September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

காத்திருப்பு

Exif_JPEG_420

ஆசிரியர் : ஜனநேசன்
வெளியீடு : அன்னம், 1 நிர்மலா நகர், தஞ்சாவூர் 613007.
விலை: ரூ.150 (அலைபேசி: 7598306030)
நமக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் ஜனநேசனின் ஏழாவது சிறுகதைத் தொகுப்புதான் ‘காத்திருப்பு’. கம்பத்தில் நடைபெற்ற தமுஎகச-வின் மாநிலக்குழு தொகுப்பை வெளியிட்டு, அவரது முப்பதாண்டுகளுக்கு மேலான எழுத்துப் பணியையும் தொழிற்சங்கப் பணியையும் அங்கீகரித்துள்ளது.
இருபது சிறுகதைகளடங்கிய இத்தொகுப்பில் ‘காத்திருப்பு’, தலைப்புக் கதைக்குப் பொருத்தமான ஒன்றுதான்; இது இலக்கியச் சிந்தனையின் அறிந்தேற்பையும் பெற்றுள்ளது. இதில், கூட்ஸ் ட்ரெயினின் ‘கார்ட்’ ஆக வேலை செய்யும் அனுபவத்தை வியந்தோதும் அளவுக்கு அழகாக நமது கண்முன் கொண்டு வந்துள்ளார்; எதிர்பாராத முடிவு.
பல கதைகளில் பெருந்தொற்று-பொதுமுடக்க காலம் பின்புலமாக உள்ளது. ‘புதுவெளிச்சம்’ கதையில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரும், அவர்கள் பெறும் விழிப்புணர்வும் மனதில் தைக்கும்படி பதிவாகியுள்ளன. ‘கடிவாளமற்று’ கதை, பொதுமுடக்கமும் குடிப்பழக்கமும், இரு தம்பதிகளின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை சுவைபடத் தருகிறது.
‘சுவேதா’ திருநங்கையின் உணர்வுக்கும், ‘மரணவிரும்பி’ தொழிற்சங்க முன்னணித் தோழரின் அர்ப்பணிப்புக்கும் பெருமை சேர்க்கிறது. ‘தவிப்பு’ சிறுகதை ஆணவக் கொலை முயற்சியை கண்டிக்கிறது; இதன் முடிவில் மனமாற்றம் ஏற்படும் விதத்திற்கு கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
‘பொருத்தம்’ கதையில் குலத்தாசிமுறையிலிருந்து மீளமுயலும் பெண்ணின் உணர்வுகள் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன. ‘பிழிவு’, குடிகாரத் தந்தையினால் நேரும் சோகத்தைப் பிழிந்து தருகிறது. உண்டியல், ஆக வேண்டியதை, ஜீவகாருண்யம், கடந்து போதல், அமாவாசை போன்ற கதைகள் வாழ்வின் பல பரிமாணங்களை உணர்த்திச் செல்கின்றன ‘பழுது’ கதை மருத்துவமனைகளையும், ‘திசையற்று’ ஒன்றிய அரசின் போலித்தனத்தையும் கிண்டலடிப்பதை ரசிக்கலாம்.
‘வேண்டுகை’யில் ஜாதிமறுப்புத் திருமணத்திற்கு சமூகம் இன்னும் தடையாக இருப்பதை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். முதல் கதையில் புயலில் சாய்ந்துபோன மரங்கள் தந்த சோகமும் அதற்கான தீர்வும் நல்ல பதிவு. ‘புதுப் புது சகுனிகள்’ கதையில் ஆன்லைன் விளையாட்டுகள் உயிரையே பறிக்கவல்லவை என ஆள்வோருக்கு எச்சரிக்கைமணி அடித்துள்ளார். ‘இளம் அதிகாரியின் நாட்குறிப்பு’ குலத்தொழிலை நீடிக்க விரும்பும் சமூகத்திற்கு சரியான சவுக்கடி.
மொத்தத்தில், காலத்திற்கு அவசியமானதும் சமூகமுகத்தின் கண்ணாடி போன்றதுமான கதைகளைத் தந்துள்ள ஆசிரியரின் பொறுப்புணர்வு போற்றுதலுக்குரியது. படிக்க வேண்டிய நூல்.
கலைநிலவன் (தொடர்புக்கு : 8838145949)

Spread the love