June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கடல் மட்டத்திற்குக் கீழிருந்து ஒலிக்கும் ஒரு வானொலிக் குரல்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
இந்தியாவில் முதல்முறையாக ஒரு மாநில அரசு விவசாயிகளுக்காக சமூக வானொலி சேவையைத் தொடங்கியுள்ளது. கேரள மாநில ஆலப்புழை மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் 2021 பிப்ரவரி 17 அன்று 90.0 எஃப்.எம் என்று அழைக்கப்படும் இந்த வானொலி தன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. குட்டநாடு பகுதி கேரளாவின் நெற்களஞ்சியம் என்பதுடன் உலகில் கடல்மட்டத்திற்குக் கீழ் கடல்நீரை வெளியேற்றி பாத்திகள் அமைத்து விவசாயம் நடைபெறும் ஒரு அபூர்வ இடம். நெதர்லாந்தைத் தவிர இங்கு மட்டுமே இவ்வாறு கடலிற்கு அடியில் பயிர் வளர்க்கப்படுகிறது. கேரள விவசாயத்துறையின் வேளாண் தகவல் கழகத்தால் இந்த வானொலி சேவை நடத்தப்படுகிறது.
விவசாயத்துறையில் ஏற்படும் புதிய மாற்றங்கள், மத்திய மாநில அரசின் திட்டங்கள், பாசனமுறைகள், பூச்சிக் கட்டுப்பாடு, உரமேலாண்மை, விவசாய நிபுணர்களுடன் நேர்முகங்கள், நாட்டுப்புறக்கலைகள், பாடல்கள், இவை குறித்த கலந்துரையாடல்கள், மண்வாசனை வீசும் குட்டநாடு நாட்டுப்புறக்கதைகள் போன்ற பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இந்த ஒலிபரப்பில் இடம் பெறுகின்றன.
குட்டநாட்டில் உள்ள கலர்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள மாநில அரசின் விதைப் பரிசோதனை மையத்தில் இருந்து இந்த வானொலி நிலையம் தன் சேவைகளை ஆற்றிவருகிறது. கடல் மட்டத்திற்குக் கீழ் விவசாயம் நடைபெறும் இடம் என்பதால் மட்டும் இல்லாமல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களாலும் இப்பகுதி அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்பதால் இந்த சேவை இங்கு தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண் தகவல் கழகத்தின் முதன்மை தகவல் அலுவலர் ஜார்ஜ் செபாஸ்டியன் கூறியுள்ளார்.
தினம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஒலிபரப்பு நடைபெறுகிறது. இரண்டு மணிநேர ஒலிபரப்பு குறைவானதே. அதனால் விரைவில் மேலும் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஒலிபரப்பு நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. கடல்சீற்றம் ஏற்படும் காலங்களில், பெருமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இப்பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிடுவதற்காக கடல்நீரை வெளியேற்றி உருவாக்கும் வயல் பாத்திகள் பாதிக்கப்படுகின்றன. வானொலி நிகழ்ச்சிகள் விவசாயிகள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என்றும் நாட்டிற்கே ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் என்றும் நம்பப்படுகிறது.
(73390 89961 – [email protected])

Spread the love