January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உழைக்கும் வர்க்கத்தினரிடம் உள்ள ஒரே ஆயுதம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களின் உரை, எதிர்பார்ப்புடன் இருந்த அநேக பேர்களுக்கு, ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
“நிதி நிலை சரியான உடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”, இதுதானே மாண்புமிகு முதல்வர் அவர்களின் மொத்த பேச்சின் உள்ளடக்கமும்?
“கடலில் அலை ஓயட்டும்;அதன் பிறகு குளிக்கலாம்” என்று சொல்வதைப் போலல்லவா இது உள்ளது? கடலில் அலையும் இருக்கும்; நாமும் குளிக்க வேண்டும், இக்கலை தெரியாதவரா… நம் முதல்வர் அவர்கள்..?
நிதி நிலை இப்படி இருக்கும்போதுதானே, நிதி சார்ந்த ஏராளமான அறிவிப்புகள் மாண்புமிகு முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டு வருகின்றன?அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள்/ ஓய்வூதியர்கள் என்று வரும்போது மட்டும் நிதி ஏன் தலையை உள் இழுத்துக் கொள்கிறது..?
முதல்வரே சொன்னது போன்று, அரசு ஊழியர்கள் இந்த அரசின் அச்சாணி போன்றவர்களாவர்.. அரசுடன் நிரந்தரக் கூட்டணி அமைத்திருப்பவர்களுமாவர். ஆனால்… அரசுடன் மட்டுமே அவர்களுக்கு கூட்டணி; அரசை ஆளும் கட்சியுடன் அல்ல என்பதை அறியாதவரல்ல நமது முதல்வர்!
பல லட்சம் கோடிக்கணக்கில் வரவு-செலவு செய்து வரும் அரசிற்கே நிதி நெருக்கடி எனில்… ஆயிரக்கணக்கில் சம்பளம்/ ஓய்வூதியம் பெறுபவர்கள் குடும்பத்தில் நிதி நெருக்கடி இருக்காதா..?. அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள்/ஓய்வூதியர்களின் பறிக்கப்பட்ட ஊதியக்குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பொருளாதாரக் கோரிக்கைகளை அரசு ஏற்று, ஆணைகளை வழங்கிடுமானால், அதன் வாயிலாக பெறப்படும் பணத்தை, அவர்கள் யாரும் வீட்டில் பூட்டி வைக்கப்போவதில்லை; மாறாக செலவுதான் செய்வார்கள். இதனால் கடை வீதிகளில் பணச்சுழற்சிதான் நடக்கும். இதன் வழியாக பொருட்களுக்கு தேவை ஏற்பட்டு, உற்பத்தி அதிகரிக்கும்: வேலை வாய்ப்பும் பெருகும். அவர்களில் ஒரு பகுதியினர் சேமித்தால் கூட அது தேச நலனுக்கும் உகந்ததே.
“இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற உரிமைகளை காக்கவும்,அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள்/தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்கத்தினரிடம் உள்ள ஒரே ஆயுதம் ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே!
அவ்வாயுதத்தை சங்கங்கள் கையில் எடுப்பதும், எடுக்காமல் இருப்பதும், அரசின் அறிவிப்புகளைப் பொருத்ததே!
சலீம் முகம்மது மீரான், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், தென்காசி (9488481385)

Spread the love