September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் உரை
இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் தென் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மார்ச் 11 வெள்ளியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை :
பள்ளிக் கல்வி முடித்து, உயர் கல்விக்கு பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு; ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது. பெண் கல்வியிலும் தமிழ்நாடு அரசு பெண்களுக்கென்று தனிக் கல்லூரிகள், இருபாலர் கல்லூரிக்கு அனுமதி, பெண்களுக்கென்று தனிப் பல்கலைக்கழகம், பெண்களுக்கு உதவித்தொகை, அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ச்சி பெற பயிற்சி தரும் மையங்கள் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
ஆனாலும் கூட, இந்திய உயர்கல்வியின் முக்கியமான குறிக்கோளான அனைவருக்கும் வேலை தரும் கல்வி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை உங்களுக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். திறன் சார்ந்த கல்வியும் பயிற்சியும் பாடத்திட்டங்களில் இருப்பது அவசியம்.
துணைவேந்தர்கள்தான் அறிவியல்பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும். மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம்.

Spread the love