May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உலகின் மிகப்பெரிய மணற்கோட்டை!


சிதம்பரம் இரவிச்சந்திரன்


உலகின் மிகப் பெரிய மணற்கோட்டை டென்மார்க் நாட்டில் கட்டப்பட்டுள்ளது. முன்பு எழுப்பப்பட்ட மணற்கோட்டையை விட இது 3 மீட்டர் உயரமானது என்று கின்னஸ் சாதனை அமைப்பு கூறியுள்ளது. 5000 டன் மணல் கொண்டு கட்டப்பட்டுள்ள இதன் உயரம் 21.16 மீட்டர். 2019-ல் இதற்கு முன் உலகச் சாதனை புரிந்த உயரமான மணற்கோட்டை ஜெர்மனியில் எழுப்பப்பட்டது. 4860 டன் மணலால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பிரமிடு கட்டிட அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. டென்மார்க் நாட்டின் கடலோரத்தில் பிளோக்கஸ் என்ற சிறு நகரத்தில் இது அமைந்துள்ளது.
கோட்டையின் உச்சியில் அமைந்துள்ள பகுதி கொரோனா வைரஸின் அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இதனை வடிவமைத்து உருவாக்கியவர் டச்சு நாட்டு கலைஞர் வில்ஃப்ரெட் ஸ்டிஜர். இவருக்கு உலகின் தலைசிறந்த மணற்சிற்பங்களை எழுப்பும் 30 கலைஞர்கள் உதவினர்.கொரோனா என்ற கொள்ளைநோயின் சக்தியை எடுத்துக் காட்டும்வகையில் இந்த கோட்டை அமையவேண்டும் என்று தான் விரும்பியதாக வில்ஃப்ரெட் ஸ்டிஜர் கூறுகிறார். கோட்டையின் உச்சியில் கொரோனா வைரஸ் தலையில் கிரீடம் சூடிக்கொண்டிருக்கும் அமைப்புடன் காணப்படுகிறது.
இதன் அமைப்பைக் காணும் எவருக்கும் கொரோனா வைரஸ் விடுக்கும் செய்தி தெளிவாகப் புரியும். மனிதர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வது போல இது அமைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்ற செய்தியை கொரோனா விடுக்கிறது. கோட்டையின் உறுதித்தன்மையைப் பராமரிக்க மணலுடன் 10 சத களிமண்ணும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(73390 89961 – [email protected])

Spread the love