September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஏரியைக் காக்க ஒரு ஒற்றையாள் போராட்டம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்


கோடைகாலத்தில் கொளுத்தும் வெய்யிலில் மக்களின் தாகம் போக்க அக்காலத்தில் அரசர்களால் ஊர்கள் தோறும் ஏரி குளங்கள் கட்டப்பட்டு பெய்யும் மழைநீர் அவற்றில் சேகரிக்கப்பட்டன. மகாராஷ்டிரா நாக்பூர் அருகில் சந்திரபூர் என்ற இடத்தில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்ட அரசர்களால் உருவாக்கப்பட்ட ஏரி ஒன்று இன்று அழியும் நிலையில் உயிர்க்காற்றிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.


இதைக் காப்பாற்ற தனி மனிதராக ஒருவர் அங்கு போராடி வருகிறார். பன்டு தாத்ரே என்ற அந்த மனிதர் சந்திரபூர் நகரில் சூழல் காக்க ஈகோ ப்ரோ என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார். காண்ட் அரசர்களால் கட்டப்பட்ட ரமலா என்ற இந்த ஏரி நகரின் கழிவுகள் வந்து சேரும் சாக்கடையாக மாறியுள்ளது. 2009-லிருந்து இந்த ஏரியைக் காப்பாற்ற முயற்சித்து வரும் தாத்ரே, ரமலாவைக் காப்பாற்ற, தான் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதால் ஏரி காக்கப்படும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.


97 ஏக்கர் பரப்பில் அமைந்த இந்த ஏரி ஊருக்கு நீர் வழங்கும் கடைசி ஏரி. சந்திரபூரில் இருந்த மற்ற கங்காரா, டுக்கம், கட்வலால், கௌரியாண்ட் லால் ஆகிய நான்கு ஏரிகள் அழிந்துவிட்டன. 11 கி.மீ சுற்றுச்சுவர் உள்ள இந்த ஏரி நீரில் நகரத்தின் கழிவுகள் அனைத்தும் கொட்டப்படுவதால் மாசடைந்து இதன் அடிமண் வளம் இழந்து அழிந்துள்ளது.


ஈகோ ப்ரோ குழுவினர் 2009 முதல் ஏரியில் முளைக்கும் ஆக்கிரமிப்புச் செடிகளை அகற்றி ஏரியைச் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது மட்டுமே இதற்குத் தீர்வு என்று மாநில வன உயிரின வாரியத்தில் உறுப்பினராகவும் இருக்கும் தாத்ரே கூறுகிறார். நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி நிர்வாகத்தினர் ஏரியைக் காப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. சந்திரபூர் ஆட்சியர் ராஜேந்திர குல்ஹனே ஏரியைக் காக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால் ஏரியின் கழிவுநீரை சுத்திகரிக்க ஆகும் செலவை எங்கிருந்து பெறுவது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார். தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தினரிடம் நுண்ணுயிரிகள் மூலம் ஏரி நீரைச் சுத்திகரிப்பதற்கான வழிமுறைகள் கோரப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. ரமலா ஏரி காப்பாற்றப்படும்வரை, தான் தன் போராட்டத்தைத் தொடரப்போவதாக தாத்ரே கூறியுள்ளார். ஏரி காக்கப்படுமா?


(73390 89961 – [email protected])

Spread the love