September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஒற்றைப் பேரொலி பெருமுழக்கமாகட்டும்…

விளைநிலங்களில்
உழைப்போடு சேர்த்து,
தொழுஉரத்தையும் தந்துவிட்டு,
தொழுவத்தில் தலைசாய்த்துப்
படுத்திருக்கின்றன…
உழவு மாடுகள்.

உழும்போது ஒட்டிய
மண் பிசுக்கையும்
சேர்த்தணைத்துக்கொண்டு,
எரவானத்துப் பலகையின் மீது
சாய்ந்திருக்கிறது…
கலப்பையின் கொழுமுனை.

பூச்சிக்கொல்லி மருந்துகளை
வயல்வெளிகளில் கொட்டிவிட்டு,
உடைந்த நாட்டோடுகளின் வழியே
வீட்டுக்குள்ளிறங்கும்
சூரிய ஒளியைத் தாங்கிப் பிடித்தபடி
சொருகியுள்ளன…
காலியான உரச்சாக்குப் பைகள்.

விவசாயி சிந்திய வியர்வையை
நீராக உள்வாங்கி விளைந்தாலும்,
உப்புக் கரிப்பை விட்டொழித்து
இனித்துக் கிடக்கின்றன…
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
கரும்புக் கட்டுகள்.

மண்பூச்சினால் நிறமாறிய
குயவனின் கைரேகை தடம் பதித்த
மண்பானைக்குள்ளிருந்து
நுரைக்க நுரைக்கப்
பொங்கிக் கொண்டிருக்கிறது…
பொங்கல்.

‘உழவர் தின வாழ்த்து‘ சொல்லும்
ஒன்றிய ஆட்சியாளர்களின்
உலர்ந்த உதடுகளிலோ
ஈரமேயில்லை.

இனி –
பொங்கலோடு சேர்ந்தே
விவசாயிகள் மட்டுமல்ல,
வெகுமக்களும்
பொங்கத்தான் போகிறார்கள்.
மோடியின் மக்கள் விரோத
ஆட்சிக்கெதிரான
விவசாயிகளின் ஒற்றைப் பேரொலி
தேசமெங்கும்
பெருமுழக்கமாக எழட்டும். –

மு.முருகேஷ் (94443 60421)

Spread the love