September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வி அமைப்பில் ஜனநாயகம்

முனைவர் ச.சீ. இராஜகோபாலன் கல்வி பற்றி பரிந்துரைகள் செய்யவும், முடிவுகளெடுக்கவும் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை பல அமைப்புகள் இருக்கின்றன. பலவும் ஆங்கிலேயர் காலந்தொட்டுச் செயல்படுபவை.
பள்ளிக் கல்வியைப் பொறுத்த வரை இடைநிலைக் கல்வி வாரியம், மேனிலைக் கல்வி வாரியம், மேனிலைத் தேர்வு வாரியம் என்று மூன்று அமைப்புகள் உள்ளன. பதவிசார் உறுப்பினர்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகளைத் தவிர மற்றவர் அனைவரும் அரசால் நியமிக்கப்பட்டவரே. தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்ற நெடு நாளைய கோரிக்கை ஏற்கப்படாமலேயே உள்ளது. உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். இந்த மூன்று அமைப்புகளிலும் நான் உறுப்பினராக இருந்துள்ளேன். பல சமயங்களில் பதவிக் காலம் முடியும் தருவாயில்தான் அவற்றின் கூட்டம் நடைபெறும். முந்தைய மூன்று ஆண்டுகளில் அரசும், இயக்குநர்களும் எடுத்த முடிவுகளின் பட்டியல் கூட்டத்தின் முன் வைக்கப்படும். பெயரளவிற்குக்கூட அவற்றின் ஒப்புதல் கேட்கப்படாது. ஒருமுறை பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக வந்திருந்த ஆட்சிக் குழு உறுப்பினர், இயக்குநர் தலைமையாசிரியர் போலவும், மற்றவர் மாணவர்கள் போலவும் வகுப்பறை போல இருப்பதைச் சுட்டி அனைவரும் சமமானவர்கள் என்பதால் வட்ட வடிவில் அமரும் முறை வரச் செய்தார். இந்த அமைப்புகளே ஒரு கேலிக்கூத்தாக இருக்கும்போது எதற்கு இந்த போலிச் சடங்கு என்று புரியவில்லை. தகவலுக்கு என்று அனுப்பப்பட்ட அறிவிப்பினை அழைப்பு என்று கருதி இயக்குநர் அறைக்குள் கல்விச்செயலர் திடீர் பிரவேசம் செய்தார். இயக்குநர் ஆடிப் போய்விட்டார். தன் நாற்காலியில் உட்காருவதா, அதனைச் செயலருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு உறுப்பினர்களோடு அமர்வதா என்ற குழப்ப மனநிலையில் இருந்தார். செயலர் சிறிது நேரம் உரையாடிவிட்டு கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சென்னை, பாரதியார் பல்கலைக்கழகங்களில் தலைமையாசிரியர்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்விக் குழு மற்றும் செனட் அவைகளில் உறுப்பினராக இருந்துள்ளேன். முதன்முறை உறுப்பினரானபோது சில தனியார் தீர்மானங்களை முன்வைத்ததோடு சிண்டிகேட் முன்வைத்த தீர்மானங்களுக்கு வெட்டுத் தீர்மானங்களும் மொழிந்தேன். எனது அருகில் உட்கார்ந்திருந்த எனது முன்னாள் பேராசிரியர் ‘விவரமில்லாமல் இருக்கிறாயே, கொஞ்ச நேரத்திற்குப் பின் கீழேயிருந்து கை காட்டுவார்கள். உடனே போய் பயணப்படியை வாங்கிக் கொண்டு ஊர் போய்ச் சேர். உன் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாது’ என்றார். முதல் தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டு உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்திற்குள் யாரும் வழிமொழியாததால் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படாது என்று துணைவேந்தர் அறிவித்தார். பரிதாபப்பட்ட ஒரு தமிழ்ப் பேராசிரியர் அடுத்த தீர்மானத்தை வழிமொழிந்தார். என் தீர்மானத்தைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுவதற்குள் துணைவேந்தர் மணியடித்தார். ஆம் என்பதை விட இல்லை என்பது அதிகம் என்று கூறி தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என்று அறிவித்தார். கூட்டம் முடிந்த பின் ஊழியர் ஒருவர் வந்து துணைவேந்தர் உங்களை அழைக்கின்றார் என்றார். நான் அவரது அறையில் நுழைந்தவுடன் ‘எதற்கு இத்தனை தீர்மனங்களை முன்மொழிகிறீர்கள், எனக்குக் கடிதமெழுதினால் போதும் கவனித்துக் கொள்வேன்’ என்றார். விவாதங்களை முற்றிலும் அவர் தவிர்க்க விரும்பினார் என்பது தெளிவாகவே தெரிந்தது. ஆண்டு வரவு செலவு அறிக்கையைப் பார்த்தபோது வைப்புநிதிகள் எல்லாம் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு கர்நாடகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு தனியார் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதைச் சுட்டி வினா எழுப்பினேன். அவர்கள் அரை விழுக்காடு அதிகம் வட்டி தருகிறார்கள் என்று பதிவாளர் பதில் சொன்னார். எஸ்.பி.ஐ. அதே வட்டியைக் கொடுக்குமா என்று கேட்டீர்களா, தமிழ்நாட்டில் உள்ள பிற வங்கிகளைக் கேட்டீர்களா என்று கேட்டேன். அக்கூட்டத்திற்கு வந்திருந்த பிளிட்ஸ் இதழ் நிருபர் சிறிது புலனாய்வு செய்து அவ்வங்கி பதிவாளரது உறவினரது தொழிலிற்குக் கடன் தந்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார். எனக்கு கூட்ட நடவடிக்கைகளுக்குப் பதில் மலத்தைக் கட்டி அனுப்பிய பெருமை(?!) பதிவாளருக்கு இருந்தது. கல்வி அமைப்பில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்று புரிந்துகொண்டேன். (044-23620551 – [email protected])

பல்கலைக்கழகங்களில் இருந்தது இந்திய ஜனநாயகப் பானைக்கு ஒரு சோறுதான். முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நம் நாட்டில் ஜனநாயகப் பாதையை சரியாகவே தொடங்கிவைத்தார். அவருமே கூட, இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு 1959-ம் ஆண்டில் கேரள நம்பூதிரிபாத் அரசைக் கலைத்தது அவரது ஆட்சிக்கு ஒரு கரும்புள்ளியாகவே அமைந்தது. பிறகு எத்தனையோ ஆட்சிக் கலைப்புகள்.. ஜனநாயக அத்துமீறல்கள்.. அவசரநிலைக் பிரகடனம்… தற்போது மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலை… இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் மலர நாம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ, தெரியவில்லை..

கே,ராஜூ, ஆசிரியர்

Spread the love