிடி கேட்பாரில்லாம ஆகிப்போச்சே..”
இந்தக் குரல்கள் யாவற்றிற்குள்ளும் ததும்பும் துக்க அலைகள் நிரந்தரமானதில்லை. நிரந்தரமாகி விடவும் கூடாது. நடந்து போகும் பாதை எங்கும் கேட்ட இந்தக் குரல்கள் இன்றும் இந்த ஊரின் முதுகில் அழியாத பதிவாகிக் கிடக்கின்றன.
“டாக்டர் ஆகப்போறா.. ஆத்தா, நீ படிச்சு முடிச்சதும் எனக்குத்தான் முத ஊசி போடணும் சொல்லிப்புட்டேன். இங்கேரு நம்மூரு புள்ளங்களுக்கு வைத்தியம் பார்க்க காசு வாங்காதத்தா.. ஆமா, டாக்டருக்கு படிக்க வைக்க ரொம்ப செலவாகுமாம்ல? உங்க அப்பனுக்கு முடியலாட்டி என்ன, நாங்க படிக்க வைக்கிறோம்”…
இந்த நம்பிக்கைகள் எல்லாம் இற்று பொசுங்கி விட்டன. கொண்டாடித் தீர்த்த வீடும் ஊரும் எப்படி இந்த தோல்வியை எதிர்கொள்வார்கள் எனும் அச்சம் துரத்துகிறது. மரணத்தின் கொடுங்கரத்திற்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட இளங்குறுத்துகளின் சாவினை எப்படி சகிக்க எனும் கேள்வி நம்மை விடாது துரத்திக் கொண்டேயிருக்கிறது. இந்த மகா மெகா குளறுபடிகளுக்கான புள்ளி தொண்ணூறுகளின் துவக்கத்திலேயே வைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தின் நாற்கரச்சாலைகளின் ஓரங்களில் பதுங்கியிருக்கும் கட்டிடங்கள் யாவும் குழந்தைகளை காவுக் கேட்குற பலிபீடங்கள். கோழிக்குஞ்சு அடைக்கும் ஒரே படித்தான பள்ளிக்கூடங்கள், பொறியியல் கல்லூரிகள் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள். இந்த வணிக ஸ்தாபனங்களுக்கு மூலப்பொருட்களாக மாணவ, மாணவியரை உற்பத்தி செய்து தரும் ஒரே மகத்தான பணியை செய்வது மட்டுமே நம்முடைய பள்ளிக்கூடங்களின் பணியாக இருக்கிறது.
‘எங்க பையன் பிளஸ் ஒண்ணு இந்த ஸ்கூல்ல படிக்கிறான்’ எனச் சொல்வது கவுரவம் என்று மகிழ்ந்திருக்க பெற்றோரைப் பழக்கினார்கள். பெற்றோர் மட்டுமல்ல இந்த கோழிப்பண்ணை பள்ளிகளின் குழந்தைகளையும் அப்படியே பழக்கினார்கள். இந்த பண்ணைகளில் படித்து வளர பணம் வேண்டும். அதுவரையிலும் பெரிய பேதங்கள் எதுவும் அற்றிருந்த பள்ளிக்கூட கல்வி முறைக்குள் பாரதூர மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்தன தனியார் கல்வி வர்த்தக நிறுவனங்கள். பள்ளிக் கூடங்கள் எத்தனை லகுவும் நெகிழ்ச்சியும் ஆனவை என்பது இப்போது பலரின் நினைவில் கூட இல்லை. கலாசாலைகள் நிறுவனங்கள் ஆகிவிட்டதால் நேர்கிற பெரும் துயரத்தை மொத்த சமூகமுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
துவங்கிய பத்து வருடங்களில் தனியார் தொழில் முதலாளிகள் துவங்கி நடத்தி வருகிற பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளின் நடைமுறைகள் வர்த்தக சூதாடிகளின் தந்திரங்கள் நிகழும் வேட்டைக்காடாகி விட்டன. நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி என ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள அந்த துரதிஷ்டம் பிடித்த கப்பல் இன்னும் எத்தனை குழந்தைகளை நடுக்கடலில் ஆழ்த்தப்போகிறதோ தெரியவில்லை. சமீபத்திய உரையாடல்களில் எல்லோரும் டாக்டர் ஆகணும்னு எதுக்கு நினைக்கனும் எனும் ஒருபகுதியினரின் கேள்வி மிகவும் நியாயமானது போலத் தோன்றும். ஆனால் எல்லோரும் சமம் என்பது மட்டுமல்ல சமத்துவம், சமமான வாய்ப்புகள் வழங்குவதே சமத்துவத்தின் அடையாளம். அரசின் கருவிகள் பெரும் பணக்காரர்களின் நலன் பாடத் துவங்கிவிட்டன. வழக்கு மன்றங்களும் ஒன்றிய அரசின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்றன. நோய்த் தொற்றுக்காலத்தில் கல்விக் கூடங்களை மூடச் சொல்லி உத்தரவிட்ட வழக்கு மன்றத்தின் தலைமைக் கமிஷார்கள் ஒன்றிய அரசின் உத்தரவிற்கு கீழ்ப்படிகிற வேலைக்கார விசுவாசிகளாகிவிட்டனர். மாணவர்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அக்கறை கொண்ட அரசிது என்று பேசித் திரிந்தவர்கள், நீட் தேர்வை நடத்துவதைத் தவிர அரசிற்கு வேறு வழிவகை இல்லை என பகிரங்கமாக அறிவிக்கின்றனர். அனிதாக்களும் கனிமொழிகளும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு இந்த அநீதிக்கு சாட்சிகளாகியிருக்கின்றனர்.
இந்த உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வு நடைமுறைகளை முற்றாக ஒழித்தே தீர வேண்டும்.

(9443620183 – [email protected])

Spread the love