September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கலப்பு கற்றல்

பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு
“கலப்பு கற்றல் (Blended Learning) ஆசிரியரின் பங்கை அறிவு வழங்குபவர் என்பதிலிருந்து பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி என்ற நிலைக்கு மாற்றுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு கற்பித்தலில் ஆசிரியர்கள் செயலற்றவர்களாக அல்லது குறைந்த பங்கை வகிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, ‘கலப்பு கற்றல்’ மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றலில் இன்னும் ஆழமான செல்வாக்கையும், விளைவையும் ஏற்படுத்த முடியும். பாரம்பரியமாக வகுப்பறை சார்ந்த அறிவுறுத்தல்கள் பெரும்பாலும் ஆசிரியரை மையமாகக் கொண்டு, பெரும்பாலும் மேலிருந்து-கீழ் என்பதாக இருந்து வருகிறது. அதற்கு மாறாக ‘கலப்பு கற்றல்’ மாணவர்களை மையமாகக் கொண்டதாக, கீழிருந்து மேல் என்பதாக, தனிப்பட்டு ஒவ்வொருவருக்குமானதாக இருக்கும். இந்த புதிய கற்றல் இயக்கத்தின் பெரும்பகுதி ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ளக் கூடியதாக, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றலாக, தனிப்பட்டவர்களின் வேகத்திற்கேற்றதாக, தனியுரிமையை வழங்கிடும். மாணவர்களைத் தொடர்ச்சியாக ஈடுபடவும் ஊக்கமாகவும் வைத்திருக்கின்ற இணையவழி வழிமுறைக்கும், கற்றல் அனுபவத்தைத் தனிப்பயனாக்குகிற, ஆசிரியர்களால் மட்டுமே வழங்க முடிகின்ற கருணை, அக்கறையுள்ள வழிகாட்டுதல் போன்ற கூறுகளைச் சேர்ப்பதாக இருக்கின்ற கற்பித்தல் முறைக்கும் இடையில் ‘கலப்பு கற்றல்’ பொருத்தமான சமநிலையை வழங்குகிறது.”
மேற்கண்ட பத்தி ‘கலப்பு கற்றல்’ பற்றிய பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. எனது புரிதலில் இது முழுக்க முழுக்க முரண்பாடுகளின் தொகுப்பாகவே இருக்கிறது. கல்வி இப்போது எவ்வாறு குழப்பப்படுகிறது, தவறாக வழிநடத்தப்படுகிறது என்பதை விளக்குவதாகவே இருக்கிறது.
இந்த கருத்துக் குறிப்பு கல்வியை ‘பண்டம்-நுகர்வோர்’ என்ற கண்ணாடியின் மூலமாக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஒருவருக்குக் கிடைக்கும் பொருள் என்பதாகவே பார்க்கிறது.
இப்போது உங்களுக்குப் பிடிக்கவில்லையா..அதை விட்டுவிட்டு உங்கள் அகடெமிக் வங்கிக் கணக்கில் (Academic Bank Credit) வைத்துக் கொண்டு நீங்கள் விரும்புகிற இடத்திற்குச் சென்று கொள்ளலாம் என்று யுஜிசி ஆவணம் சொல்கிறது. மாணவர்களை எப்போதும் அலைபாயும் மனதுடன் இருப்பவர்களாகவே அது முன்வைக்கிறது. இதுதான் உயர்கல்வியின் அணுகுமுறையாக இருக்கப் போகிறது என்றால், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த எவராலும் எப்போதாவது எந்தவொரு பட்டத்தையாவது முடித்து விட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
ஜாமியா மிலியா, ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் வெறும் செங்கல், மண்ணால் ஆன கட்டமைப்புகள் அல்ல; அவை வாழ்க்கையின் தளமாக இருக்கின்றன. அவற்றைப் போன்ற வளாகங்களில் இருக்கின்ற மாணவர்களிடம் விடுதலையின் ஆன்மா, ஒற்றுமை, மனித நேயம் மீதான நேசிப்பு, போராடுகின்ற வெகுஜனங்கள் மீதான கருணை ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன, தூண்டப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என்ற கருத்தாக்கத்தையே முற்றிலுமாக நிராகரிக்கும் இந்த கருத்துக் குறிப்பு இந்தக் கல்வி வளாகங்களை நுகர்வோர் தங்களுடைய நேரத்தை இணையவழியிலும், நேரடியாகவும் கல்வியை வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய கல்வி விற்பனைக்கான இடங்களாக மட்டுமே கருதுகிறது.
‘கலப்பு கற்றல்’ பற்றிய ஒட்டுமொத்த கருத்துக் குறிப்பும் தனிப்பட்ட நுகர்வோரின் தொழில் முன்னேற்றத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள முறையின் மூலம் முன்னேற்றங்கள் சாத்தியமாகலாம். ஆனால் அவை மனித வளர்ச்சி மற்றும் சமூக விடுதலைக்கான கல்வித் திறனை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
இந்த கருத்துக் குறிப்பின் அகராதியில் சமூக நீதி என்ற சொற்றொடருக்கு அல்லது இந்திய அரசியலமைப்பு குறித்த பார்வைக்கான இடமே காணப்படவில்லை.
அறிவிற்குப் பதிலாக செல்வத்தின் மீதான ஆசை குறித்தே அது பேசுகிறது, அறிவுசார் வளர்ச்சிக்குப் பதிலாக அந்த நேரத்திற்கான ஆர்வத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. சமூகத் தேவைகளுக்குப் பதிலாக தனிநபரின் விருப்பத்தைப் பற்றி மட்டுமே அது பேசுகிறது. மிகவும் வெறுக்கத்தக்க, மனிதாபிமானமற்ற இந்த கருத்துக் குறிப்பு கல்விக்கான நோக்கமாக இருக்கும் வாழ்க்கையின் நல்லொழுக்கத்திலிருந்து விலகி வெகு தொலைவிலே நிற்கிறது.
இந்தியாவில் நிலவும் சமூக ஒடுக்குமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பிராந்திய ஏற்றத்தாழ்வு பற்றி இந்த கருத்துக் குறிப்புக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பல நூற்றாண்டுகளாக கல்வியை இழந்து நிற்கின்ற குழந்தைகள், உயர்கல்வி நிறுவனங்களைச் சென்றடைவதற்காக எவ்வாறு போராடி வருகின்றனர் என்பதுவும் அதற்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தக் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அவர்களுடைய சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவும் ஊக்கமும் தேவை என்ற சிந்தனைக்கும் அதனிடம் இடம் இல்லை.
கருத்துக் குறிப்பில் முன்மொழியப்பட்டுள்ளவாறு கலப்பு கற்றலைச் செயல்படுத்துவதற்கு முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள டிஜிட்டல் இடைவெளி, தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பற்றாக்குறை ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இணையவழி மற்றும் நேரடி வகுப்பு முறைக்கு அப்பால், இந்த கருத்துக் குறிப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ‘தகுதியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்’ என்ற சிந்தனையைப் புரிந்துகொண்டு நாம் விவாதிக்க வேண்டும்.
சந்தையின் பேராசை கொண்டு வழிநடத்தப்பட்டு அனைவரும் அனைத்தையும் கற்றுக் கொள்ளத் தேவையில்லை என்ற தத்துவத்துடன் இயைந்து நிற்கின்ற இந்த ஆவணம் இந்திய அரசியலமைப்பின் பார்வைக்கு முற்றிலும் நேர்மாறானதாக இருக்கிறது. மனு மற்றும் சந்தையின் பார்வையுடன் முழுக்க உடன்பாடு கொண்டதாக இருக்கிறது.
இன்று வரையிலும் கல்வி என்பதாகக் கருதப்பட்டு வருகின்ற – புத்தரின் சமூக உரையாடலின் மூலமான கற்றல், ஜான் டூவியின் விமர்சன சிந்தனை, பாவ்லோ ஃப்ரையரின் விடுதலைக்கான விமர்சன உரையாடல், ஜோதி ராவ் பூலேவின் சமூக அடுக்கு முறையை உடைப்பது-போன்ற அனைத்தையும் இந்த ஆவணம் அர்த்தமற்றதாக்கியுள்ளது.
கருத்துக் குறிப்பை பலமுறை நான் வாசித்தேன். ஆனாலும் இது வரையிலும் நான் உணர்ந்துள்ள கல்வி தொடர்பான எதையும் என்னால் அதில் காண முடியவில்லை.
([email protected] – 94456 83660)
தமிழில்: : பேராசிரியர் தா.சந்திரகுரு

Spread the love