May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

காகமும் கழுகும் (குறுங்கதை)

எங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மாமரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி முட்டைகள் இட்டிருந்தது. காகம் இரை தேடப் போயிருந்தபோது கழுகு ஒன்று காக்கைக் கூட்டில் இருந்த காக்கா முட்டைகளை கொத்திக் குடித்துவிட்டு வெளியேறியது.
அந்தத் தருணத்தில் வந்த தாய்க்காகம், கழுகின் பிடறியில் ஏறி கொத்தியது. கழுகு பொருட்படுத்தாமல் காகத்தோடு வானில் பறந்தது. தாய்க்காகம் விரிந்த கழுகின் சிறகை நன்றாகப் பற்றிக்கொண்டு கொத்த கொத்த , கழுகு தொடர்ந்து உயர உயரப் பறந்து காகத்தின் பறப்பு உயரத்தைத் தாண்டியதும் கழுத்தை சிலிர்த்து இறக்கையை உதறியது. இதை எதிர்பாராது அதிர்ந்த காகம் கீழே குற்றுயிராக விழுந்தது.
இதைப் பார்த்ததும் பிற காகங்கள் சுற்றி கூடிக் கரைந்து சொன்னது “நீ ஒத்தையாக போயிருக்கக் கூடாது. நாங்களும் உன்னோடு சேர்ந்து அந்தக் கழுகைத் தாக்கி இருந்தால் கழுகுக் கூட்டத்துக்கே அது பாடமாக இருந்திருக்கும்” என்று புலம்பின.
இந்தக் கதை காகங்களுக்கு மட்டுமா?

ஜனநேசன் (94422 83668)

மாணவர்கள் எதைத் தெரிந்து கொள்ளணும்?
விஞ்ஞானி பெயர், பிறந்த நாள், நாடு, கண்டுபிடிப்புகள், வருடம் ஆகியவற்றை மனப்பாடம் செய்வதும் செய்ய வைப்பதும் அல்ல அறிவியலின் நோக்கம். வகுப்பில் ஆசிரியர் கேட்க, கேட்க டக்கு டக்குன்னு பதில் சொல்ல வைப்பதும் அல்ல அறிவியல்.. கேள்விகள் கேட்க வைப்பதே அறிவியல்.. கேள்விகள் மூலம் மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதே அறிவியல் மனப்பான்மை… ஆக, கேள்விகள் எழ வேண்டும் இல்லையா..!
பள்ளிக் கூடங்கள் பதில் சொல்லி மட்டுமே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு பள்ளியைத் தாண்டிய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது.. அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.
மாணவர்களும் கேள்வி கேட்கலாம்…அவர்களாலும் கேள்வி கேட்க முடியும்ங்கிறத யார் சொல்லித் தரணும்? வேற யாரு?
அதையும் ஆசிரியர்கள்தான் சொல்லித் தரணும்!
தேனி சுந்தர் (94880 11128)

Spread the love