September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கல்வித்துறையில் கேரள சாதனை

கே. பாலபாரதி
1995-களில் கேரளாவின் அரசுப் பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணியிழந்தார்கள்.
காரணம், எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன்வரவில்லை. வருடம் தோறும் குறைந்து கொண்டே வந்த மாணவர்களின் எண்ணிக்கை பல பள்ளிகளை இழுத்து மூடச் செய்தது. இதனால் ஆசிரியர்கள் வேலையிழக்கவும் நேரிட்டது.
இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி நிற்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் இரவீந்திரன் தலைமையில் பொதுக்கல்விக்கு புத்துணர்ச்சியூட்டும் திட்டத்தைத் தொடங்கினார்கள்.
இரண்டு மாற்றங்கள் முன்வைக்கப்பட்டன.
கல்வித்தரத்தை மாற்றி அமைப்பது… கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பை தரமாக்குவது!
இவ்விரண்டு இலட்சியங்களையும் வென்றெடுக்க மக்களிடத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். நிதித் திரட்டலுக்கும் திட்டமிட்டார்கள். பல்வேறு விசேட முயற்சிகளையும் முன்னெடுத்தார்கள்.
அதன் விளைவாக கட்டட வசதிகள், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தரமான உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், மடிக்கணினிகள், மல்டி ப்ரொஜெக்டர் திரைகள், எல்ஈடி தொலைக்காட்சிகள், ஒலிபெருக்கிகள், அச்சுப்பொறிகள், தரைவழி ஃபோன் வசதிகள், தொடுதிரை பலகைகள், வைஃபை வசதிகள், நவீன கேமராக்கள், இணைய கேமராக்கள், மல்டி பிரிண்ட்டர்கள், அதிவேகம் கொண்ட இணையதள வசதிகள் ஆகியவற்றை 42000 வகுப்பறைகளில் ஏற்படுத்தினார்கள். 1000 பள்ளிகளை சர்வ தேசத் தரத்திற்கு உயர்த்தினார்கள்.
நவீன தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் பாடத்திட்டம், கம்ப்யூட்டர் பயிற்சி, பள்ளிகளில் ஆட்டிசம் பூங்கா, நவீனப்படுத்தப்பட்ட கழிவறைகள், பாதுகாப்புடன் கூடிய சுற்றுச்சூழல், தொழில்நுட்பத்துடன் கூடிய மேற்கண்ட உபகரணங்கள் இவையாவும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசால் சாத்தியமாகியுள்ளது. இது சர்வதேசத் தரத்திற்கு இணையானதாகும்.
மேலும் மாணவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி பால், முட்டை, கைத்தறி சீருடைகளும் வழங்கப்படுகின்றன.
ஒரு வகுப்பை முடிக்கும் தருவாயில் அடுத்த வகுப்பிற்கான புத்தகங்களை விடுமுறை காலத்திலேயே வழங்குகிறார்கள்.
இதன் விளைவாக, தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்ற குழந்தைகளும் பெற்றோர்களும், அரசுப் பள்ளிகளை நோக்கிவரத் துவங்கினார்கள்.
கல்வித்துறையில் இது ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது.
2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 1.63 இலட்சம் ஆக இருந்தது. தற்போது 6.8 இலட்சம் ஆக அதன் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
வேலையிழந்த 4000 ஆசிரியர் களும் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் 1506 புதிய ஆசிரியர்கள் நியமனமும் நடைபெற்றிருக்கிறது.
அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள், முன்னாள் மாணவர்கள், அவர்களது உறவினர் கள், வெளிநாட்டில் வாழும் கேரள மக்கள் என பரந்து விரிந்த ஒற்றுமையை கட்டியெழுப்பி பொதுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் மகத்தான சாதனை புரிந்திருக்கிறார்கள்.
(கட்டுரையாளர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்)

Spread the love