September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எதிர்வினை

கொரோனோ பயத்தில் வீட்டோடு ஒடுங்கி கிடந்த எங்களை, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் மூன்று நாட்கள் சிறு மகிழ்வுலாவிற்கு அழைத்துச்சென்றனர். உண்மையிலேயே வெளிஉலகு கண்டது மட்டற்ற மகிழ்ச்சியாக அமைந்தது. வந்ததும் பல கடிதங்கள், புத்தகங்கள் தபால் பெட்டியில் காத்திருந்தன. அதில் முதலில் நான் எடுத்தது புதிய ஆசிரியன் இதழினைத்தான். அட்டைப்படம் இந்துத்வா வன்முறையை எடுத்துக் காட்டியது. உள் அட்டை, சிரிப்போ சிரிப்பு. ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு சூப்பர். அடுத்து வந்த முதல் கார்ட்டூன் மோடி, அமித் ஷாவை எதிர் கொள்ளும் மூவர் அணி.. செம நக்கல். நாட்டுக்கு நல்லது சொல்லும் நல்கவி மு.முருகேஷ் பிரமாதப்படுத்தி இருந்தார். நமது கல்வி பிதாமகர் இராஜகோபாலன் உலகே கண்டு வியந்த ஒலிம்பிக் பற்றிய பல செய்திகளைக் கூறியதோடு, புதியதாக பள்ளிக் கட்டடம் கட்டப்படும்போது நடக்கும் விதிமீறலைச் சுட்டிக்காட்டியது பொருத்தமானது. இதழில் முத்தாக நான் கருதியது ஜனநேசன் அவர்களின் படைப்பு. என்ன ஒரு நடை… இறுதியில் கிளைமாக்ஸ் அற்புதம். ராஜகுரு அளித்த ஒரு பதிலில்,”மோடியே வரட்டும், மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும், நமக்கு நம் சுயகௌரவம்தான் பெரிது” என்று எதிர்க்கட்சிகள் நினைக்கும்வரை நம் நாட்டிற்கு விடுதலை இல்லை என்று கூறுவது 100 சதம் உண்மை. இத்தனை செய்திகளைத் தாங்கி வரும் புதிய ஆசிரியன் சந்தாக்கள் உயர கூடுதலாக முயலவேண்டும் என்ற உறுதி மனதில் வலுப்பெற்றது.

ஆர். ஜெயராமன், புதுச்சேரி


‘குருபலம் குருவான பலம்’ என்பர் மாணவர்கள். தன் ஆசிரியரை அவர்கள் நினைவு கூர்ந்து ஆசி பெற்றது அருமை. ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் பாராட்டிப் பேசியது நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. இயற்பியலின் தந்தை நியூட்டனை அனைவரும் பாராட்டியபொழுது ‘கடல் என்னும் மாபெரும் பரப்பு இருக்கும் பொழுது கடற்கரையில் மணல் வீடு கட்டி மகிழும் குழந்தை போன்றவன் நான்’ என்று அடக்கமாகக் கூறியவர். ஆசிரியர்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதைப் பெருமைப்படுத்தாமல், கல்வி வணிகர்ளைத் துதிபாடும் ஊடகங்களை என்னவென்பது ? ஜனநேசன் அவர்களின் சிறுகதை எங்கள் மனங்களை வென்றது.


மாணவர்கள் அகல்யா, கண்மணி, மாரிஸ்வரி, சுவேதா, கிஷேர், யோகிதா, மகாலட்சுமி, முகிலன்-அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்


அக்டோபர் 2021 மாத இதழில், ஆசிரியர் உமா எழுதிய கட்டுரையில், ‘பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வையில் ஆசிரியர்கள் வேலையே செய்வதில்லை என்று நினைப்பது வருத்தத்திற்குரியது.. கற்பித்தல் பணிகள், நேரடியாகவும், கணினி வழியாகவும் நீள்கிறது’ என்ற உண்மை நன்கு வெளிப்பட்டது. ஜனநேசனின் சிறுகதை அருமை. ஓட்டல் அதிபர் முருகனின் முன்னேற்றமும், முன்னர் அவனால் ஆசிரியர் கற்ற பாடத்தை எழுதிய விதமும் நெகிழ்ச்சியாக இருந்தது. பேரா. விஜயகுமாரின் வேணுகோபால் பற்றிய பாராட்டு நச். சோழ. நாகராஜனின் புலமைப்பித்தன் அஞ்சலி படிக்க விறுவிறுப்பு. மொத்தத்தில் வெகு ஜோர்.

பேரா. ஜி. ராமமூர்த்தி, மதுரை.


தலையங்கம், மு.முருகேஷின் கவிதை, ச.சீ.இராஜகோபாலனின் ‘ஓடி விளையாடு’ , ஐவி.நாகராஜனின் ‘பூவிரியும் காவிரியின்…’ தொடர், ம.மணிமாறனின் ’காற்றிலாடும் வேர்கள்’, உமாவின் ‘தமிழகப் பள்ளிச் சூழல் யதார்த்தம்’ ஜனநேசனின் ‘அன்பால் அணை’, எஸ்.வி.வி.யின் ‘உறவுகள் தொடர்கதை’ .. என அனைத்துமே அருமை. எழுத்துலகின் சாதனையாளராய்த் திகழும் தோழர் எஸ்.வி.வி. உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்தான். பொன்மொழி ஒன்று சொல்லுங்களேன் என்ற கேள்விக்கு ராஜகுருவின் பதில் நச். நெஞ்சைப் பறிகொடுத்து கேட்ட பல பாடல்கள் புலமைப்பித்தன் எழுதியவைதான் என்பதை சோழ.நாகராஜனின் கட்டுரை மூலம் அறிய முடிந்தது. இப்படிப்பட்ட ஒரு பாவலன்… எப்படி அப்படிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டில் இருந்தார் என்பது ஆச்சரியமளிக்கிறது.


சி.அ.முருகன், திருவண்ணாமலை.

Spread the love