September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கற்றல் இடைவெளி ஏன் ? கொரோனா மட்டுமே காரணமா?

உமா


பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை குறித்து தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் அதை வலுப்படுத்துவதற்கான சூழலோ நாம் விரும்பும்படி இல்லை. கடந்த மாத புதிய ஆசிரியன் இதழில் தமிழகப் பள்ளிக் கல்வியின் எதார்த்த நிலை குறித்து விரிவாகக் குறிப்பிட்டு இருந்தோம். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் நேரடியாக ஈடுபடுவதில் உள்ள சிக்கல்களைக் கடந்து பதிவேடுகள் தயாரிக்கும் எந்திரமாகவே மாறிப் போனதற்கான சூழல் மிக முக்கியமானது.


பள்ளிகள் திறப்பு
கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நிலை மாறுகிறது. வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள், அங்கன்வாடிப் பள்ளிகள் உட்பட எல்லா பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் தருணத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும்.


கற்றல் இடைவெளி
சமீப நாட்களில் தமிழக அரசு குழந்தைகளின் கற்றல் இடைவெளி குறித்து பேசுவதோடு புதிய திட்டம் ஒன்றையும் செயலாக்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1 – 8 வகுப்புகள் படிக்கும் குழந்தைகள் பள்ளிகளுடன் தொடர்பு இன்றி கற்றலில் ஈடுபடாததால் கற்றல் இடைவெளி உருவாகி இருப்பதாகவும், அதை சமன் செய்ய தன்னார்வலர்களை வைத்து மாலை நேரங்களில் நேரடியாக வீட்டிற்குச் சென்று கற்பிக்கும் திட்டத்தை அக்டோபர் 18-ல் துவக்கியுள்ளனர். அதற்கு 200 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளனர். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தான் இந்த ஏற்பாடு. தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு அல்ல.

இதன் விளைவுகளை ஆராய்ந்தால் கட்டுரை வேறு திசையில் பயணிக்கும். தன்னார்வலர்களைக் கொண்டு வருதல் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியமான ஒரு கூறு. தன்னார்வலர்கள் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைக் கற்பித்தல் பணியில் கொணர்ந்து இந்துராஷ்டிரா திட்டத்தை அமுல்படுத்த ஒன்றிய அரசு ஈடுபடும் என்பதால் கல்வியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏனெனில் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் தற்போதைய மாநில அரசு இருக்கிறது. எனவே இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு புதிய திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்.


கொரோனா கால ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால்தான் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதே நம் பதில். பள்ளிகள் திறந்திருந்தபோதே அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் கற்றல் இடைவெளியுடன்தான் இருந்து வந்தனர். இந்த கால கட்டத்தில் மிக அதிகமாகியுள்ளது என்று வேண்டுமானால் கூறலாம்.


கற்றல் இடைவெளிக்கான காரணங்கள்
தமிழகப் பள்ளிகளில் பல்லாண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. குறிப்பாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள் என்ற நிலையில்தான் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் கிடையாது.
அது மட்டுமா… தமிழ்வழிக் கல்வி கைவிடப்பட்டு பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் கையிலெடுத்துள்ளன. தனியார் பள்ளிகளைப் போல இந்த மாற்றம் நடைபெற்றிருந்தாலும், ஆங்கில வழிக் கற்பித்தலுக்கான முறைகள் அரசுப் பள்ளிகளில் மேம்படுத்தப்படவில்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகள் முழுமையான வாசிப்புத் திறன் பெற்றிருக்கவில்லை.


பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமை பெறாத பள்ளிகளாக இருப்பதால் அந்த ஓராசிரியரும், ஈராசிரியரும் துறையின் ஆணைகளுக்கு இணங்க, பள்ளிக் கட்டமைப்புக்கு பொருள் தேடி புரவலரைக் கண்டடைவது உள்பட பல்வேறுபட்ட கற்பித்தல் சாராத பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குழந்தைகளின் கற்றலில் முழு நேரமும் கவனம் செலுத்த அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வகையில் குழந்தைகள் கற்றல் இடைவெளியுடனேயே வகுப்புகளைக் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது பல வருடங்களாக நடைபெற்று வரும் விதிமீறல்.


அடுத்து தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் குழந்தைகளை மதிப்பீடு செய்வதாக பதிவேடுகள் மட்டுமே இங்கு தயார் செய்யப்படுகின்றன. கேள்வி கேட்கும் இடத்தில் குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் இல்லை. ஆகவே தங்கள் பணியின் அறத்தை மறந்து அதிகாரிகளின் ஆணைகளுக்குத் தலை வணங்கி அவர்களைத் திருப்திபடுத்தும் நோக்கில் இயங்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நிறைந்ததாகவே அரசுப் பள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன.


இப்படி ஏராளமான காரணங்களை கற்றல் இடைவெளிக்கு அடிப்படையாகக் குறிப்பிடலாம்.
இவற்றையெல்லாம் மீறி பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களின் சுயமுயற்சியின் காரணமாக கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெற்று வருவதையும் நாம் காணத் தவறிவிடக் கூடாது.
அரசின் நோக்கத்திற்கு ஆசிரியர்கள் எப்போதும் துணையிருப்பார்கள். அந்த வகையில், பள்ளி திறந்த பிறகு இயல்பு நிலைக்கு மாணவர்களைக் கொண்டு வருவது அவசியம். பள்ளிக்கு வரும் மாணவர்கள், வராத மாணவர்களைக் கணக்கெடுத்து, பள்ளிக்கு வராதவர் குறித்து விபரங்கள் சேர்க்கலாம். பள்ளிக்கு வந்த மாணவர்கள் வழியாக, அந்தந்த வராத மாணவர்கள் வாழும் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்றும் தகவல் சேகரித்து , வராத மாணவர்களை முதலில் பள்ளிக்குள் அழைத்து வர வேண்டும். வர முடியாத சூழலில் வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்து இருப்பின் அவர்களது கணக்கீடுகளையும் எடுத்து அரசுக்குத் தர வேண்டும். அவர்களை இடைநிற்றலிலிருந்து மீட்கும் வழியைக் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்.


குழந்தைகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால், அவர்களது வாசித்தல் திறன், எண்ணறிவு, எழுத்தறிவு ஆகியவற்றில் அவர்களின் நிலை குறித்து ஆசிரியர்கள் ஆழ்ந்து கவனித்து எவற்றில் கவனம் தேவையோ அவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். உளவியல் அணுகுமுறையைக் கையாண்டு குழந்தைகளைக் கற்றல் இடைவெளியிலிருந்து மீட்கலாம்.


கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்களிடம் பெறப்பட்ட புள்ளி விபரங்களைப் போலவே, நவம்பர் மாதம் பள்ளிக்கு மாணவர்கள் வந்த பிறகும் தொடர்ந்து பதிவேடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் நடைமுறைகள் தொடருமானால், மாணவர்களின் கற்றலும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் பெருமளவு பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. மேற்சொன்னவற்றை எல்லாம் சீர்படுத்தும் நடவடிக்கைகளை ஆசிரியர்களுடன் இணைந்து அரசு செய்ய முன் வருவதே பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் உருவாக வழிகோலும்
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு.

Spread the love