September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உ.பி. முதல்வருக்குப் பாடம் கற்பிக்கப்போவது யார்?

கடலூர் சுகுமாரன்


‘அப்பா ஜான்’ என அழைக்கப்படும் மக்கள் மட்டுமே முந்தைய மாநில அரசுகளின் மலிவு விலை பொருட்களால் பலன் அடைந்தனர். ஏனைய பிரிவினர் பலன் பெறவில்லை என முஸ்லிம்களைக் குறிப்பிட்டு உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு பொய்க் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்யும் ‘அனைவரையும் உள்ளடக்கிய சுதந்திரம்’ எனும் சமத்துவத்திற்கான கோட்பாட்டிலிருந்து அந்த மாநிலம் வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது.


தாலிபான்களை ஆதரிக்கும் சில ‘வெட்கம் கெட்ட அனுதாபிகள்’ கூட இங்கே வாழ்வதாக தன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவருடைய தலைமையிலான மாநில நிர்வாகம்தான் தாலிபான்களின் முத்திரைகள் ஆன வன்முறை, வெறுப்பு, மதசகிப்பற்ற தன்மை ஆகியவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருவது இங்கே நகைமுரண்.


முதலமைச்சராக பொறுப்பு ஏற்கும் முன்னரே அவர் துவக்கிய இந்து இளைஞர் வாகினி அமைப்பு இன்று அவருடைய நிர்வாகத்தின் காவல் துறைக்குள் ஊடுருவியுள்ளது. இந்த அமைப்பினர் ‘காவல்துறையின் நண்பர்கள்’ என்ற பெயரில் அவர்களோடு இரண்டறக் கலந்து உள்ளனர்.
பசுப் பாதுகாப்பு பிரிவினர்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் லவ் ஜிகாத்திற்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விடவும் இது அவர்களுக்கு ‘அனுமதி’ வழங்குகிறது. பசுவைக் கொல்லுதல், மாட்டிறைச்சி விற்பது இரண்டும் இன்று தேசத் துரோகச் செயலாக கட்டமைக்கப்படுகிறது. தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 119 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 76 பேர் பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவர்கள். இது எப்படி தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வரும்.. அந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் அதிகாரம் ஒரு மாநில அரசுக்கு எப்படி கிடைக்கும் என்பது புரியாத புதிர்.


3 வருடத்தில் 6, 476 என்கவுண்டர்களை நடத்தினோம் என ஊடகங்களிடம் மார்தட்டிக் கொண்டது ஆதித்யநாத் அரசின் காவல் துறை. இதில் ஆகப் பெரும்பான்மையோர் பசுவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்தான். முஸ்லிம் ஆண்களுக்கும் இந்து பெண்களுக்கும் இடையிலான திருமணங்கள் மிகப் பெரும் குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கும் இந்து ஆண்களுக்கும் இடையே நடைபெறும் திருமணங்கள் இந்த வரையறைக்குள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தவறான பிரதிநிதித்துவம், படைவலிமை, தேவையற்ற செல்வாக்கு, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி, மோசடிகள் மற்றும் திருமணம் மூலம் மதமாற்றம் நடைபெறுவதை தடுக்க ஒரு அவசர சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றியது. ஒரே மாதத்தில் 86 பேர் மீது வழக்குகள்.. அதில் 16 பேர் மீது மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நேரடியான குற்றச்சாட்டுகள்.


சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்
அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களையும் இதர சிறுபான்மையினரையும் குறிவைத்து பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.கோரக்நாத் கோயில் அருகாமையில் உள்ள முஸ்லிம் குடியிருப்புகள் காலியாகி வருகின்றன. இந்த கோவிலின் தலைமை நிர்வாகியாக முதலமைச்சரே பணியாற்றும் பொழுது வேறு எப்படி நடக்கும்?
இது நடந்த ஒரு மாதத்திற்குள் “ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டனர் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தி விட்டோம்” என தம்பட்டம் அடித்தது பயங்கரவாத எதிர்ப்பு குழு. இதனை தொடர்ந்து இந்தி செய்தித்தாள்கள் மற்றும் சேனல்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரித்தன.


ஆனால் உண்மை என்ன? யாருடைய வற்புறுத்தலாலும் மதமாற்றம் நடக்கவில்லை என்ற உண்மையை சில சுதந்திர ஊடகவியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டு மாநில நிர்வாகத்தின் மோசடியை அம்பலப்படுத்தினர்.


மதுரா நகரில் இறைச்சி மற்றும் மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மறுபுறத்தில் காவல்துறையின் மறைமுக ஆதரவில் படுகொலைகளும் அதிகரித்து வருகிறது.
முஸ்லிம்கள் மட்டுமல்ல, மாநில அரசின் அதிகாரத்தை எதிர்த்து நியாயமான முறையில் போராடுவோர், புகார் அளிப்பவர்கள், அறப் போராளிகள், பாலியல் வன்முறையால் பாதிப்படைந்தவர்கள் என எவராக இருந்தாலும் அவர்களும் வெறுப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர் அல்லது பழிவாங்கப்படுகின்றனர். ஜனநாயகப் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள் ஒரு அக்கறையற்ற மாநில அரசின் வெறித்தனத்தால் குத்திக் குதறப்பட்டு தூக்கி எறியப்படுகின்றனர். குற்றவாளிகள் தங்கள் அரசியல் சமூகச் செல்வாக்கு மூலம் காவல்துறையை தங்களோடு வைத்துக் கொண்டுள்ளனர்.


உன்னோ, ஹத்ராஸ் தேசத்தின் அவமானச் சின்னங்கள்!
வறுமையில் சிக்கித் தவிக்கும் தலித் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை தாக்குதல்கள் நடப்பது அங்கே ஒன்றும் புதிய நிகழ்வல்ல.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணமும் அளித்திட முன்வராத மாநில அரசு வெறுமனே வேடிக்கை பார்த்து நின்றது மட்டுமன்றி குற்றவாளியை பாதுகாத்து வருவதுதான் கொடுமை.
உன்னோ விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிஜேபி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிப்படைந்த பெண் தீக்குளிக்கும் போராட்டத்தை முதல்வர் வீட்டு முன்னேயே நடத்துகின்றார். ஏற்கனவே சிறையில் அடைத்து வைத்திருந்த அந்தப் பெண்ணின் தந்தை அடித்தே கொல்லப்படுகிறார். குற்றவாளிகள் தப்பிக்கின்றனர்.


ஹத்ராஸ் விவகாரத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலை குற்றவாளிகளுடன் சேர்ந்து அவசரம் அவசரமாக நள்ளிரவிலேயே எரித்து சாம்பலாக்கிவிட்டு பாலியல் குற்றமே நடக்கவில்லை என்பதை நிரூபிக்க முயன்றது காவல்துறை. குற்றவாளிகளுக்கு புகலிடமும் தந்தது. குற்றத்தையும் குற்றவாளிகளையும் உலகறியச் செய்வதற்காக அந்த இடத்திற்கு விரைந்து சென்ற கேரள மாநில பத்திரிகையாளரை சிறையில் அடைத்தது..அதுவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ்!
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை இப்படித்தான் அந்த அரசு வேட்டையாடியது. காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 22 பேர் தங்களின் உயிரை இழந்தனர்.


கொரோனாவின் இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் மடிந்தனர். கங்கையில் பிணங்கள் மிதந்து வந்தன. ஒரு சில பிரிவு மக்கள் தங்கள் உறவினர்கள் இறந்தால் இவ்வாறு ஆற்றில் வீசுவது வழக்கமான ஒன்றுதான் என கூச்சமின்றி கதை அளந்தார் முதல்வர். தொற்றுநோய் உச்சத்தில் இருக்கும்பொழுது பஞ்சாயத்து தேர்தலை பிடிவாதமாக நடத்தி, 1600 அரசு ஊழியர்கள் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழக்கக் காரணமாக இருந்த யோகி இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை.
இந்துத்துவம் என்ற பெயரில் அதன் குரூர முகத்தை மறைத்து, வாய்ச் சவடால் பேசி, விஷத்தைக் கக்கி மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் உ.பி. முதல்வருக்கு பாடம் கற்பிக்கப்போவது யார்..?
(அக்டோபர் 5 ஆங்கில இந்து நாளிதழில் ஹர்ஷ் மேந்தர் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)


(94437 [email protected])

Spread the love