September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஒரு துளித் துயர் (கவிதைத் தொகுப்பு)

மு.முருகேஷ்
அகநி வெளியீடு. (தொடர்புக்கு : 98426 37637 / 94443 60421 ) விலை : ரூ. 120
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் மு.முருகேஷ் 37 ஆண்டுகளாகப் படைப்பிலக்கிய வெளியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார். முருகேஷ் தற்போது வந்தவாசியில் வசிக்கிறார். தொழில்நுட்ப இயந்திரவியல் படித்த முருகேஷ் ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, குழந்தை இலக்கியம், சிறுகதைகள், கட்டுரைகள் என்று எழுத்துலகின் பல வகைமைகளிலும் சாதனை புரிந்துள்ளார். 2009-ல் பெங்களூருவில் நடந்த உலக ஹைக்கூ சங்க மாநாட்டில் பங்கேற்று உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள முருகேஷ் ஹைக்கூ கவிதைச் செயல்பாட்டிற்காக ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினையும் வென்றுள்ளார். முனைவர் மறைமலை இலக்குவனாரின் சிறப்பான அணிந்துரையுடன் வெளிவந்திருக்கும் ‘ஒரு துளித் துயர்’ இவரின் பத்தாவது கவிதைத் தொகுப்பாகும். முருகேஷ் கவிதையைச் சொல்விளையாட்டாகவோ அல்லது வெற்று முழக்கமாகவோ கருதாதவர் என்று மறைமலை இலக்குவனார் அணிந்துரையில் கச்சிதமாகச் சொல்லியுள்ளார். ‘ஊசிகளின் காலம்’ கவிதையில் கொரோனா காலத்தில் வேலையிழந்து சொல்லொண்ணா துயரங்களுக்குள்ளான மனிதர்களின் பாடுகளைப் பாடியுள்ளார். யாரிடமும் யாசகம் கேட்க/ மனமில்லை எனக்கு./ கையேந்தி நிற்பதற்குச்/ செத்துத் தொலைக்கலாம்…நீ என்கிறான்/ என்னுள்ளிருக்கும் நான்./… எப்படியும் நாளை/ கொரோனா தடுப்பூசி போடும்/ விழாவைத் தொடங்கி வைக்க/ அமைச்சர் வரும்போது/ நானிருக்க மாட்டேன்/. என்ற வரிகள் காத்திரமானவை.
தொகுப்பில் உள்ள கவிதைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு துளித் துயர் தமிழ்க் கவிதை உலகிற்குக் கிடைத்த தேனினும் இனிக்கும் துளி என்பதில் ஐயமில்லை.
-பெ.விஜயகுமார்

Spread the love