August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு,,?

தேனி சுந்தர்.


ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளிப் பார்வைக்குச் செல்கிறார். ஒவ்வொரு வகுப்பாகச் செல்கிறார்.. கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைப் பார்வையிடுகிறார்.. ஆறாம் வகுப்பில் ஒரு பெண் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். உள்ளே நுழைந்த அதிகாரி மாணவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, அந்தப் பெண் ஆசிரியரிடம் அவரது ஆங்கில அறிவைச் சோதிக்க எண்ணி ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்கான ஸ்பெல்லிங்கை தவறில்லாமல் கரும்பலகையில் எழுதச் சொல்கிறார்.. அது என்ன வார்த்தை தெரியுமா..? ‘விபச்சாரி’ என்பதற்கான ஆங்கிலச் சொல்..! தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா..?!
இன்னொரு சம்பவம்.. ஒரு இணை இயக்குநர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்துகிறார்.. கூட்டத்தில் பல தகவல்கள் கேட்கப்படுகின்றன.
அதிகாரி ஆச்சே..அவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்தானே.. நாலு கோடு நோட்டில் மொத்தம் எத்தனை கோடுகள் இருக்கின்றன என்று கேட்கலாம். ஏதாவது ஒரு செய்யுளைச் சொல்லி இது புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கு என்று கேட்டு நக்கலடிக்கலாம்.. தினத்தந்தியில் இன்று தலைப்புச் செய்தி என்ன என்று கூட கேட்கலாம். இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமோ என்னவோ என்று அந்த தலைமை ஆசிரியர் திகைக்கலாம்.. அச்சச்சோ, நமக்குத் தெரியவில்லையே என்று சங்கடப்படலாம்.. இது கூட தெரியவில்லையா என்று தொடங்கி அரங்கில் இருந்தவர், இல்லாதவர் என அனைவரையும் திட்டித் தீர்த்து ஆசீர்வதித்து, ஒரு இரண்டு மணி நேர மிரட்டல் உரை நிகழ்த்தலாம்..
அப்படித்தான் ஏதோ ஒரு தகவலைக் கேட்டிருக்கிறார் அந்த இணை இயக்குநர்.. எழுந்து நின்ற அந்த பெண் தலைமை ஆசிரியரிடம் பதில் இல்லை.. அந்த தகவல்களை மறந்து வைத்துவிட்டு வந்துட்டேன் என்கிறார். உடனே சீற்றம் கொண்ட அந்த அதிகாரி கேட்கிறார், “உன் வீட்டுக்காரர் கட்டிய தாலியை மறந்துட்டு வருவியா.. ஷாப்பிங் போன இடத்தில் கணவரை மறந்துட்டு வீட்டுக்குப் போவியா..?! ” அதாவது அம்புட்டு முக்கியமான தகவலாம்..!
ஒரு முதன்மைக் கல்வி அலுவலர், கூட்டத்திற்கு தாமதமாக வந்த பெண் ஆசிரியர்களிடம் கேட்டிருக்கிறார்.. “இவ்வளவு நேரம் ஏன் லேட்டு.. எங்க போயிருந்தீங்க.. ஊர் மேயப் போயிருந்தீங்களா..? மணியாட்டிக்கிட்டு இருந்தீங்களா..?”

தனியார் உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் நிர்வாகத்தால் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறார். பிரச்சினை வருடக் கணக்கில் தொடர்கிறது. தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கும் அந்த நண்பர் முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து முறையிடுகிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இது.. “இந்தப் பிரச்சினை அவ்வளவு சீக்கிரம் முடியாது போல இருக்கு. பேசாம நீ செத்துப் போ.. உனக்கான பணப்பலன்களை வாங்கி உன் குடும்பத்துக்குக் கொடுத்திடலாம்..!”
சம்பவங்கள் எல்லாம் பெரும்பாலான ஆசிரியர் கூட்டங்களில், சங்க மேடைகளில் அடிக்கடி பேசப்பட்டவை. ஊடகங்களில் வந்தவை. சம்பவங்களில் ஒன்று, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு சில… ஒன்றிரண்டு சம்பவங்கள் வெகு சமீபத்தில் நடந்தவை… ஆக, காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. அதிகாரத்தின் போக்குகள் மாறவில்லை என்பதுதான் செய்தி..!
வகுப்பைப் பார்வையிடுவது சரிதான். கூட்டத்தில் வருகிற தலைமை ஆசிரியரின் பொறுப்பை உணர்த்துவது, காலந்தவறாமையை வலியுறுத்துவது, பிரச்சினையைத் தீர்க்க ஆலோசனை சொல்வதெல்லாம் சரிதான். பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அதைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் வரம்பு மீறிப் பேசுகிற அந்த இடம், உயர் அதிகாரி-கீழ் அதிகாரி, கீழ் அதிகாரி-தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியர்-ஆசிரியர், ஆசிரியர்-மாணவர் என்கிற எல்லையைத் தாண்டுகிற இடம் அல்லவா..? சுயத்தைச் சீண்டுகிற இடம் அல்லவா.?
அன்பு காட்டுவதற்கு எந்த எல்லையும் தேவையில்லை.. ஆனால் இன்னொரு மனிதனை அவமதிக்க..? புறக்கணிக்க..? நிராகரிக்க..? எந்த உயர்நிலை பதவியில் இருந்தாலும் அப்படியான நிபந்தனையற்ற அதிகாரம் யாருக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது..? இருந்தாலும் எந்தப் புரிதலில் இருந்து அப்படிப் பேசுகிறார்கள்..? எந்த நம்பிக்கை இந்த இடத்தில் இவ்வாறு பேசுவது தவறில்லை என்கிற தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது..?
ஒரு ஆசிரியர் / ஆசிரியை, வகுப்புத் தேர்வில் தோல்வியுற்ற, வீட்டுப் பாடம் செய்து வராத ஒரு பதின்பருவக் குழந்தையின் அலங்காரத்தை மனதில் வைத்து “இவளுக்கெல்லாம் ஒரு புருசன் பத்தாது” என்று சக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்கிற அந்த இடமும் நாம் அதிர்ந்து எதிர்க்க வேண்டிய இடம்தான்..!
அதிகாரம் ஆபத்தானது என்றால், அதற்கு எதிரான நமது மௌனம் அதை விட ஆபத்தானது.. மிகக் கொடுமையானது..!

(9047140584 – [email protected])

Spread the love