அடுத்த ஒன்றரை ஆண்டுகளில்
பத்து இலட்சம் பேருக்கு
வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற
பாரதப் பிரதமரின் வாக்குறுதி கேட்டு,
உதடு பிதுக்கிச் சிரிக்கிறது…
எட்டாண்டுகளுக்கு முன்பு
2 கோடி பேருக்கு
வேலைவாய்ப்பு அளிக்கப்படுமென்கிற
மறந்தேபோன பொய் வாக்குறுதி.
கள்ளப் பணத்தை ஒழிப்போமெனும்
முழக்கத்தைக் கேட்டு,
தலையிலடித்துக் கொள்கிறது…
கடந்த 2 ஆண்டுகளில்
இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம்
இரு மடங்கு அதிகரிப்பு எனும்
ரிசர்வ் வங்கியின் அறிக்கை.
மக்கள் ஒற்றுமையை,
காலத்தின் புதிய சிந்தனைகளை,
இளைய மனங்களில் நம்பிக்கைகளை
ஒன்றாக்கிக்கட்ட வேண்டியவர்கள்
எதிர்க்குரலின் கழுத்தை நெறித்தபடி,
புல்டோசர் கொண்டு
உ.பி.யின் பிரயாக்ராஜ் பகுதியில்
கண்களை மூடிக்கொண்டு இடிக்கிறார்கள்…
அஃப்ரீன் பாத்திமாவின் வீட்டை.
கட்டத் தெரியாத
இறுகிய மனம் கொண்டவர்களுக்கு
இடிப்பதைத் தவிர வேறென்ன தெரியும்..?
- மு.முருகேஷ் (94443 60421)
More Stories
தொடரும் தேடல்…
என்னத்தைச் சொல்ல..?
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்