June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

களைப்பில்லா போராட்டத்தால்.. வென்றது கலப்பை..!

மதுக்கூர் இராமலிங்கம்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற கூட்டமைப்பின் கீழ் நடத்திய அகில இந்தியப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அயர்வின்றி போராடினால் எந்த அநீதியையும் வெல்ல முடியும் என்ற புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. தொழிலாளர் இயக்கங்களும் போராட்டத்தில் விவசாயிகளோடு இணைந்து கொண்டது அருமையானதொரு திருப்புமுனை.


‘வேளாண் சட்டங்களில் ஒரு கமாவைக் கூட மாற்ற மாட்டோம். அஞ்சுவதற்கு இது காங்கிரஸ் அரசு அல்ல.. பாஜக அரசு’ என்று சவால் விட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் ஓராண்டு நீடித்த போராட்டத்தின் வெம்மையை தாங்க முடியாமலும், இடைத்தேர்தல்களில் அடுத்தடுத்து கிடைத்த அடிகளின் காரணமாகவும், அடுத்து சந்திக்க வேண்டிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


‘கமா, அரைப்புள்ளி, கால் புள்ளியைத்தான் மாற்ற மாட்டோம் என்று சொன்னேன். சட்டத்தை திரும்பப் பெறமாட்டோம் என்று எப்போதாவது சொன்னேனா?’ என்று இப்போது சென்னை வெள்ளப் படகு புகழ் அண்ணாமலை கேட்கக்கூடும். இனிமேல் அண்ணாமலை ஏதாவது பிரச்சனையில் சவடால் அடிப்பதாக இருந்தால் மோடியிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வது நல்லது.


மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்போது கூட பிரதமர் மோடி விவசாயிகளின் நலன் கருதி தங்களுடைய முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறவில்லை. மாறாக, விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மூன்று சட்டங்களையும் கொண்டு வந்ததாகவும் ஆனால் அதை விவசாயிகளின் ஒரு சிறு பகுதியினர் புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கிறார்.


மோடி அரசின் அர்த்தமற்ற பிடிவாதத்தின் காரணமாக சுமார் 750 விவசாயிகளின் உயிர் பறிபோயிருக்கிறது. அந்த விவசாயிகளின் குடும்பங்களிடம் ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்கக்கூட மனமில்லை நம் மன்னருக்கு. அவர்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால்கூட பரவாயில்லை. போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் அந்நியக் கைக்கூலிகள் என்றும் அவதூறாக வசைமாறி பொழிந்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாகக்கூட அவர் கூறத் தயாராக இல்லை. அவ்வளவு ஏன், ஓராண்டு காலமாக போராடிய விவசாயிகளை அழைத்து ஒரு வார்த்தை பேசக்கூட இவர் தயாராக இல்லை. இவர் பேசவில்லை என்றாலும், உலகின் நீண்ட நெடிய இந்தப் போராட்டத்தைப் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் பேசினார்கள்.


எந்த நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றினார்களோ, அதே நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக இந்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்கும்வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ளப் போவதில்லை, வீடு திரும்பப் போவதில்லை என்று போராடும் விவசாயிகள் கூறுகிறார்கள் என்றால், இவர் மீது அவர்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். கடந்த காலத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியதில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, அவர்களுக்கு இவரது வார்த்தை மீது நம்பிக்கை வரவில்லை.


இந்த மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டும் போதாது. மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் உற்பத்தி, கொள்முதல், விலை என்ற மூன்று அம்சங்களும் ஏக காலத்தில் கவனிக்கப்பட வேண்டும் என்று முன்னர் கூறியிருப்பது மனங்கொள்ளத்தக்கது.


வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல.. கடந்த ஏழு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் விரோதச் சட்டங்களையும் அடுத்தடுத்து நிறைவேற்றியிருக்கிறார் திருவாளர் மோடி. தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டமாக மாற்றியிருக்கிறார். மோட்டார் திருத்தச் சட்டம் என்ற பெயரில் ஒட்டுமொத்த மோட்டார் தொழிலையும் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்க சட்டம் இயற்றி வைத்திருக்கிறார். மறுபுறத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்து கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு தண்ணீர் ஊற்றி உயிர்கொடுத்து வைத்திருப்பதோடு அவ்வப்போது மனித உரிமை ஆர்வலர்கள், சமூகப் போராளிகள் மீது ஏவிவிடவும் செய்கிறார். பீமா கொரேகான் வழக்கு இதற்கு ஒரு உதாரணம். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் காலனியச் சட்டங்களை இன்னமும் பாதுகாத்து வைத்திருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது. ஆனால் பிரதமர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.


நாடாளுமன்றம், மத்திய புலனாய்வு அமைப்புகள், தேர்தல் ஆணையம், நீதித்துறை என ஜனநாயகத்தின் எந்த ஒரு தூணையும் விட்டுவைக்க ஒன்றிய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. சிபிஐ இயக்குநருக்கு விதிகளுக்கு மாறாக பதவி நீட்டிப்பு தரப்படுகிறது. அவர்கள் சொற்படிக் கேட்பவர்களே இந்த ஆட்சியில் தேர்தல் ஆணையர்களாக நீடிக்க முடியும்.


நீதித்துறையிலும், கரிய நிழல் படிந்து வருகிறது, நாங்கள் கூறியபடி தீர்ப்பு எழுதினால் ஆளுநர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என கவுரவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், இடமாற்றம் அல்லது பரலோக பதவிதான் கிடைக்கும் என்று நீதிபதிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளே பத்திரிகையாளர்களைச் சந்தித்து நீதித்துறையில் நடைபெறும் அத்துமீறல்களை வெளிப்படையாக ஊடகவியலாளர்களிடம் கூறிக் குமுறிய காட்சியை நாடு கண்டது. அதில் ஒருவர் பின்னாளில் ‘மனந்திருந்தி’ ஆட்சியாளர்களின் மனமறிந்து தீர்ப்புச் சொல்லத் தொடங்கியதால் மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து கவுரவிக்கப்பட்டார். அந்நிய உளவு மென்பொருளான பெகாசஸ் நீதிபதிகளையும் கண்காணிக்கிறது என்பது எளிதில் கடந்துவிடக்கூடிய செய்தி அல்ல.


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதிகள் இடமாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான் என்று கொலீஜியம் சமாளித்தாலும் 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து நான்கு நீதிபதிகள் மட்டுமே இடம்பெற்றுள்ள மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு சஞ்சீப் பானர்ஜி மாற்றப்பட்டது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை என்று வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பிரிவுபச்சார நிகழ்வில் கூட பங்கேற்காமல் தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் சக நீதிபதிகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘ஆதிக்க நடைமுறையிலிருந்து உங்களை மீட்க முயன்றேன். ஆனால் முடியவில்லை’ என வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் தனது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தார்.


இதே போன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எஸ். சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இவர்கள் இருவரும் சுற்றுச்சூழல், மனித உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் அரசுக்கு எதிரான சில தீர்ப்புகளை வழங்கியதால்தான் இந்த இடமாற்றம் என வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத ஒன்றிய, மாநில அரசுகள் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று சஞ்சீப் பானர்ஜி கேள்வி எழுப்பினார். நீதிபதி சிவஞானம் ஸ்டெர்லைட் ஆலை, எட்டுவழிச்சாலை திட்டம் போன்றவற்றில் அரசுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தவர்.

இதனால்தான் இது வழக்கமான இடமாற்றம் அல்ல, ஒன்றிய அரசின் வழக்கமான பழிவாங்கல் நடவடிக்கையே என்பது நீதிபதிகளின் கருத்தாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜய தஹில் ரமணி, 2019-ம் ஆண்டில் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது அவர் தனது இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். அது ஏற்கப்படாததால், அவர் அந்தப் பதவியை ஏற்காமலேயே ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார். மக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கிற நீதித்துறையிலேயே இத்தகைய அத்துமீறல்கள் இருக்குமானால் மற்ற துறைகளைப் பற்றி என்ன சொல்வது?
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலில் எந்த வரிக்குறைப்பையும் செய்யவில்லை.

ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிய பெரும் சுமையைச் சற்றே குறைத்து அதை ஏமாற்ற முடியும் என்று ஒரு கதை சொல்வார்கள். அது மாதிரி, ஏற்றப்பட்ட கூடுதல் வரியில் அரசு சற்றே குறைத்தது. மக்கள் ஏமாறவில்லை. சரியாகப் புரிந்து கொண்டார்கள். எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் 90 சதவீத வருவாய் ஒன்றிய அரசின் கஜானாவுக்கே போகிறது. மாநில அரசுக்குக் கிடைப்பது சொற்பமானதுதான். அதையும் குறைக்கவேண்டும் என்று பாஜக கூறுவது கேலிக்கூத்து. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பொங்கினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடே நடுங்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் தங்களுடைய அரசுதானே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டதும் ‘தங்கள் கட்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக மாநில அரசு தன்னுடைய வரியை ஏன் குறைக்கவில்லை என்று கேட்டுத்தான் போராடுகிறது’ என்று ஜகா வாங்கினார். ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தால் தன்னுடைய சீட் கிழிந்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
பாஜகவினர் நடத்தும் நாடகங்களில் அவர்கள் கதாநாயகன் வேடம் போட்டாலும் காமெடியாக முடிந்துவிடுவதுதான் பரிதாபமாக இருக்கிறது.


(94422 02726 – [email protected])

Spread the love