September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஓடி விளையாடு..!

முனைவர் ச.சீ. இராஜகோபாலன்


இரண்டு சர்வதேச விளையாட்டுக்களை மிகச் சிறப்பாக டோக்கியோ நகரம் நடத்தியுள்ளது ஜப்பானியரின் நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டு. லீப் ஆண்டில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணத்தால் ஓராண்டு கழித்து நடத்தப்பட்டன. ஒரே குறை விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தப் பார்வையாளர்கள் இல்லாததே. அனைவர்க்குமான ஒலிம்பிக் போட்டிகளும், உடற்குறையுள்ளோர்க்கான பாராலிம்ப் போட்டிகளும் ஒரே ஆண்டில் நடத்தப் பெற்றுள்ளன.


இந்தியா 1928-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. முதலாம் ஆண்டிலேயே ஹாக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது. ஆனால் அன்று ஹாக்கி பாமரர் விளையாட்டாக இருக்கவில்லை. பெரும்பாலும் இராணுவ முகாம்களில் விளையாடப்படும் ஒரு ஆட்டமாக இருந்தது. ‘மந்திரக் கோல் கொண்டு விளையாடுபவர்’ என்று உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் தயான்சந்த்தும் ஒரு இராணுவ வீரர்தான். அவ்வெற்றி ஹாக்கி விளையாட்டை நம் நாட்டில் பரப்ப உதவியது. 1928 முதல் 1960 வரை ஹாக்கி ஆட்டத்தில் முடிசூடா மன்னனாக இருந்தது. 1960 ரோம் ஒலிம்பிக்கில் தனது சகோதர நாடான பாகிஸ்தானிடம் தோற்றது. பல நாடுகளும் புறக்கணித்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பெற்ற வெற்றிக்குப் பின் 41 ஆண்டுகள் பதக்கமின்றி இருந்த நிலையை மாற்றி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றோம்.


தடகளப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சிக்குரியது. குத்துச் சண்டை, பெண்களுக்கான எடை தூக்குதல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றது சிறப்பு. ஆக, ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 48-வது இடத்தில் இருக்கின்றோம். அமெரிக்கா 113 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. பாராலிம்பில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கங்களுடன் பட்டியலில் 24-ஆவது இடத்தில் இருக்கின்றோம். வென்ற வீரர்களில் பெரும்பாலோர் சொந்த முயற்சியில் தம் விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொண்டவர்கள்.

சாதனை படைக்கும்வரை அரசும், விளையாட்டு நிறுவனங்களும் அவர்களுக்கு ஆற்றிய உதவி மிகக்குறைவே. அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். சில பதக்கங்களை வென்றதும் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட மோடி அரசு முந்திக் கொண்டு வந்ததில் ஆச்சரியம் இல்லை. அவரைப் பொறுத்த அளவில் இந்த சாதனை ஏதாவது சில வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பதுதான் கேள்வி, டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆக 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக 54 வீரர்களும் 9 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு.


ஆடவர்க்கு 18-ம், பெண்களுக்கு 11-ம் ஆக மொத்தம் 29 விளையாட்டுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இலவசக் கல்வி, இலவச உறைவிடம், இலவச உணவு, திறன் பெற்ற பயிற்சியாளர் போன்ற சிறப்புகளுடன் இருந்த போதிலும் பெருமைப்படத் தக்க வீரர்களைக் கண்டு வெளிக் கொணர முடியவில்லை. விளையாட்டுக்கள் இன்று வீரர்களுக்கு அவரவர் திறனுக்கேற்ற வருமானம் கிடைக்க வாய்ப்புகளை உருவாகியிருக்கின்றன.


ஒரு பள்ளி தொடங்க வேண்டுமெனில் கட்டிடங்களுக்காக ஒரு ஏக்கர் நிலமும், விளையாட்டுத் திடலிற்காக 5 ஏக்கரும் இருக்க வேண்டும். அவ்விதி நீக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன். கல்வி விதிகளில் மாற்றம் செய்திட அது பொது விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாது இயக்குநரே நீக்கி இருப்பது விதி மீறல். புதிய ஆங்கிலவழிப் பள்ளிகளின் வசதிக்காக நீக்கப்பட்டுள்ளது அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது.
கலைத்திட்டத்தின்படி வாரம் இரு பிரிவேளை பள்ளி நேரத்திலும், இரண்டு பிரிவேளை பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்டும் விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டும். விளையாட்டுப் பிரிவேளைகளைப் பிற ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.


250 மாணவர்க்கு ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்ற விதியினைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்றத் தொழிற்படிப்புகளில் சேர 20 இடங்கள் விளையாட்டு, சாரணர், என்.சி.சி. போன்றவற்றில் பங்கேற்ற மாணவர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் அவற்றிற்கு மிகுந்த மதிப்பு இருந்தது. பொய்ச் சான்றிதழ் மூலம் சிலர் சேர முயற்சித்த காரணத்தால் அவ்வொதுக்கீடு நீக்கப்பட்டது மிகத் தவறான முடிவாகும். சர்வதேசப் போட்டிகளில் முதல் பத்து இடங்களுக்குள் வரத் தேவையான முன்னெடுப்புகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.


விளையாட்டுத் திடல்கள் தரம் வெகுவாக உயர்த்தப்பட வேண்டும். புழுதி கிளப்பும் மண் தரை சாதனையாளர்களை உருவாக்க உதவாது. அதே சமயம் செயற்கைப் புல் (ஹளவசடி-வரசக) மைதானம் அமைக்க அதிக செலவு ஆகும். குறைந்தது மாவட்ட அளவில் சில மைதானங்களை உருவாக்கலாம். எல்லா விளையாட்டுக்களுக்கும் பயிற்சிக் கையேடுகள் வெளிவந்துள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் அவை இருக்காது. இளமையில் கல் என்பது போல சிறு வயதில் திறன் கண்டறியப்பட்டு சிறப்பான பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நான்காண்டுகளுக்கொரு முறை நடைபெறும் ஒலிம்பிக்கின் மீது மட்டும் செலுத்தாமல் நாளும் உடற்கல்விக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும்.

(044-23620551 – [email protected])

Spread the love