June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வி அரசின் பொறுப்பு.. கியூபாவில்!

இரா. நடராசன்
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற கியூபாவைச் சேர்ந்த ஏழெட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அறிவுபூர்வமாகக் கருத்தரங்கில் உரை ஆற்றியது மட்டுமல்லாமல், இனிமையாகப் பாடினார்கள், நளினமாக நடனம் ஆடினார்கள், அற்புதமாகக் கிட்டார் புல்லாங்குழல் வாசித்தார்கள், சிறப்பாக நாடகமாக்கம் குறித்துப் பேசினார்கள். எப்படி இத்தனை திறன்களை வளர்த்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டபோது, கியூபா கல்வி முறைப்படி அங்குள்ள அனைவருக்கும் இத்திறன்கள் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொன்னார்கள்.அதைக் கேட்டதும், வெற்று கட்டளைகளையும் அரசாணைகளையும் நம்பி இருக்கும் நமது ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி எவ்வளவு மேம்படவேண்டி இருக்கிறது என மனம் நொந்தது. பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வதிலிருந்து வகுப்பறை பயிற்று முறை வரை ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழுவாக அமைத்து அனைத்திலும் அவர்களது பங்கேற்பை உறுதி செய்கிறது கியூபா.
யுனெஸ்கோவின் உலகக் கல்வி தர வரிசைப் பட்டியலில் இப்போதெல்லாம் முதல் இரண்டு மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றைப் பிடித்துவிடுகிறது கியூபா. ஆனால் 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் சோஷலிச அரசு பதவி ஏற்றபோது கியூபாவின் எழுத்தறிவு 52 மட்டுமே. அந்த நிலையிலிருந்து முன்னேறி இன்று 99.7 எழுத்தறிவு பெற்ற நாடாகக் கியூபா மிளிர்கிறது. அமெரிக்கா உட்பட 62 வளர்ந்த நாடுகளின் குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 70 புள்ளிகளாக இருக்கும்போதே கியூபா குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 100 புள்ளிகளை எட்டியது.
கல்வி அரசின் பொறுப்பு
கியூபாவில் கல்வி என்பது பெற்றோர்களின் கவலை அல்ல. பிறந்த குழந்தையின் சுகாதாரமும் கல்வியும் அரசின் பொறுப்பு. குழந்தைகள் பள்ளி செல்லும் வயது ஆறு. தாய்மொழியான ஸ்பானிஷில் மட்டுமே கல்வி. தொடக்கப்பள்ளிப் படிப்பு ஆறு ஆண்டுகள். புத்தகம், நோட்டு, வீட்டுப்பாடம், பரீட்சைக்கு இடையிலான போராட்டம் அல்ல அது. இசை, தோட்டம் போடுதல், சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று இவையே தொடக்கக் கல்வியின் அடிப்படை பாடத்திட்டம். மருத்துவக் குழுக்கள் இல்லாத கல்வி நிறுவனங்கள் இல்லை. பள்ளிக்கூடம் போகாத குழந்தை என்று யாரும் கிடையாது.
(9360547808- [email protected])
(நன்றி : தமிழ் இந்து)

Spread the love