September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கடுப்பேத்த வரோம் பராக்..பராக்!

“இது எங்கள் இந்தியா” என்ற யூடியூப் சானலில் தலைவர்கள் குரலில் பேசி உங்களை கடுப்பேத்த வருகிறார்கள் நமது அசத்தல் மன்னர்கள்…

# # முதலில் வருகிறார் கோவை மணா..
கோவை மணா: வணக்கம் ரசிகப் பெருமக்களே! நான் நமது பிரதமர் நரேந்திர மோடி மாதிரி பேசி அசத்த வந்திருக்கேன்.
• சமீபத்தில் நான்கு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் எங்களுடைய எல்லாவிதமான தகிடுதத்தங்களையும் மீறி எப்படியோ ஜெயிச்சுட்டாங்க… ஆனா அதை அப்படியே விட்டுற முடியுமா? முடியாது. இன்னும் என்னென்ன மாதிரியா மக்களையும் எதிர்க்கட்சிகளையும் பிரிக்க முடியும்னு அமித் ஷாவும் நானும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்க்கப் போறோம்…
• எதிர்க்கட்சிகள் எங்க மேலே என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறாங்களோ, அதே குற்றச்சாட்டுகளை இனி அவங்க மேலே நான் வைக்கப் போறேன். “எதிர்க் கட்சிகள மாதிரி மக்களை சாதி, மதரீதியாப் பிரிக்கறவன் நான் இல்லை. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்”- அப்படின்னு பேசி அசத்தறதா இருக்கேன்.. நாராயண குரு தெரியுமா? தெரியாதுல்ல? நான் சொல்றேன்…
• அவர் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய கேரளாவின் ஆன்மிக குரு. அவரது போதனைகளைப் பின்பற்றும் இந்தியாவில் உலகின் எந்த சக்தியாலும் வேறுபாடுகளை ஏற்படுத்த முடியாது.. பிரிவினையை ஏற்படுத்த முடியாது. ஆனா நாங்க ஏற்படுத்தறமே அது எப்படின்னு கேக்கறீங்களா? எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கு. “நாங்க சொல்றதுக்கும் செய்யறதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது”-ங்கறதுதான் அது! உதாரணமா “கொரோனாவால ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி நேரத்தில அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி முறையைப் பின்பற்றி செயல்பட வேண்டும்”-னு நான் பேசுவேன். நீங்க அசந்தே போயிடுவீங்க…
• தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்னு நான் பேசுவேன்.. இனிமே இந்தியாவில எல்லாரும் ஆங்கிலத்தை ஒதுக்கி வச்சுட்டு இந்தியிலேதான் பேசணும்னு அமித் ஷா பேசுவாரு.. இந்தியிலே பேச முடியாட்டா இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எந்த நாட்டுக்காவது போய்த் தொலைங்கன்னு உ.பி. அமைச்சர் ஒருத்தரு பேசுவாரு.. குழம்பிப் போறீங்கல்ல?.. எங்களுக்கு அதுதானே வேணும்?

# # அடுத்து வருகிறார் ஈரோடு மானு..
வணக்கம் நண்பர்களே.. நான் அமித் ஷா மாதிரிப் பேசி அசத்த வந்திருக்கேன்.
• ராமநவமி ஊர்வலம் நடத்தப் போனவங்க அதை நடத்தாம, மசூதியை நோக்கிப் போனது ஏன்னு நெனப்பீங்க.. இன்னும் எத்தனை மசூதிகளை இடிக்கணும்னு நாங்க கணக்கு எடுக்க வேண்டாமா? இத்தனை நாளா ராமரை வச்சு எங்க வியாபாரத்தைக் கவனிச்சிட்டிருந்தோம். இனிமே கொஞ்ச நாளைக்கு அனுமன் பக்கம் எங்க கவனத்தைத் திருப்பலாம்னு முடிவு பண்ணிருக்கோம். நாட்டின் நான்கு திசைகளிலும் 108 அடி உயரத்தில பிரம்மாண்டமான அனுமன் சிலைகளை எழுப்பப் போறோம். அனுமன் ஜெயந்தியை திருவிழாவாக் கொண்டாடப் போறோம். திருவிழான்னா… எங்களுக்குத் திருவிழா, முஸ்லிம்களுக்கு திருகுவிழா!
• வழக்கமா குடியுரிமைச் சட்டம், மாட்டிறைச்சி சாப்பிடத் தடை, பாலியல் தாக்குதல்கள், மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சுகள், ஹிஜாப் அணியத் தடை போன்ற ஆயுதங்களைத்தான் முஸ்லிம்களுக்கு எதிரா இதுவரை பயன்படுத்திட்டு வந்திருக்கோம்.. இப்ப நாங்க ஆட்சியில இருக்கற சில மாநிலங்கள்ல ஒரு புதியவகைத் தாக்குதலை அமல்படுத்த ஆரமிச்சிருக்கோம். ஜஹாங்கிர்புரியிலே அதைத்தான் செஞ்சோம். புல்டோசர்களை வைத்து அவர்களது வீடுகளையும் கடைகளையும் இடித்து நொறுக்கி அவர்களை நடுரோட்டில் நிறுத்தினோம்.. இனி புல்டோசர் தாக்குதல்களை நீங்க அடிக்கடி பார்க்கலாம்…
• பசி, பட்டினிக் குறியீட்டில இந்தியா முன்னேறி வருகிறது.. அதாவது இந்தியாவுக்கான இடம் சரிந்து வருகிறது. 94-வது இடத்திலிருந்து 101-ம் இடத்திற்கு வந்திருக்கோம். வறுமைக்கெதிராக போர் தொடுப்போம்னு தேர்தல் நேரத்திலே பேசறீங்களே, பட்டினிக் கொடுமையை நீங்க எப்ப ஒழிக்கப் போறீங்கன்னு கேக்கறீங்க.. வறுமையை ஒழிக்க தானியங்களை கொரோனாவினால பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணப் போறோம். நம்ம ஜனங்க பட்டினி கிடப்பாங்களேன்னு கேப்பீங்க. அதைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லே. உலக நாடுகள்லாம் மோடிஜீ-யைக் கொண்டாடணும். அது மட்டும்தான் எங்க கவலை…

# # இன்னிக்கு இறுதியா வருகிறார் மைக்கேல் ஆஸ்டின்…
வணக்கம் நண்பர்களே.. நான் அண்ணாமலை மாதிரி பேசி அசத்த வந்திருக்கேன்.
• கடந்த எட்டு ஆண்டுகள்ல பெட்ரோல் மீதான வரி 200 சதவீதம், டீசல் மீதான வரி 500 சதவீதம் நாங்க உயர்த்தியிருக்கோம். 143 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருக்கோம். அதைப் பத்தியெல்லாம் யாரும் எங்களைக் கேள்வி கேட்கக் கூடாது, ஆனா ஸ்டாலின் எப்படி அவர் கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோல்-டீசல் வரியைக் குறைக்காம இருக்கார்னு கேட்டு தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்… இனிமேயும் நடத்துவோம்..
• இனி துணைவேந்தர்களை ஸ்டாலினே நியமிக்கப் போறாராம். நாங்க எத்தனை மாநிலங்கள்ல ஆட்சியிலே இருக்கோம்கறது மறந்துட்டு இப்படியொரு முடிவை அவர் எடுத்துருக்காரு. அதற்கான விளைவுகளை அவர் சீக்கிரமே சந்திப்பார்னு நான் எச்சரிக்கை விடுக்கறேன்…
• எங்க தலைவர் மோகன் பகவத் இந்து ராஷ்ட்ராவை நோக்கிய பயணத்தை ஆரம்பிச்சிருக்காரு. இன்னும் 15 ஆண்டுகளுக்குள்ளே இந்தியா இந்து ராஷ்ட்ராவா மாறிடும். எங்க குருஜி போற வண்டியிலே ஆச்சிலரேட்டர் மட்டும்தான் இருக்கும். பிரேக் இருக்காது. இதை நான் இங்கே சொல்றதுக்குக் காரணம் யாரும் அந்த வண்டிக்குக் குறுக்கே போய் மாட்டிக்காதீங்க… அப்படி மாட்டிக்கிட்டா நாங்க பொறுப்பு இல்லே..

அடுத்த “கடுப்பேத்த வரோம் பராக்..” பராக் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க இன்னும் ஒரு வாரம் காத்திருங்க.. எல்லாருக்கும் வணக்கம்.. நன்றி.. நன்றி.. நன்றி!
-சிறிதளவு கற்பனை : ராஜகுரு
நன்றி – தீக்கதிர் மே 04

Spread the love