June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உறவுகள் தொடர்கதை 20… முடிவே இல்லாதது

எஸ்.வி. வேணுகோபாலன்


அண்மையில் நகைச்சுவை என்று சொல்லி ஒரு காணொளிப் பதிவு ஒன்றைப் பகிர்ந்து கொண்டார் நண்பர் ஒருவர். மிக அதிகம் பேர் விரும்பிக் கேட்கும் அந்தப் பேச்சாளர், ‘சொந்தக்காரன் இருக்கானே’ என்று அடுத்தடுத்து சில விஷயங்களைச் சொல்லச் சொல்ல, விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் அவையினர். நாம் கஷ்டத்தில் பரிதவிக்கும்போது, அதை உள்ளூர ரசிப்பவன் சொந்தக்காரன்.. நாம் அதிலிருந்து மீண்டுவிடக் கூடாது என்று பிரார்த்தனை செய்பவன் சொந்தக்காரன்.. தப்புத் தப்பாக அறிவுரை கூறி நாம் நாசமாகப் போகவேண்டும் என்று துடிப்பவன் சொந்தக்காரன்.. ஆகவே, சொந்தக்காரனே வேண்டாம் சார், நிம்மதியாக வாழலாம்.. என்று போகிறது அவரது பேச்சு.


நகைச்சுவைப் பேச்சில், தர்க்க ரீதியாக எதையும் பார்க்கக் கூடாது, சிரித்து விட்டுப் போகலாம் என்று சொல்வார்கள் சிலர். பேசுபவரை விட்டுவிடுவோம். சிரிப்பவர்கள் எல்லாம் யார் யார்? அவர்களும், யாருக்கோ உறவுக்காரர்கள் தானே, இவர்கள் சமூகத்திற்கு வேண்டாதவர்களா, இவர்களுக்கும் உறவினர்களே வேண்டாம் என்று பொருளா ? அல்ல, தங்களை மறந்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் சிரிக்கின்றனர், அவ்வளவுதான். ஆனால், அடிமனத்தில் பொதுவாக ஒரு நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்காவிட்டால், இதற்கு சிரிக்க மாட்டார்கள். என்ன நீரோட்டம் அது?
எல்லாக் காலங்களிலும் தரம் பிரித்தலை மனம் செய்கிறது. உறவினர்களை அதற்கேற்ற தட்டில் அடுக்கி வைத்திருக்கிறது மனம். நட்பிலும் ஒரு தரம் பார்த்தல் உண்டு. நண்பர்களை அதற்கேற்ற படிநிலைகளில் அமர்த்தி வைத்திருக்கிறோம் நாம். ‘உன்னையெல்லாம் வைக்கிற இடத்தில் வைக்கணும்’ என்று கோபத்தில் பேசுவது கூட இதன் பிரதிபலிப்புதான். சமூகத்தில் நிலவும் போலி மதிப்பீடுகள், அந்தஸ்து குறித்து பொதுப்புத்தியில் ஆழப் பதிந்துள்ள விஷயங்கள், ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும் உளவியல் தவிப்புகள் போன்றவை இந்தத் தரம் பிரித்தலுக்கு முக்கியக் காரணங்கள்.


மிக நெருங்கிப் பழகிய நண்பனை, வீட்டுக்கு அழைக்காமல் ஓட்டலில் சாப்பிட வைத்துப் பேசுபவனைக் குறித்த கவிதை ஒன்று ‘புதிய பார்வை’ இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது. பொருளாதார நிலையில் தம்மை விடக் கொஞ்சம் தாழ்வாக இருக்கும் உறவினரிடமும், உயர்வாக இருக்கும் உறவினரிடமும் மனிதர்களால் இயல்பாகப் பழக முடிவதில்லை. முன்னவர்களிடம், இருக்கும் பொருள்களைக் கூட இல்லாதது போல, அல்லது விலை குறைவானது போலப் பேசிக் கொள்வது. பின்னவர்களிடம், தம்மிடம் இல்லாத பொருள்களைக் கூட வைத்திருப்பது போலக் காட்டிக் கொள்வது. இது தனி நபர்களது பிரச்சனை அல்ல. அவர்களது தவறுமல்ல. புறச்சூழல், சமூகத்தின் இயங்குவிதி அப்படி நம்மைத் தகவமைக்கிறது.


‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையா ஏற்ற தோட்ட முதலாளி விஸ்வநாதன் பாத்திரம், இந்த அம்சத்தைச் சிறப்பாக விளக்குகிறது. தனது மேனேஜர் ஒரு கோடீஸ்வரன் மகன் என்றதும், அப்படியே பம்மி விடுவார் மனிதர்.‘அசோகரு உங்க மகரா’ என்று அவர் முத்துராமனிடம் ரவிச்சந்திரனுக்குக் கூடுதல் மதிப்பு கொடுத்துக் கேட்கும் இடம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வசனம். தனது மகன் செல்லப்பா (நாகேஷ்) காதலிக்கும் சச்சு, தன்னிடம் வேலை பார்ப்பவரின் மகள் என்று தெரிந்ததும், மிகக் கேவலமாகப் பார்ப்பார்.


மற்றவர்கள் மதிப்பீடு பற்றிக் கவலை கொள்ளாமல் தாங்கள் தங்களுக்கு நேர்மையானவர்களாக இருக்கும் மனிதர்களுக்கு, வாழ்க்கையில் எல்லோரோடும் இயல்பாகப் பழக வாய்க்கிறது. அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, இவர்கள் என்ன பேசிக் கொள்வார்களோ என்ற கவலைகளுக்கு ஆட்பட்டுவிடும் மனிதர்களுக்கு இந்த மன அழுத்தம் வாழ்நாள் துணைவராக உடன் வாழ்கிறது. இப்படியான வாழ்க்கை ஓட்டத்தில்தான், சொந்தக்காரர்கள் குறித்த நையாண்டிப் பேச்சு, தர்க்கங்களை மறந்து சிரிக்கத் தூண்டுகிறது. எல்லோரையும் சமமாக பாவிக்கும் உளவியல் கூறுகள் கொண்டிருப்போருக்கு இவற்றை ரசிக்க இயலாது. பாசாங்கு, பாவனை, புறம் பேசுதல், எப்போதோ நடந்தவற்றைச் சொல்லிக் காட்டுதல் இன்னபிற பண்புகள் யாரோ சிலருக்கு இருப்பதாலேயே அது உலகப் பொதுவிதி ஆகிவிடாது! அன்பின் ஈரம் உறிஞ்சி ஈர்க்கும் மனிதர் கசப்பான நினைவுகளைக் கசக்கித் தூர எறிந்துவிட்டு, இனிய தருணங்களை மறுபதிப்பு செய்யத் தூண்டுதல் பெறுவார்.


சொந்தம் எப்போதும் தொடர்கதைதான், முடிவே இல்லாதது (பிராப்தம்) என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகள் எத்தனை அருமையானவை.
( உறவும் நட்பும் வளரட்டும்…)
(94452 59691 – [email protected])

Spread the love