September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எனது மனம் கவர்ந்த புதிய ஆசிரியன் இதழ்

எனது மனதைக் கவர்ந்து, கருத்தில் நிலைத்த பத்திரிகைகளில் புதிய ஆசிரியன் பல்சுவை இதழ் குறிப்பிடத்தக்கது. இவ்விதழின் கருத்தாழம், யதார்த்தமான நாட்டு அரசியல், சுருக்கெனவும், நகைச்சுவை உணர்வோடும் எளிதில் புரிந்து கொள்ள உதவும் கேலிச்சித்திரங்கள், அனைத்து தரப்பு வாசகர் உணர்வினையும் உயர்த்தும் நோக்கில் உள்ளடக்கச் செய்திகளை வழங்குவதில் காட்டும் அக்கறை.. இவைகளை புதிய ஆசிரியனின் சிறப்பியல்புகளாக நான் பார்க்கிறேன். புதிய ஆசிரியன் கேலிச்சித்திரங்களை போஸ்டர்களாக மாற்றி, பல்வேறு ஊர்களில் நடந்த கூட்டங்களுக்கு திரு ராஜூ அவர்களோடு நானும் எடுத்துச் சென்று சந்தாக்கள் சேர்த்த பழைய அனுபவம் மறக்கமுடியாதது. முகப்பு அட்டையிலிருந்து கடைசி பின்பக்க அட்டைவரை நேர்த்தியாக மிகக் கவனத்தோடு வெளிவரும் இதழ் இது.
கல்விச்சிந்தனை வரிசையில், நாடறிந்த முதுபெரும் கல்வியாளர் திருமிகு ச.சீ ராஜகோபாலன் அவர்களின் கல்வி குறித்த பார்வை இதழுக்கு மகுடம் போன்றது. இதுவரை நம் தேசத்தில் அமைந்த பல்வேறு கல்விக்குழுக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பு செய்த உண்மையான கல்வியாளர். அவரின் பழுத்த அனுபவங்கள், கற்பித்தலில் கைக்கொண்ட யுக்திகள் இன்றைய இளம்ஆசிரியர்க்கு நம்பிக்கை ஊட்டும் பாடங்கள். அடுத்ததாக வருபவை மணிமணியான சிறுகதைகள். ஏனோதானோ கதைகளல்ல இவை. சமூக உணர்வோடு படைக்கப்பட்டவை. இல.சண்முகசுந்தரம் உணவைக் குறைத்து உடலைப் பேணு புரிதலை ஏற்படுத்தி, நோய் பற்றிய பயம் நீக்கும் பல அரிய தகவல்களை எளிமையாக விளக்கும் நம்பிக்கையாளர். ராஜகுரு பதில்கள், ஆசிரியர் பேரா. ராஜூவின் முத்திரைப் பதில்கள். பரந்த வாசிப்பும் நகைச்சுவை உணர்வும் மிக்க அவரின் பதில்கள் என்னை மட்டுமல்ல பலரையும் ஈர்ப்பவை. திரைஞானி சோழ.நாகராஜன் அவர்களின் ராஜாங்கம். அடடா. திரையுலகம், நடிக நடிகையர், இசையமைப்பாளர்கள், பாடகர்,. என பின்னி எடுத்து விடுகிறார். இவை போக, நீளமான ஆஸ்தான எழுத்தாளர் வரிசைப்பட்டியல் உள்ளது. மதுக்கூரார், எஸ்.வி.வி, டாக்டர்.ராமானுஜம், மணிமாறன், சிதம்பரம் ரவிச்சந்திரன், ஐ.வி.நாகராஜன், நாறும்பூநாதன், உமா, ஜனநேசன், செல்வகதிரவன், சுப்பாராவ்,. என நீளும் படைப்பாளிகள் படை. கல்வியாளர் ராஜகோபாலன் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு, விழிப்புணர்வு கொண்ட மக்களாக வாசகர்கள் தரம் உயர பாடுபடும் இந்த புதிய ஆசிரியன் இதழ் பரவலாக மக்களைச் சென்றடைய நாம் உளப்பூர்வமான தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாதிப்போம்.

ஆர். ஜெயராமன், ஆசிரியர், புதுச்சேரி (9442144140)

( ஜூலை 15 அன்று நடந்த இணையவழிக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)

Spread the love