June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உறவுகள் தொடர்கதை 21 அன்பு பரிமாறுவோம் பசியாறுவோம் !

எஸ்.வி. வேணுகோபாலன்
எல்லோரது வாழ்க்கையிலும் உறவுகளோடு கொஞ்சம் சிறிதாகவோ, பெரிதாகவோ உரசல், விரிசல் இருக்கக் கூடும். ’ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு’ என்பது போல் வாழவே எல்லோரும் விரும்புகிறோம். இளவயது முதல் வாய்க்கும் நட்பும், காலப் போக்கில் பெருகும் நட்பு வட்டமும் ஒவ்வொருவருக்கும் இருக்கவே செய்கிறது. அதிலும் ஒட்டுதல் போலவே வெட்டுதலும், திருப்பிக் கட்டுதலும் எல்லாம் நிகழ்கிறது.
வஞ்சனையற்ற அன்பு, நிபந்தனையற்ற நேயம், எதிர்பார்ப்பு அற்ற நட்பு என்பவை எல்லாம் எழுதிப் பார்க்க அருமையாகத்தான் உள்ளது, நடைமுறையில் ஒவ்வொருவரும் அடிக்கிற கூத்து தாங்க முடிவதில்லை என்று கருதுவோர் உண்டு. உண்மை தான். பொதுவாக, யாருக்கும் யார் மீதும் காரணமற்ற வெறுப்பு தோன்றுவது இல்லை. இரு பக்கங்களிலும் மனம் திறந்து பேசும் சாத்தியங்கள் அற்ற உறவோ, நட்போ உறுதிப்பாடாக இராது. நீடித்துத் தழைக்கவும் செய்யாது. அகவுலகில் தெறிக்கும் உணர்வுகள் யாவும் புறவுலகு நடப்புகளின் பிரதிபலிப்புகள்தான் என்கிறது சமூக அறிவியல். ’எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல்’ என்று தாயுமானவர் பாடுவது எப்போது சாத்தியம்? ’தாம் இன்புறுவது பிறர் இன்புறக் கண்டு’ என்ற வள்ளுவர் இலக்கணம் எப்போது சாத்தியம்? ’உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப வாழ்க்கை’ எப்போது சாத்தியம்? சமூகப் படிநிலைகள், பொருளாதார அடுக்குகள், பெயர் பதவி புகழ் போன்ற அம்சங்கள், ஆற்றல் அறிவு இவற்றில் ஒப்பீடுகள் ஏதுமின்றி பழக முடியுமானால் அத்தகைய அன்பு நீடு வாழ்கிறது.
அண்மையில், இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் என் சிவகடாட்சம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மன அழுத்தம் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ’எதிர்பார்த்து எதையும் செய்யாதீர்கள். அடுத்த பக்கத்திலிருந்து உங்களுக்கு அதன் நிறைவான எதிர்வினை இருக்காது, எனவே எதைச் செய்தாலும், குறிப்பாக மிக நெருக்கமான மனிதர்களுக்கு என்ன செய்தாலும் அதன் பிரதிபலிப்பு வெளிப்படும் என்று ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள்’ என்று சொன்னார். அப்படியெல்லாம் யோசித்தால் தான் இந்த ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. அதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், மனித மனம் அதை எதிர்பார்க்கத் தான் செய்யும், அது தான் வாழ்க்கை போராட்டம் என்று புன்னகையோடு சொன்னார்.
ஒரு புதிய இரண்டாயிரம் ரூபாய் தாளை எங்காவது சில்லறை மாற்றித் தரக் கேட்டால், மீண்டும் கைக்கு வந்தடையும் நோட்டுகள் அதேபோல் புத்தம் புதிய சலவை நோட்டுகளாக இருக்க வாய்ப்பு குறைவு. அதில் ஒன்றிரண்டு மிகவும் கசங்கிய நோட்டுகளாக வந்து சேர்ந்து, பின்னர் கிழிபட்டு மதிப்பிழந்து போய் நட்டத்தில் கூட முடிவதுண்டு. நோட்டு பரிவர்த்தனையில் கள்ள நோட்டு கூட வந்து தொலைத்துவிடும். ஆனால், தேவைப்படுவோருக்கு பணத்தை வழங்கி மகிழும் ஒருவருக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் கிடையாது. அதைப் பெற்றுக் கொண்டு செல்வோர் நன்றி சொல்லாமல் அகன்றாலும் வருத்தம் இல்லை. தங்களது மனநிறைவு போதும் அவர்களுக்கு. அன்பின் பூச்சொரிதல் அப்படித்தான்! பரிவர்த்தனைக்கும் பரிமாற்றத்திற்கும் உள்ள வேறுபாடு இது.
உறவோ நட்போ காற்றில் கலந்த இசைப்பாடல் போல், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தது போல், குழந்தையின் கள்ளம் கபடமற்ற புன்னகையைப் போல் அமையட்டும். மனிதர்கள் ஏன் இப்படி மாறிவிடுகிறார்கள் என்று சிந்திப்போம், மனிதர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் சமகால சூழலை சிந்திப்போம், உறவினர்களை, நண்பர்களை வெறுத்துவிடாமல் அவர்களது மாற்றத்திற்கான காரணிகளை ஓய்வு நேரத்தில் அசைபோடுவோம். ’நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச்’ செய்யக் கூட, மனிதர்களுக்கு உறவும் நட்பும் முக்கியமானது. பற்பல நூறு தலைமுறைகள் கடந்து வந்திருக்கும் மனித உறவுகள் பற்றி, இருபத்தொரு அத்தியாயங்களில் சொல்லிவிட முடியாது தான். ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் பலரது எதிர்வினைகள் கொடுத்த ஊக்கத்தில் வளர்ந்த இந்தத் தொடர் எழுதுவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக பேராசிரியர் கே ராஜு அவர்களுக்கும், புதிய ஆசிரியன் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது. உறவுகள் தொடரட்டும் ! தொடரை மட்டும் நிறைவு செய்வோம் ! நிறைவான உறவுகளுக்கு வழி திறப்போம் !
(தொடர் நிறைவு பெறுகிறது)
(94452 59691 – [email protected])

Spread the love