September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஓடிட்டிருக்கும் ஓடிடி

டாக்டர் ஜி. ராமானுஜம்..!


“பல வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் ஐநூறு, ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள். அங்கு தினமும் மூன்று நான்கு முறை கூடுவார்கள். அங்கே நம் வீட்டு டி.வி சைஸுக்கு ஒரு வெள்ளைத் திரை இருக்கும். திரைப்படங்களை எல்லாம் அங்குதான் பார்ப்பார்கள். அதை தியேட்டர்கள் என அழைத்தார்கள்” – எதிர்கால பாட புத்தகங்களில் இதுபோன்ற கட்டுரை வருவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.


ஏனென்றால் இப்போதெல்லாம் உணவில் இருந்து மருத்துவம் வரை எல்லாமே வீடு தேடி வருகிறது. சொமேட்டோ, ஸ்விக்கி மாதிரி ஆப்களில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்த விரலோடு அப்படியே மருந்துக் கடையின் ‘ஆப்’பில் சென்று ஜெலுசில் மருந்துக்கும் ஒரு ஆர்டர் கொடுக்கின்றனர். முன்பெல்லாம் ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடம் என்றால் ஏழு மணிக்கே குழந்தைகளை அடித்து உலுக்கி எழுப்பி குளிப்பாட்டிக் கிளப்ப வேண்டும். இப்போதெல்லாம் சாவகாசமாக 8:59-க்கு எழுந்து லேப்டாப்பை வாயில் பிரஷ்ஷோடு ஆன் செய்கிறார்கள். காரணம் பள்ளிக்கூடமெல்லாம் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன.


அது போலவே திரைப்படங்களும் ஆகி விட்டன. முன்பெல்லாம் திரைப்படங்கள் ரிலீஸ் அன்று தீபாவளி போல் கூட்டம் திரண்டு இருக்கும். தீபாவளி பொங்கல் என்றால் கேட்கவே வேண்டாம். திரையரங்கின் கதவுகள் திறப்பது கோவில் சொர்க்க வாசல் கதவுகள் திறப்புக்குச் சற்றும் குறைந்தவை அல்ல. குனுகுளு (குசைளவ னுயல குசைளவ ளுhடிற) என அழைக்கப்படும் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைப்பது என்பதே ஒரு பெரிய சாகசமாக இருக்கும். இப்போது ஓடிடி என அழைக்கப்படும் தொழில்நுட்பம் மூலம் வீடுகளுக்கே திரையரங்குகள் வந்து விட்டன. ஏற்கனவே தொலைக்காட்சிகள் மூலம் திரைப்படங்கள் பார்ப்பது வீட்டுக்குள்ளேயே வந்து விட்டது என்றாலும் ஓடிடி இதன் அடுத்த கட்டம். தொலைக்காட்சி சேனல்களில் புதுப்படங்களைப் பார்க்க முடியாது. படு தோல்வி அடைந்த திரைப்படமாக இருந்தால் மட்டுமே ‘திரைக்கு வந்து சில மணிநேரங்களே ஆன சூப்பர்ஹிட் திரைப்படம்’ என்ற அடைமொழியோடு ஒளிபரப்பப்படும். இப்போது திரைப்படங்கள் நேரடியாக இணையத்திலேயே ரிலீஸ் ஆவதால் உடனடியாகத் திரைப்படங்களைச் சுடச்சுடப் பார்க்க முடிகிறது.


திரையரங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் இது போன்ற தளங்களினால் சில நன்மைகளும் இருக்கின்றன. திரை அரங்குகளில் நமது வரிசையில் நட்ட நடுவாக அமர்ந்திருந்திருப்பவருக்கு நீரிழிவு நோய் இருக்கும் அல்லது புகைபிடிக்கும் பழக்கம் உடையவராக இருப்பார். ஒவ்வொரு பாட்டின்போதும் எழுந்து நம் கால்களை மிதித்து இடறியபடி வெளியேறிவிடுவார். நிறைய பாடல்கள் உள்ள படங்களில் பாடல் வரும்போதெல்லாம் எழுந்து புகைபிடிக்கப் போக முடியுமா? அதே போல் இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த சில படங்களில் பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கும். படம் குப்பையாக இருக்கும். இது போன்ற சமயங்களில் பாடல் முடிந்து படம் ஆரம்பிக்கும் போதெல்லாம் சிகரெட் பிடிக்க வெளியேறிவிடுவார்கள். இன்னும் சிலர் திரை அரங்கத்துக்குள் நுழையும்போது இருட்டில் கையில் ஒலிம்பிக் ஜோதி போல் பிடித்துள்ள கோன் ஐஸ்களை நம் மூக்கின் மேல் தேய்த்துவிட்டுப் போவார்கள்.


சிறு வயதில் ஒருமுறை திருநெல்வேலியில் ஒரு திரை அரங்கில் எனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் நெட்ட நெடு உயரமான ஒரு சர்தார்ஜி வந்து அமர்ந்து விட்டார். சப் கலெக்டர் மாதிரி மத்திய அரசுப் பணியில் இருக்கும் அதிகாரி என நினைவு. கடைசி நேரம் வந்ததால் ரிசர்வ் செய்யாமல் வந்திருப்பார் போலும். அரங்கம் வேறு நிறைந்திருந்தது. ஆகவே என்னால் வேறு இடத்துக்குப் போக முடியவில்லை. எனது தலையை வலது, இடது என எத்தனை பாகை திருப்பிப் பார்த்தாலும் அவரது தலைப்பாகையை மீறி எதுவும் தெரியவில்லை. பல வருடங்கள் கழித்து அத்திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் க்ளைமாக்ஸில் இறந்தது வில்லன் அல்ல, கதாநாயகன் எனத் தெரிய வந்தது.


சில திரையரங்குகளில் படம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டைப் பூட்டிவிடுவார்கள். படம் பிடிக்கவில்லை எனத் திரையரங்கத்தை விட்டு வெளியேற முடியாது. சில தேர்வுகளில் பதில் தெரிகிறதோ இல்லையோ தேர்வு முடியும் வரை அறையை விட்டு வெளியேறக் கூடாது. அது போல் சில திரையரங்குகளில் தீப்பிடித்தால்கூடத் திரைப்படம் முடிந்த பிறகுதான் வெளியே போக முடியும். ஆகவே எத்தனை மோசமான படமாக இருந்தாலும் பார்த்துத்தான் ஆக வேண்டும்.
ஓடிடியில் இது போன்ற தொல்லைகள் இல்லாமல் நமக்கு விருப்பப்பட்ட நேரத்தில் பார்க்கலாம். படம் போரடித்தால் காட்சிகளை ஓட்டலாம். அல்லது வேறு படத்தினைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தைப் பற்றி யாரவது பேசினால் உடனே அந்தத் திரைப்படம் எந்தத் திரையரங்கில் ஓடிட்டிருக்கு எனக் கேட்போம். இப்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் எனக் கேட்கிறோம். அதிலும் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் என ஏகப்பட்ட ஆப்கள் இருக்கின்றன. ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஒவ்வொரு ஆப்புக்கும் பணம் கட்ட வேண்டும். ஒவ்வொன்றுக்குள் நுழையும்போதும் ஒரு பெயர், பாஸ்வேர்டு எனக் கேட்கும்.
இவையெல்லாம் தொந்தரவுகள். இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து ஓடிடி தளங்களின் வருகையால் திரைப்படத்துறை எப்படி இருக்கும் என தற்போது ஊகிக்கவே முடியாது. ஆனால் ஒன்று… காஞ்சனா- 34, சிங்கம்-24, அரண்மனை- 29 என திரைப்படங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!!


(9443321004 – [email protected])

Spread the love