June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஒரே கோணத்தில் மூன்று தீர்ப்புகள்…

மதுக்கூர் இராமலிங்கம்
உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள சில தீர்ப்புகள் ஜனநாயகத்தை நேசிப்போருக்கும், மாநில உரிமைகளை வலியுறுத்துவோருக்கும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தேசபக்தர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நீட்சியாக விளங்குகிற அரசியல் சட்டத்தின் 124-ஏ பிரிவை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மனித உரிமை ஆர்வலர்கள், போராளிகள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி சிறையில் வாடும் நிலையில் இத் தீர்ப்பு வந்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசைப் பொறுத்தவரை ஆட்சியை விமர்சிப்பவர்களை ஆன்டி-இந்தியன் என அவதூறு செய்வார்கள் அல்லது தேச விரோதிகள் என முத்திரை குத்தி சிறையிலடைப்பார்கள். அவர்களுக்குத் தோதாக இருந்த தேசத் துரோகச் சட்டத்தின் பிரிவு 124-ஏ நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பை ஒன்றிய அரசின் கன்னத்தில் விட்ட அறை என்றே கூறலாம். இந்தச் சட்டப்பிரிவு முற்றாக நீக்கப்படுவதன் மூலமே ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும். எனவே, இந்த சட்டப் போராட்டத்தை நீடித்து நடத்த வேண்டிய தேவை இருக்கிறது.
அடுத்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு தீர்ப்பு. இதையொட்டி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பேரறிவாளனும் அற்புதம்மாளும் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தியே இத்தீர்ப்பினைப் பெற்றுள்ளனர். செங்கொடியின் உயிர்த்தியாகமும், பல இயக்கங்களின் தொடர் போராட்டமும் அவர்களுக்குத் துணை நின்றன.
மனிதநேய நோக்கில் பேரறிவாளன் விடுதலையை வரவேற்பவர்கள் அனைவரும் கொடிய கொலையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால், அப்படியொரு சித்தரிப்பு வேலை செய்யப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொடூரமாக கொல்லப்பட்டதை மனித இதயம் உள்ள யாரும் ஏற்க மாட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன. கொலை விசாரணை அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளன் “பேட்டரி வாங்கிய காரணம் தனக்கு தெரியாது” என்று கூறியதை பதியத் தவறிவிட்டேன் என்று பொதுவெளியில் ஏற்றுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான தாமஸ் அவர்கள், அம்மையார் சோனியாகாந்திக்கு “இவர்களை விடுவிக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு ஒரு கடிதம் எழுதினார்.
மறுபுறத்தில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிலர் 14 ஆண்டுகளுக்குப்பிறகு விடுவிக்கப்பட்டு விட்டனர். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 31 ஆண்டுகள் சிறையிலிருந்த பின்பும் விடுவிக்கப்படாத நிலையில்தான் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
இந்த வழக்கில் மிக முக்கியமான விஷயம், மாநில அரசுகளின் உரிமையை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டியிருப்பதுதான். பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், ஒன்றிய அரசு ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்தது ஒன்றிய புலனாய்வுத்துறை என்பதால் இது குறித்த அதிகாரம் ஒன்றிய அரசிற்கே உள்ளது என்றது. தமிழக அரசு சட்டமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை 28 மாதங்களுக்கு எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருந்த ஆளுநர், வழக்கை இழுத்தடிக்க அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கா, ஒன்றிய அரசுக்கா என்ற சர்ச்சை தொடர்ந்தது.
இந்நிலையில்தான் உச்சநீதிமன்றம் ஆளுநர் தேவையில்லாமல் தாமதப்படுத்தியது ஏன்.. சட்டமன்றத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன் என கேள்விகளை எழுப்பியதோடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தமட்டில் முடிவு செய்ய வேண்டிய அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு, அரசியல் சட்டப் பிரிவு 142-ன்படி தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இது பல்வேறு வழக்குகளுக்கு திறவுகோலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அனைத்து அதிகாரங்களும் தம்மிடமே உள்ளதாக வாதிடும் ஒன்றிய அரசின் தலையில் வைத்த ஒரு குட்டு என இத்தீர்ப்பைக் கருதலாம்.
மூன்றாவதாக, ஒரே நாடு, ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு கொணர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலை அமைத்தது. அந்தக் கவுன்சில் வகை தொகையில்லாமல் ஒன்றிய அரசின் ஆலோசனையை மட்டும் பெற்று வரியை தாறுமாறாக உயர்த்திக் கொண்டே சென்றது. அது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி வரியின் பங்கினையும் தருவதில்லை. தமிழகத்திற்கு மட்டும் சுமார் ரூ.22 ஆயிரம் கோடி தரப்படாமல் நிலுவையில் உள்ளது. அப்படியே கொடுத்தாலும் கடனாக வாங்கிக் கொள் என்றும், அப்படி கடன் பெறக்கூட மின்வாரியம் தனியார்மயம் போன்ற கொள்கைகளை ஏற்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசு குடைச்சல் கொடுத்து வந்தது.
இந்த நிலையில்தான் ஜிஎஸ்டி கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதோடு ஒன்றிய அரசிற்கு மட்டுமின்றி ஜிஎஸ்டி வரிகளை உருவாக்குவதில் மாநில அரசுகளுக்கும் பங்குள்ளது என்று கூறியுள்ளது. ஒன்றிய அரசு கூறுவதை மட்டும் கேட்காமல், மாநில அரசுகள் கூறும் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய-மாநில அரசுகள் ஏற்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் அமைய வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் என்பது பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்பே அன்றி அனைத்து அதிகாரங்களும் கொண்டது அல்ல என்றும் ஒன்றிய அரசின் கைப்பாவை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் ஓங்கி உரைத்திருக்கிறது.
தேசியக் கல்விக்கொள்கை தொடங்கி பத்திரப்பதிவு வரை மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து கூட்டாட்சிக்கு குழிபறிக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்புகள், மெச்சத்தக்கவை. தாமதமாக வந்தவை என்றாலும் நமது வரவேற்புக்குரியவை.
(94422 02726 – [email protected])

Spread the love