May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கட்டுரை

வரையாடுகளின் சொர்க்கபூமி
சிதம்பரம் இரவிச்சந்திரன்
மூணாரில் இருந்து 17 கி.மீ தொலைவில் இன அழிவின் ஆபத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எரவிகுளம் தேசீய உயிரியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சரிவில், 2000 மீ உயரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. மிக உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா முன்பு ஹேமில்டன் பீடபூமி என்று அழைக்கப்பட்டது. 1905-ல் மலைப்பகுதி விளையாட்டுச் சங்கம் இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்றியது. 1971-ல் கேரள அரசு இதனைத் தன் பொறுப்பில் ஏற்று, வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது. 1975-ல் தேசீயப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1978-ல் எரவிகுளம் தேசீயப் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 97 ச.கி.மீ. தென்னிந்தியாவில் மிக உயரமான ஆனைமுடி சிகரம் இரவிகுளம் தேசீயப் பூங்காவில் அமைந்துள்ளது. புல்வெளிகள், குத்துச்செடிகள், சோலைகள் என்று இங்கு காணப்படும் வேறுபட்ட இயற்கை அமைப்பு உள்ள பகுதிகளில் பல அரிய வகை தாவரங்கள் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்கு உட்பட பல குரங்கு இனங்கள், மான்கள், காட்டு எருமை போன்ற பல்வேறு விலங்குகள் இங்கு வாழ்கின்றன. அலங்கார ம-லர்ச்செடிகள், காட்டு பால்சம் செடி இனங்களில் வேறெங்கும் காணப்படாத அரிய பல இனங்கள் இங்கு காணப்படுகின்றன. அதிக பாதுகாப்புடன் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த உயிரியல் பூங்கா மையப்பகுதி, எல்லைப் பகுதி மற்றும் சுற்றுலாப் பகுதி.. என மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பகுதியான இராஜமலைக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அழிந்துவரும் வரையாடுகளை இங்கு மிக அருகில் இருந்து காணமுடியும்.
(73390 [email protected])

Spread the love