June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஓடும் பேருந்திற்குள் ஒரு நூல்நிலையம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
நவி மும்பை முனிசிபல் கார்பரேஷன் நீண்டதூர பேருந்தில் நூல்நிலைய வசதியைத் தொடங்கியுள்ளது. இதனால் இனி நீண்டதூரப் பேருந்துப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நேரம் போவது தெரியாது. சலிப்பை ஏற்படுத்தும் பயணநேரங்களை ஆனந்தமயமான அனுபவங்களாக மாற்ற இந்த வசதி பயணிகளுக்குப் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.
பரிசோதனை அடிப்படையில் பேலாப்பூர் மந்திராலயம், பேலாப்பூர் கல்யாண் வழித்தடங்களில் ஓடும் இரண்டு குளிர்சாதனவசதி உடைய பேருந்துகளில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து வரும் சாதகமான கருத்துகளின் அடிப்படையில் மேலும் ஆயிரம் பேருந்துகளில் இந்த புதிய வசதி ஏற்படுத்தப்படும். நவி மும்பை முன்சிபல் கமிஷனர் அபிஜித் பங்கார், போக்குவரத்துத்துறை மேலாளர் யோகேஷ் கடுஸ்கர் மற்றும் இந்திய வாசிப்பு இயக்கமான லெட் அஸ் ரீடு இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பு இந்த முயற்சியில் இணைந்துள்ளன.
சமூக ஊடகங்களில் இருந்து கிடைக்கின்ற அறிவு பல சமயங்களிலும் நம்மை தவறாக வழிநடத்துகிறது. இதனைக் காட்டிலும் புத்தகங்களில் இருந்து கிடைக்கும் அறிவு பயனுள்ளதாக அமைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் மனிதர்களை வாசிப்புடன் நெருங்கிப்பழக உதவும் ஒரு எளிய முயற்சியாக இத்திட்டம் இருக்கும். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் இரண்டு விதமானவர்களை நோக்கமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வாசிப்பில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் வாசிப்பின் அற்புத உலகிற்கு மீட்டுக் கொண்டுவர இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை இதன் மூலம் புத்தக ஆர்வலர்களாக மாற்ற இத்திட்டம் பயன்படும் என்றும் கருதப்படுகிறது.
பேருந்தின் இருக்கைக்கு முன்னால் காணப்படும் க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் ஃபோனில் அவர்களுக்கு விருப்பமான தலைப்புகளில் உள்ள புத்தகங்களை எடுத்து வாசிக்கலாம். பயணிகளின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொண்டு மேலும் அதிகமான புத்தகங்களை அவர்கள் தேர்ந்தெடுக்கும் வசதி செய்து தரப்படும் என்று நவி மும்பை முனிசிபல் அமைப்பு கூறியுள்ளது. ஓடும் பேருந்தில் நூல்நிலையம் என்ற இந்த நூதனத்திட்டம் மக்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
(73390 89961 – [email protected])

Spread the love