September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உறவுப் பொதுப்பணித்துறை

எஸ்.வி. வேணுகோபாலன்


தமது 91-ம் வயதில் கூடத் துடிப்போடு சொந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டும், வெளியே சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருந்தவருமான என் ஒன்றுவிட்ட பெரியப்பா சந்தானம் அவர்கள் கள்ளம் கபடமற்ற தெள்ளிய தூய மகத்தான அன்பின் ஒரு முரட்டு பிரதி.
என் அப்பா வருவாய்த் துறை அதிகாரி என்றால், பெரியப்பா உறவுப் பொதுப்பணித்துறை ஊழியராகவே வாழ்நாள் முழுக்க இயங்கியவர். அரசு சாராத பொதுப்பணித் துறை அது! அத்தனை பாலங்கள் கட்டி இருப்பார்- உறவுப் பாலங்கள். அத்தனை ஏரிகளுக்கு மராமத்து வேலை பார்த்திருப்பார், அன்பின் நீர்ப்பெருக்கு அது. அத்தனை சாலைகள் மறு சீரமைப்பு செய்திருப்பார்! குடும்ப உறவுகளுக்கு இடையேயான போக்குவரத்து சுமுகமாக இருக்க எப்போதும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பேச்சு கொடுத்துக் கொண்டிருப்பார். ஆம், உரையாடல் நடத்திக் கொண்டிருப்பார்.
அன்பு ஓர் எளிய நீர் நிலை. ஊற்று உள்ளிருந்து பொங்கிக்கொண்டே இருக்கத்தான் செய்யும். மனிதர்களது அலட்சியம் ஊற்றுக் கண் மீது மண்ணைச் சரியச் செய்துவிடுகிறது. பாலாற்றுப் படுகையில் ஆழமாக மண்ணெடுத்துப் பூரித்து வரும் ஊற்றுத் தண்ணீரை ரசித்து ரசித்துக் குடத்தை மெல்ல இறக்கித் தட்டித்தட்டி நீர் மொண்டு வாகாக மொத்தமும் நிரப்பும்போது என் பாட்டியின் முகத்தைப் பார்த்தது இன்னும் மின்னல் போல் நெஞ்சில் தோன்றி மறைகிறது. அருகே சிறுவர்கள் ஆர்ப்பாட்டமாக அப்போது ஓடிவந்து மணல் தெறித்து ஊற்று சிதைவுக்கு ஆளாக நேர்ந்தால் அப்படி குரல் கொடுத்து அதட்டுவார் அவர்.
அதட்டல், உருட்டல், மிரட்டல் எல்லாமே உரிமையின் பாற்பட்டு எழும் கோபங்களாகவும், பின்னர் வடிந்து அமரவைத்து இலைபோட்டு சூடாகப் பரிமாறும் உணவின் மீது கரண்டியிலிருந்து சொட்டும் நெய்யை முந்திக் கொண்டு விழும் கண்ணீர்த் துளி போன்ற அன்பின் தீபங்களாகவும் பல தலைமுறைகளின் வாழ்க்கை நிறைந்து போயிருக்கிறது.
‘ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமா’ போன்ற அந்நாளைய கொதிப்பு வாக்கியங்கள் சிலவற்றை இப்போது பரிசோதனை மேசையில் வைத்துப் பார்க்கையில், ‘பரவாயில்லையே, சண்டைன்னா ஒருவருக்கொருவர் பேசிக்கிட்டாவது இருந்திருக்காங்களே’ என்று இந்தக் காலத்து மனசு நமக்குள் பேசுவது கேட்கும். அது ஒரு கட்டம், அப்புறம் முகத்திற்கு முகம் பாராமல் திரும்பி நிற்பது, கேட்டால் பதில் சொல்லாமல் போவது, எங்கோ பார்த்துக் கொண்டு பேசுவது, மொத்தமாக ஒட்டும் உறவுமற்றுப் போவது என்பது எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான். ஆனால், உரையாடல் இருக்கும் வரையில் செடி துளிர்த்துக் கொண்டே இருக்கிறது.
உரையாடலில் இரண்டு பக்கங்களும் காது கொடுத்துக் கேட்பவராகவும், எந்த ஒரு பக்கம் குரல் உயர்த்திப் பேசும்போதும் அதட்டி அணைபோட்டு ‘அடுத்த தரப்பையும் கேளு’ என்று வழிப்படுத்துபவராகவும், அதுவரை காதில் வந்து விழுந்த சில்லறை சில்லறை சண்டைகள், புகார்கள், பழிபோடுதல்கள் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு, நிறைவுரை ஆற்றும் வேளையில், ‘அதெல்லாம் முக்கியமில்லை, குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும், நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயேன், என்ன குறைந்துவிடப் போகிறாய்?’ என்று உறவைக் காத்துக் குடும்ப நலம் பேணுபவராகவும் விளங்கியவர் பெரியப்பா.
அழைக்காமல் போய் நின்று, ‘ஒரு வாய்த் தண்ணீர் கொடு’ என்று உரிமையோடு கேட்டு நலன் விசாரித்து, சின்னஞ்சிறு தம்பதியர் என்றால் எப்படி சொல்லவேண்டுமா அப்படி, நடுத்தர வயதினர் என்றால் அதற்கு ஏற்றபடி என்று வாழ்க்கை நெறியாகவே இயங்கிக் கொண்டிருந்தது அவரது உறவுப் பொதுப்பணித்துறை இலாகா.
வாலாஜாபாத்திலும், பின்னர் காஞ்சிபுரத்திலும் கூட அணையாத அடுப்பு, யார் வந்து நின்றாலும் உணவு பொங்கிக் கொண்டே இருந்த இல்லம் என் தாய்வழிப் பாட்டி பத்தாணி அன்னையின் உள்ளம். அந்தப் பாட்டியின் சொந்தத் தம்பிதான் சந்தானம் பெரியப்பா. என் இளவயதில் பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில், ‘அக்கா’ என்ற குரலெடுத்து அவர் வீட்டினுள் நுழையவும், தம்பியை ஆசையோடு வரவேற்கும் தமக்கையுமாக அன்பின் பெருஞ்சோதிகள் இரண்டின் சங்கமம் போல் வீடு சுடர் விட்டு ஜொலிக்கும்.
உறவுகளும் நட்பும் எல்லா இடர்ப்பாடுகளின் ஊடே தழைக்கவைக்கும் மூலிகை வேர்களை இப்படியாகப்பட்டவர்களிடமிருந்துதான் அடுத்தடுத்த தலைமுறை கைமாற்றித் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். (உறவும் நட்பும் வளரட்டும்…)
(94452 59691 – [email protected])

Spread the love