August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எழுதும் விதமாக எழுதினால்…

டாக்டர் ஜி. ராமானுஜம்


பொய்களில் நான்கு வகைகள் இருக்கின்றன. அவை
1.பொய்.. 2.பச்சைப் பொய்.. 3.ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்
4.புள்ளி விபரங்கள் என்பார்கள்!
அப்படியே ஐந்தாவதாக வாட்ஸப்பில் வரும் செய்திகளைச் சேர்த்துக் கொள்ளலாம். பெரும்பாலானவை போலி அறிவியல் செய்திகள்..போலி மருத்துவக் குறிப்புகள். ஆனால் அவை எழுதப்படும் விதம் இருக்கிறதே.. ஐன்ஸ்டீன் கூட நம்பி விடுவார்.
உதாரணத்துக்கு ஒன்று, கொரோனா காலத்தில் வந்தது.
“ஒரு பொருளில் அதிக காரத்தன்மை இருந்தால் (யீழ என்பார்கள் ஆங்கிலத்தில்) கொரோனா வைரஸ் இருந்தால் இறந்துவிடும். அன்னாசிப்பழத்துக்கு யீழ 12.5. வெண்ணெய்க்கு 22. அது கொரோனா கிருமிகளைக் கொன்று அழித்துவிடும்”- இப்படி ஒரு வாட்ஸ் அப் செய்தி வலம் வந்தது.
யீழ என்றால் என்ன என்பது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்குக்கூடத் தெரியும். மிகப் பயங்கரமான காரத்துக்குக்கூட அது 14-க்கு மேல் போக வாய்ப்பில்லை. தண்ணீரின் யீழ 7. அன்னாசிப்பழத்துக்கு 12.5 என்றால் அவனவன் குடல் வெந்து போய் அலைவான். ப்ளீச்சிங் பவுடருக்கே 12-தான் இருக்கும். உண்மையில் சிட்ரிக் பழங்கள் அமிலத்தன்மை வாய்ந்தவை. யீழ 4-6 இருக்கும். இவர்களுடைய கெமிஸ்ட்ரி வாத்தியார் தும்பைப்பூ செடியில் தூக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.
எழுதும் விதமாக எழுதினால் எஸ்கிமோக்களைக் கூட ஃப்ரிட்ஜ் வாங்க வைத்து விடலாம். அதிலும் பயமுறுத்தினால்தான் வாழ்க்கை நடக்கும் என்பதால் பெரும்பாலானவை இல்லூமினாட்டி சதிகள் என மிகையாகக் கற்பனை செய்யப்பட்டு எழுதப்படுபவை. இது குறித்து இணைய தளம் ஒன்றில் வந்த பகடியை ஒட்டி நான் கீழ்க்கண்டவாறு எழுதினேன்.
“உலகெங்கும் னுழஆடீ என்னும் ரசாயனத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த னுழஆடீ ரசாயனத்தால் பல்லாயிரம்பேர் உயிரிழக்கின்றனர். இந்த னுழஆடீ இருக்கும் தொட்டியில் இரண்டு நிமிடங்கள் உள்ளே நீங்கள் இருந்தால் மரணம் உறுதி. புயல் வெள்ளம் போன்ற சீற்றங்களின் போதும் உயிரிழப்புக்களுக்கு இந்த ரசாயனமே பெரும்பங்கு வகிக்கிறது. விவசாயத்திலும் இதன் பயன்பாடு இருப்பது வேதனைக்குரியது. குளிர்பானங்களிலும், குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலிலும்கூட இந்த ரசாயனம் கலந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு

பல்கலைக்கழகத்தில் மனிதனின் செல் ஒன்றை ஆராய்ந்தபோது கிட்டத்தட்ட 75 சதவீதம் இந்த ரசாயனம் இருப்பது கண்டு திகைத்தனர். அந்த கொடிய ரசாயனத்தின் பெயர் டைஹைட்ரஜன் மோனோ ஆக்ஸைடு. அதன் இரசாயன ஃபார்முலா ழ2டீ. அதாவது தண்ணீர்!”
இப்படி ஒரு மெசெஜ் உங்களுக்கு வந்தால் முதுகுத்தண்டு சில்லிடும் அல்லவா? இப்படித்தான் பல ஃபார்வேடு மெசேஜ்கள் பரப்பப்படுகின்றன. இதுபோல் எழுதினால், நாம் பிறந்ததே ஒரு சதிச்செயல்தான் என நம்பி தற்கொலை செய்து கொண்டுவிடுவோம்.
அதுமாதிரி நான் எழுதிய ஒரு பதிவு :
“ உலகில் சத்தமே இல்லாமல் ஒரு இல்லூமினாட்டி சதி நடந்து வருகிறது. அதுதான் ஹெல்மெட் அணிவது என்ற பெயரில் நடக்கும் சதி! நம் நாட்டில் கோடிக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. ஆனால் சில நூறு விபத்துக்கள்தான் ஏற்படுகின்றன. இருப்பினும் கார்ப்பரேட் ஹெல்மெட் கம்பெனிகள் வாகன ஓட்டிகள் அனைவரையும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வற்புறுத்துகின்றன. இதற்கு நீதிமன்றங்களும், காவல் அதிகாரிகளும் துணை போகின்றனர். யாருக்கு விபத்து ஏற்படப் போகிறதோ அவர் மட்டும் ஹெல்மெட் அணிந்தால் போதாதா? ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்தல், அதிக வியர்வை, மூச்சு முட்டுதல், ஆண்மைக் குறைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து மாணவர்களை ஐந்து மாதம் ஹெல்மெட் அணியாமல் ஒரு அறையிலேயே தங்கியிருக்கச் செய்தனர். அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. இருநூறு முந்நூறு வருடங்களுக்கு முன் நம்

முன்னோர்கள் யாரும் ஹெல்மெட் அணிந்து கொண்டா இருந்தார்கள்? அவர்கள் என்ன முட்டாள்களா?”
மக்களிடம் வாசிக்கும் பழக்கம் அதிகமானால் அவர்களிடம் விழிப்புணர்வு அதிகமாகி அரசாங்கத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அது ஆட்சியாளர்களுக்கு ஆபத்து. ஆகவே அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றே அரசாங்கம் நினைக்கும். அதிலும் புதிய ஆசிரியன் பத்திரிகை ஆட்சியாளர்களை அதிகமாகக் கேள்வி கேட்பதால் அதன் விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே டாக்டர் ராமானுஜத்திற்கு லட்சக்கணக்கில் ரூபாய் கொடுத்து மாதாமாதம் கட்டுரை எழுத வைக்கிறது என்றும் ஒரு புரளி கிளம்பலாம்.
எதற்கும் என் வங்கி அக்கவுண்டைச் செக் பண்ணிக் கொள்கிறேன்.

(9443321004 – [email protected] )

Spread the love