September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஐந்து மாநிலத் தேர்தலும்
அண்டை நாட்டின் நெருக்கடியும்

மதுக்கூர் இராமலிங்கம்
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல்வேறு படிப்பினைகளை நமக்கு கற்றுத் தருகிறது. உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. பஞ்சாபில் காங்கிரசிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக, உ.பி. மாநிலத் தேர்தல் முடிவு உற்று கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க பாஜக அனைத்து தகிடுதத்த வேலைகளிலும் ஈடுபட்டது. மக்களை மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிளவுபடுத்தும் வகையிலேயே பாஜகவின் பிரச்சாரம் அமைந்திருந்தது. பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் ஆகியோரது பிரச்சாரம் மதவெறி பிரசங்கங்களாகவே இருந்தன. அதிலும் குறிப்பாக உ.பி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இது 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் இடையிலான மோதல் என்று வெளிப்படையாகப் பேசி அம்மாநிலத் தேர்தலை ஒரு மதவெறி போர்க்களமாக மாற்றிக் காட்டினார்.
பிரதமர் மோடி, தன்னுடைய ஆட்சியின் சாதனைகளையும் உ.பி. அரசின் சாதனைகளையும் எடுத்துக் கூறியதைவிட கோவில் கோவிலாகச் சென்று சுற்றி வந்ததே பிரதான பிரச்சாரமாக அமைந்தது. காசி விசுவநாத கோவிலில் விசேஷ பூஜைகள் செய்து, துப்புரவுப் பணியாளர்கள் மீது மலர்களைத் தூவி, மெகா நாடகம் நடத்தினார். அயோத்தியில் இராமர் கோவில் கட்டிக்கொண்டிருப்பதை மிகப்பெரிய சாதனையாக முன்னிறுத்தி, பகவான் ராமரைத் தனது தேர்தல் பிரச்சாரகராக நியமித்துக் கொண்டார்.
விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, காஷ்மீர் பிரச்சனை, வேலையின்மை, பொருளாதார நிர்வாகம், கருத்துரிமைப் பாதுகாப்பு என ஒன்றிய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. உ.பி.யில் கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் மக்களது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாணப்படவில்லை. மாறாக, ஆட்சித்திறன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உ.பி. மாநிலம் கடைசி இடத்தையே பிடித்தது. இதையெல்லாம் மக்கள் கவனத்திலிருந்து மடைமாற்றம் செய்ய ‘இந்து’ என்ற ஒற்றை முழக்கத்தை முன்னெடுத்தனர். அதற்குள்ளும் சாதிய அடையாளத்தைப் பெரிதுபடுத்தினர்.
மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகள் பிரிந்தது பாஜகவுக்கு பெருமளவு உதவி செய்துள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், ஓவைசி ஆகியோர் வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு பெரும் உதவி செய்தனர். சமாஜ்வாதி கட்சி மட்டுமே பாஜகவை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தியது.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் எடுபடவில்லை. பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் காங்கிரசுக்கு உதவவில்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க உதவியுள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மட்டுமின்றி, மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி மற்றும் அந்தக் கட்சிக்குள் நிலவிய கோஷ்டிப்பூசல் ஆம் ஆத்மிக்கு சாதகமாக அமைந்தது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் எப்படிப்பட்ட ஆட்சியைத் தரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு ஆழமான சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையே ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. தேர்தல் களத்தில் மட்டுமின்றி கருத்தியல் களத்திலும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறாவை எதிர்த்து பெரும் போராட்டத்தை ஒற்றுமையாக நடத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நிலையில், தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் தங்களது வேற்றுமைகளைப் பின்னுக்குத் தள்ளி ஒன்றுபட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பாஜகவை வீழ்த்துவதற்கான தேர்தல் வியூகத்தை வகுக்க வேண்டியள்ளது. திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இதில் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டியிருக்கும்.
அதே நேரத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து, ஒன்றிய அரசிடம் ஒற்றை அதிகாரத்தைக் குவிக்கும் அரசியல் சட்டவிரோதப் பணியில் பாஜக வெறித்தனமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முன்னெடுத்து வருகின்றன. புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாகவே கல்வித் திட்டம் மாற்றப்பட்டு வருவதோடு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு என்பதும் திணிக்கப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல்கள் முடியும் வரை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதோடு, சமையல் எரிவாயு விலை ஒரேயடியாக சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. எரிவாயுக்கான மானியமும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசு சொல்வதுபோல பெட்ரோல் டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்தால் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக தேர்தல் நிலவரத்தையொட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்பது வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளது.
பொதுத்துறை பங்குகள் விற்பனை உள்பட நவீன தாராளமயக் கொள்கையின் அனைத்துக் கூறுகளையும் பின்பற்றுவதில் நரேந்திர மோடி அரசு பிடிவாதமாக இருக்கிறது. நமது அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணத்தை இந்தியா அலசி ஆராய்ந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறியதுபோல இப்போது பொருளாதார நெருக்கடியின் சுமை தாங்காமல் மக்கள் அகதிகளாக வெளியேறுவது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. இனரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைப் பிடித்த ராஜபக்சே சகோதரர்கள், நிலைமையைச் சமாளிக்க முடியாமல் மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகின்றனர். கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவுக்கும் விடப்பட்ட ஒரு எச்சரிக்கைதான்.
(94422 02726 – [email protected])

Spread the love