September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வி

கொரோனா காலச் சிந்தனைகள் 
முனைவர் ச.சீ. இராஜகோபாலன்

பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் தி.மு.க.ஆட்சிக் கட்டிலில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் அமர்ந்துள்ளது. முந்தைய ஆட்சியில் பேராசிரியர் அன்பழகன் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற மூத்த அமைச்சர். அவர் அமைத்த சமச்சீர் கல்விக் குழுவில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். குழுவின் அறிக்கையை அவரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின் இறுதி செய்யலாமென்று பேராசிரியரிடம் சென்றபோது உங்கள் கருத்தைக் கேட்டால் என்னிடமே கருத்து கேட்கின்றீர்களே என்று சொல்லி குழு தன்னிச்சையாகச் செயல்படுவதை வற்புறுத்தி எந்தக் கருத்தையும் சொல்ல மறுத்துவிட்டார். அனைத்துநிலைக் கல்விக்கும் ஒரே அமைச்சராகச் செயல்பட்டார். புற்றீசல் போல மெட்ரிக் பள்ளிகளுக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி அளித்ததைச் சுட்டி அதை தி.மு.க. அரசு மறு பரீசீலனை செய்ய வேண்டும் என்று நான் சொன்னபோது எங்க ஆட்களே ஒவ்வொருவனும் ஒன்றுக்கிரண்டு என்று மெட்ரிக் பள்ளிகள் நடத்துகின்றான், அவற்றை இரத்து செய்ய இயலாது என்று வெளிப்படையாகக் கூறினார்.

தற்பொழுது பள்ளிக் கல்விக்கு ஒருவரும், உயர்கல்விக்கு ஒருவரும் என இரு கல்வி அமைச்சர்கள் இருக்கின்றார்கள். உயர்கல்விக்கு பொன்முடி அவர்கள் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.. பள்ளிக் கல்விக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ற இளைஞர் பொறுப்பேற்றிருக்கின்றார். அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தோன்றியவர். ஆட்சி மாறும்போது கட்சி மாறும் இக்காலத்தில், தொடர்ந்து ஒரே கட்சியில் தொடர்கின்ற மாண்பு அக்குடும்பத்தின் கொள்கைப் பற்றினை பறைசாற்றுகின்றது. தொடக்கக்கல்விக்கென ஒரு தனி அமைச்சர் வேண்டுமென்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேறாவண்ணம் இருக்கின்றது. அனைவர்க்கும் முன்பருவக் கல்வி அளிக்கப்பட வேண்டுமென்ற சமச்சீர் கல்விக் குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தாது உள்ளது. இந்நிலையை மாற்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய முன்பருவக் கல்வியினை உறுதி செய்திடும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தொடக்க நிலையிலேயே வேறுபாடுகள் உருவாவதை அனுமதிக்கக்கூடாது.

நர்சரிக் கல்விக்கென எஸ்.சி.ஈ.ஆர்,டி வகுத்த கலைத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாத நிலை உள்ளது. தனியார் நர்சரிப் பள்ளிகளில் முன்பருவக் கல்வி நெறிமுறைகளுக்கு மாறாக பாடச்சுமை கூடுதலாக உள்ளது. பள்ளிகளின் மேலாண்மை மாறுபட்டாலும் குழந்தைகளின் கல்வி மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். இதனை உறுதி செய்வது கல்வித்துறையின் தலையாய கடமையாகும்.

தனியார் தொடக்கப்பள்ளிகளில் பிரிவிற்கு ஒரு ஆசிரியர் இருக்க அரசுப் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களே உள்ளனர். ஆனால் வகுப்புவாரியாகப் பாடத்திட்டங்களும், பாடநூல்களும் உள்ளபோது இந்தநடைமுறைகலைத்திட்டத்தின் முழுப் பயன் குழந்தைகளுக்குச் செல்வதைத் தடை செய்கின்றது. ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தவறாகச் செயல்படுத்துவதன் விளைவே இப்பல்வகுப்பு கற்பித்தல். வகுப்புவாரியாக நடைமுறைப்படுத்த வேண்டிய இவ்விகிதம் பள்ளி அளவில் செய்யப்படுவது தவறு. ஒரே ஒரு மாணவர் இருந்தாலும் அவர்க்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். மாநில அளவில் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டை விட அதிகமுள்ளதைக் கொண்டு மானியம் வழங்கும் நடைமுறையை திட்டக்குழு அறிமுகப்படுத்தியது. பள்ளி அளவில் அதைச் செயல்படுத்துவது புரியாமையின் விளைவு.
         கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் ஓராண்டிற்கு மேல் மூடப்பட்டுள்ளன. மாணவர்க்குக் கல்வி இழப்பு பெரும் அளவில் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்பது புதிராகவே உள்ளது. மாணவரது கல்வி இழப்பும் ஒன்றுபோலன்று. வசதி படைத்த மிகச் சிறிய பகுதி மாணவர்க்கு ஏதேனும் சிறிதளவாவது கல்வித் தொடர்பு இருந்து வருகின்றது. கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டவுடன் தொலைக்காட்சி மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. ஆனாலும் பல கிராமப்புற மாணவர்க்கு சிறிதும் கல்வி கிடைக்காதது மட்டுமின்றி கற்றவற்றை முழுமையாக மறந்துவிட்ட நிலையும் ஆங்காங்கே இருக்கின்றது. சில மாணவர்கள் படித்தது போதுமென்று கல்விக்கு முழுக்கப் போட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. உதவிபெறா பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இன்றியோ குறைந்த ஊதியத்திலேயோ வாழ வேண்டியுள்ளது. சில பள்ளிகள் மூடப்ட்டன.

முன்னேறிய நாடுகள் தொலைநிலைக் கல்வி மூலம் கல்வி பெறுவதை உறுதி செய்கின்றன. ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று மணி நேரம் தொலைநிலைக் கல்வி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. மாணவரது அடைவுகளும் தொலைநிலை வழியே கண்டறியப்படுகின்றது. இருந்த போதிலும் மாணவர் கற்றலில் பெருமளவில் குறைபாடு உள்ளதாகவும், மாணவரது கற்றல் ஆர்வம் குறைவாக உள்ளதாகவும் அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

ஆசிரியரில்லா வகுப்புகள் நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. கற்றலில் ஆசிரியரின் நேரிடைப் பங்கேற்பு மிக அவசியமாக இருக்கின்றது. நமது கல்வி அமைப்பில் ஆசிரியர்-மாணவர் உறவு ஆண்டான்-அடிமை உறவு போல் உள்ளதே இந்நிலைக்குக் காரணம். தாமாகக் கற்க விருப்பமில்லாமை காணப்படுகின்றது.
கொரோனா நமது கல்வி முறை பற்றி ஆழமாகச் சிந்திக்கக் கொடுத்த வாய்ப்பினை புதிய அரசாவது நன்கு பரிசீலனை செய்து தகுந்த மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

(044-23620551 – [email protected])

 

என்னது ….
சும்மா சம்பளம் வாங்குறோமா ?…..
கடந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் செய்த பணிகளின் ஒரு பார்வை இது. பொதுமக்கள் அறியாத பக்கங்கள் .
கடந்த 2020 மார்ச் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வந்த பிறகு, பரவலைக் கட்டுப்படுத்த மாணவர்களின் நலன் கருதி எல்லாப் பள்ளிகளும் மூடப்பட்டன என்பதை நாம் அறிவோம். தொடர்ந்து, அந்த வருடக் கோடை விடுமுறை ஊரடங்கிலேயே முடிந்தது. ஜூன் மாதம் 2020 – 2021 கல்வியாண்டிற்கான தொடக்கம் இயல்பாக இல்லாமல் ஜூலையிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் வருகை தந்தனர். மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிகள் திறக்காதது போலவே ஒரு பிம்பம் உருவானது. ஆனால் தமிழகக் கல்வித் துறையின் வழிகாட்டலுக்கு இணங்க, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வருவதும் நிர்வாகம் சார்ந்த பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதும் வெளி உலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மாணவர் சேர்க்கை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஜூலையில் துவங்கி நவம்பர் மாதம் வரையிலும் கூட மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அன்றாடம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தியதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல லட்சங்கள் உயர்ந்தன. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் கைவிடப்பட்ட பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்குள் வருகை புரிய ஆசிரியர்களது தொடர் முயற்சியும் ஒரு காரணம் எனலாம்.

இலவச பொருட்கள், பாடநூல்கள் சத்துணவு பொருட்கள் வழங்குதல்
மூன்று பருவங்களுக்கும் இலவச சீருடை, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து பள்ளிக்குப் பெற்று வந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் பல வழிகளில் தகவல் அனுப்பி பெருந்தொற்று அவர்களை அணுகா வண்ணம் பள்ளிக்கு வரவழைத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்திலும் கூட பிரிட்ஜ் கோர்ஸ் புத்தகங்களையும், பயிற்சிப் புத்தகங்களையும் வழங்கினர். புலம் பெயர்ந்த குடும்பங்களாகிப் போன மாணவர்களை நோய்த் தொற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிக்கு வரவழைத்து மாதா மாதம் அரசு வழங்கும் அரிசி, பருப்பு, முட்டை இவற்றைப் பெற்றுக் கொள்ள வைக்க வேண்டியிருந்தது. இதற்கான பதிவேடுகளையும் ஆசிரியர்கள் பராமரித்து வந்தனர்.

இணைய வழிக் கற்பித்தல்

அரசுப் பள்ளி மாணவர்களிடம் அலைபேசி வசதியோ கணினி வசதியோ இல்லை என்பதற்காக கற்பித்தல் நிகழ்த்தாமல் இருக்க முடியாது. அதனால் அவர்களை வாட்ஸ் அப் எண்களைப் பெற வைத்து குழுக்கள் ஆரம்பித்து ஒவ்வொரு பாட ஆசிரியரும் கற்பித்தலில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், அலைபேசி இல்லாத குழந்தைகளின் அப்பாவோ அம்மாவோ வேலைக்குச் சென்று திரும்பிய பிறகு இரவு 10 மணிக்கு மேல் பாடம் குறித்து ஆசிரியர்களிடம் உரையாடும் அரசுப் பள்ளிக் குழந்தைகள் ஏராளம். வருடம் முழுவதுமே 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையம் வழியே பொதுத் தேர்வுக்கு தயார் செய்தனர் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டால் தாம் பதில் கூற வேண்டும் என்பதற்கிணங்க தலைமை ஆசிரியர்களும் பாட ஆசிரியர்களும் இப்பணியில் விடாமல் இணைந்திருந்தனர்.

ஜனவரி முதல் பள்ளி திறப்பு

2021 ஜனவரி 19 அன்று பள்ளி திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதற்கு ஒரு வாரம் முன்பிருந்து பள்ளி வளாகத் தூய்மை, பெஞ்ச் டெஸ்க் எடுத்துப் போடுவது போன்ற பிற ஏற்பாடுகளைச் செய்ய ஆசிரியர்களே முன் நின்று களப் பணியாற்றினர். பெற்றோர் கருத்துக் கேட்புடன் பள்ளிகளைத் திறக்க முன் தயாரிப்புகளைச் செய்த பிறகு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களை வகுப்புக்கு 20 – 25 என்ற எண்ணிக்கையில் அவர்களை அமர வைத்து தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வசதிகளுடன் அவர்களைக் கற்றல் – கற்பித்தலில் ஈடுபடுத்தி ஏப்ரல் 30 வரை பள்ளிகள் இயங்கின. 10 , 11, 12 ஆம் வகுப்புகள் ஆரம்பித்து வாரம் ஆறு நாட்களும் தொடர்ந்து முகக் கவசம் அணிந்து ஆசிரியர்கள் – மாணவர்கள் நாள் முழுதும் பணியாற்ற வேண்டியிருந்தது. பள்ளியில் அன்றாடம் வகுப்பறையில் மாணவர்கள் யாராவது ஓரிருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் .. அவர்களது வீட்டில் அல்லது பக்கத்து வீட்டில் கொரோனா என்ற செய்தியுடன் ஒவ்வொரு நாளும் நோய்த் தொற்று குறித்த அச்சத்துடனும் மனப் பதட்டத்துடனும்தான் பள்ளிக்கு வந்தனர். அதிலும் இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல் நிலைக் குறைபாடுகளுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் பலர்.

EMIS எனும் கல்வியியல் செய்திகளின் மேலாண்மை தளத்தில் இணைய வழியாக ஆசிரியர், மாணவர் விவரங்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்வது தொடக்கப் பள்ளி முதல் அனைத்துவகைப் பள்ளி ஆசிரியர்களுக்குமான பணியாக இருந்து வருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் புதியதாக சேரும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும், சாதிச் சான்றிதழ் பெற வைப்பது, வங்கிக் கணக்கு எண் தொடங்க வைத்தல், ஆதார் எண் பெற வைத்தல் உள்ளிட்ட ஏராளமான புறப் பணிகளும் செய்து வந்தனர். இன்னும் செய்கின்றனர். அதோடு பெண் குழந்தைகள் கல்வி உதவித் தொகை, சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை , எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கல்வி உதவித் தொகைப் பெற்றுத் தருதல் என அத்தனை பணிகளையும் செய்து முடித்தனர். தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க வைத்து தேர்வையும் நடத்தி முடித்துள்ளனர்.

இது மட்டுமா …முதியோர் கல்வித் திட்டமான `கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இணையவழியில் அரசு நடத்திய ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியை மேற்கொண்டனர். எஸ்.எஸ்.ஏ. மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வு தொடர்பான படம் வரைதல், கட்டுரை எழுதுதல், பள்ளி சுவரில் பெயிண்ட்டால் வண்ண ஓவியங்கள் வரைதல் போன்ற பல போட்டிகளில் வழிகாட்டியாக இருந்து பணியாற்றினர். 2020 எஸ்.சி.ஈ.ஆர்.டி.-யால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சித்தாள் தயாரிப்பு, இணைப்புப் பாடத் தயாரிப்பு, அதனைச் சரிபார்த்தல் எனப் பல்வேறு பணிகள் காத்திருந்தன. 2021-2022 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்துள்ளதும் ஆசிரியர்களால்தான். இப்பணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

கல்வி தொலைக்காட்சி

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் கல்வித் துறையில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி இந்தக் கொரோனா காலத்தில் மிகுந்த வீரியம் பெற்றுள்ளது. மாவட்டம் தோறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மையமாக வைத்து ஆசிரியர்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபட வைப்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு நூற்றுக்கணக்கான சேனல்கள் இருந்தாலும் கல்விக்கென ஒரு சேனல் மற்றும் புது யுகம், ராஜ் டிவி, வசந்த் டிவி, கேப்டன் நியூஸ், மெகா டிவி உள்ளிட்ட 14 வகையான சேனல்களில் கடந்த 8 மாதங்களாகத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கால அட்டவணையிட்டு கற்பித்தல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய ஆட்சியிலும் கல்வி தொலைக்காட்சி தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.

இது மட்டுமன்று, தன்னார்வமாக ஆசிரியர்கள் மாநிலம் முழுவதிலும் செய்தி வரும் பணிகள் பல பரிமாணங்களைக் கொண்டது. ஆம், தமிழகம் முழுக்க இணையவழியில் மாணவர்களைக் கற்றலில் ஈடுபடுத்த வலையொலி வானொலியை உருவாக்கி பாடம் நடத்தும் ஆசிரியர்கள், பல்வேறு அமைப்புகள் நடத்தும் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயாரித்து பங்கெடுக்க வைக்கும் ஆசிரியர்கள், மாணரவது பொருளாதாரத் தேவைகளுக்கு உதவும் ஆசிரியர்களும் பலர் உண்டு. கொரோனா நிதி திரட்டி தேவையானவர்களுக்கு அனுப்புவது, பள்ளி உட்கட்டமைப்பை மாற்றி வண்ணமடித்து மேம்படுத்துவது, வீதி வகுப்பறைகள் என மாணவர் வீடுகள் அமைந்த இடத்திற்கே சென்று பாடம் நடத்துவது, அன்றாடம் அனைத்து குழந்தைகளுக்கும் உணவு ஏற்பாடு செய்வது, உயர்கல்விக்கு அவர்களைத் தயார் செய்ய பல அமைப்புகளுடன் இணைந்து மாணவர்களைப் பயிற்றுவிப்பது, ஓவியப் பயிற்சி, கதை சொல்லுதல் என மாணவர்களைத் தொடர்ந்து தங்கள் தொடர்பிலேயே வைத்துக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் மாணவர்கள் வருகை மட்டும் இல்லாமல் மற்ற அனைத்துப் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆசிரியர்களும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். செயல்பாடுகளில் வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும். ஆனால் வழக்கமான கல்வி ஆண்டுகளைக் காட்டிலும் மனதளவில் அழுத்தத்துடன் அதிகமாகப் பணியாற்றிய ஆசிரியர்களின் உண்மை நிலையை அனைவரும் அறிய வேண்டும்.

ஆசிரியர்கள் யாரும் சும்மா சம்பளம் வாங்கவில்லை மக்களே ….
உமா அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3) –

[email protected] 99769 86098)

Spread the love