September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உறவுகள் தொடர்கதை 18 காசோலையும் அன்பின் சோலையும்

எஸ்.வி. வேணுகோபாலன்


’நல்லது கெட்டதுகளில் கலந்துக்க வேண்டாமா?’ என்று சமூகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. குடும்பங்களில் திருமணங்கள் போன்ற நிகழ்வுகள் நல்லதிலும், மரணம் போன்ற துயரமிக்க நிகழ்வுகள் கெட்டதிலும் சேர்த்தி. குடும்பங்களில் இப்படியான தருணங்களில் விலகி நிற்கும் உறவுகள் கொஞ்சம் நெருங்கி வருவதும், அல்லது, இன்னும் விலகிப் போய்விடவும் நேர்வதுண்டு.
அண்மையில், நண்பர் ஒருவர் தமது நடுத்தர வயது உறவினர் ஒருவர் எதிர்பாராமல் மரித்த செய்தியை அதிர்ச்சியோடு சொன்னார். அதைவிடவும் அதிர்ச்சியை, இறந்தவரது குழந்தைகள் கேட்ட கேள்வியில் உணர்ந்ததாகப் பின்னர் பேசும்போது தெரிவித்தார். தங்களுக்கு இத்தனை அத்தைகள் உண்டா, தெரியாதே என்று அழுதார்களாம் அந்தப் பிள்ளைகள். ஏதோ பரஸ்பர கோபதாபங்களில் அற்றுப் போயிருந்த உறவுகள், மனிதரே அற்றுப்போனதும் தாளமாட்டாது வந்து கதறுகிற சோகம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

இன்னின்னார் வருவார்கள் என்று அறிய வாய்ப்பின்றி விடைபெற்றுச் சென்றுவிட்ட அந்த உயிருக்கு அந்த இணைப்பைச் சொல்வது எப்படி?நம் பண்பாட்டில் ஒரு நியதி கூட உண்டு, அழைக்காவிட்டால் திருமணத்திற்குப் போகாமல் இருக்கலாம், மரணச் சேதி அறிய வந்தாலே, அவசியம் நேரில் சென்று அந்தக் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். மனித மனதிற்கு அதிக அளவு இன்பமோ, துன்பமோ தாங்கும் ஆற்றல் இருப்பதில்லை. இரண்டையும் பகிர்ந்து கொள்வது இயற்கையிலேயே உடலியல் தேவையாக உள்ளது. அதுதான் உளவியல் தேடுதலாகவும் அமைகிறது. பகிர்ந்து கொள்ளுதல் ஒரு பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. உடல் நலத்தை, உள்ளத்தின் நலத்தை பாதுகாப்பது உறவுகளையும் பாதுகாத்து அருள்கிறது.


ஆனால், அழைக்காமல் ’நல்லதுக்குப்’ போய் நிற்பது எப்படி ? இன்னும் பிரச்சனைகள் ஆழமாகி விடாதா என்று கேட்கிறீர்களா? தவிர்க்க முடியாத பிரிவுகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கான திறப்புகள் நிச்சயம் புலப்படும். உறவிலும், நட்பிலும் சின்னச் சின்ன உரசல்கள் ஏற்படவே செய்யும். அவற்றை நீடிக்காது பார்த்துக் கொண்டால், நிரந்தரப் பிளவுகள் உற்பத்தி ஆகிவிடாது. குணப்படுத்தாது உடலில் உறுத்திக் கொண்டிருக்கும் புண்கள், பின்னர் பெரிய பிரச்சனையாக மாறும் என்று மருத்துவ நண்பர் பி வி வெங்கட்ராமன் அவர்கள் சொல்வதுண்டு. அதற்கான சிகிச்சை என்ன என்பதும் முக்கியம்.


சிலர் ’இப்போதே போய் மூஞ்சிக்கு நேரே கேட்டுவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று புறப்பட்டு விடுவார்கள். ’நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை’ என்று அப்படியே வெடித்து எழுவார்கள். மனித வாழ்க்கையில் குறுக்கே திடீர் திடீர் என்று எழுந்து நிற்கும் தூண்களில் பலவும் அவரவர் எழுப்பிக் கொண்டதாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. அவற்றை அகற்றுவதற்கு விசை இந்தப் பக்கத்தில் இருந்து மட்டும் அழுத்தினால் போதாது, அடுத்த பக்கத்தில் இருப்பவரது காயம் ஆறி விட்டதா பார்க்க வேண்டும். ஊரிலேன் என்று சொல்லும் தொண்டரடிப்பொடி ஆழ்வார், காணி இல்லை என்று அடுத்த பிரச்சனை சொல்கிறார். அதற்கும் அடுத்த இடத்தில் உறவு மற்றொருவர் இல்லை என்கிறார். இதில் மற்று ஒருவர் என்கிற சொல்லாட்சி முக்கியமானது. உறவினரோ, நண்பர் என்று சொல்லிக்கொள்ளவோ யாருமில்லை. யாருமில்லாமல் வாழ்வது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், யாருமில்லை என்று ஏங்கும் மனிதர்கள், அந்த உறவுகளை இழக்காமல் இருப்பது வாழ்க்கைக்கு இன்பம் சேர்க்கிறது.


அன்பின் வறுமை மனிதர்களால் ஒருபோதும் சுமக்க முடியாதது. வங்கியில் அவரவர் கணக்கில் இருப்பு என்னவோ அதற்குண்டான தொகைதானே திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்? நாம் அன்பு செலுத்தாத உலகிலிருந்து அன்பை எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? தாங்கள் அன்பு பாராட்டிய மனிதர்கள் கூடச் சில சமயம் கைவிட்டு விடுகின்றனர் என்று சிலர் வருத்தத்தோடு சொல்வதுண்டு. அதற்கும் வங்கிக்கணக்கில் இருந்தே பதில் இருக்கிறது. காசோலையில் தேதி, கையெழுத்து மற்ற விவரங்கள் எதிலும் பிசகி விட்டால், கணக்கில் பணம் இருந்தாலும் காசோலை திரும்பி வந்து விடுகிறது அல்லவா? நான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன்.. ஆனால், நீ என் மீது அதே அன்பைப் பொழிய வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?
நட்போ, உறவோ உள்ளார்ந்த அன்பில் உறுத்தல் இல்லாத உவகையோடு கொண்டாடலாம். (உறவும் நட்பும் வளரட்டும்…)

(94452 59691 – [email protected])

Spread the love