June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

எங்கே செல்கிறது இந்தியா?

தூய்மை இந்தியா இயக்கம் –
முழக்கங்களும், உண்மைகளும்
செ. நடேசன்
‘திறந்தவெளி மலம் கழிப்பு’… கேட்கும்போதே மனதில் ஓர் அருவருப்பை ஏற்படுத்துகிறது இச்சொல்லடுக்கு. உலகின் மொத்த திறந்தவெளி மலம் கழிப்பில் 65 சதம் இன்றும் இந்தியாவில்தான் நிகழ்கிறது என்ற உண்மை உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை வெகுவாகக் குறைக்கிறது.
மலக்கழிவுகள் மூலம் பரவும் கிருமிகள் வாந்திபேதி முதலான கொள்ளை நோய்களை ஏற்படுத்துகின்றன. இதனால் இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 82 பேர் அவர்களது முதல் பிறந்த நாளுக்கு முன்பே இறந்துவிடுகின்றன. இக்கொடூரத்தை நன்கு உணர்ந்தவர் மகாத்மா காந்தி. இந்திய நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய அவர், ‘தூய்மையா? தேசத்தின் சுதந்திரமா? எது முதலில் என்றால் எனது முதல் தேர்வு தூய்மைதான்’ என்றார். நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ‘நிர்மல் பாரத் அபியான்’ போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வந்தது. ஆனால் நிலைமைகளில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை என்பதே கசப்பான உண்மை.
2014-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி 2014, 15 ஆகஸ்ட் அன்று தமது சுதந்திரதின உரையில் ‘ஐந்தே ஆண்டுகளுக்குள் – திறந்தவெளி மலக்கழிப்பு இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவேன்’ என்று சபதம் ஏற்றார். அதற்காக ‘தூய்மை இந்தியா இயக்கம் (ஸ்வாச் பாரத் மிஷன்)’ என்ற அமைப்பைப் பிரகடனம் செய்து அறிவித்தார். நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
2018-ல் மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்ததினக் கொண்டாட்டங்களைத் துவக்கிவைத்த அவர், ‘தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெற்று வருகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் இவ்வியக்கம் மக்கள் இயக்கமாக மாறி மக்களிடம் மனமாற்றத்தை உருவாக்கி வருகிறது’ என்று பெருமையுடன் அறிவித்தார். ஆனால் இந்த ஆரவார முழக்கங்களுக்கு மாறாக உண்மை நிலவரங்கள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்திடவில்லை.
கிராமப்புற இந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற பல வடமாநிலங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு இன்றும் தொடர்கிறது. இது தொடர்ந்து நீடித்து வருவதற்கான காரணங்கள் எவை? கிராமப்புறமக்கள் ஏழைகள் என்பதாலா? அங்கு கழிப்பிடங்களுக்குத் தேவையான தண்ணீர்வசதி இல்லாததாலா? அவர்கள் கல்வியறிவு பெறாதவர்கள் என்பதாலா? இவை எதுவுமே அல்ல.. மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய அமைப்புமுறையும், புனிதம், தீட்டு, தீண்டாமை என்ற கொடூரமான கற்பிதங்களும்தான் காரணம் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது டியானே காஃபே மற்றும் டீன் ஸ்பியர்ஸ் எழுதியுள்ள ‘எங்கே செல்கிறது இந்தியா? கைவிடப்பட்ட கழிப்பிடங்கள்- தடைபட்ட வளர்ச்சிகள் மற்றும் சாதியத்தின் விலைகள்’ என்ற நூல். ‘எங்கே செல்கிறது இந்தியா?’ என என்னுடைய மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த நூல் சாதி ஒழிப்பு, சமூகசமத்துவம், சமூகமாற்றம் ஆகியவற்றை தங்கள் இதயங்களில் வரித்துக்கொண்டு செயல்பட்டுவரும் அனைவரின் கரங்களிலும் ஒரு போர்வாளாக சுழலட்டும்.
வெளியீடு : எதிர் வெளியீடு, 96 நியூஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி..
விலை : ரூ.350
அலைபேசி : 99425 11302

Spread the love