September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உறவுகள் தொடர்கதை 17 ஆரோக்கிய வாழ்வினையே காப்பது நட்பு

எஸ்.வி. வேணுகோபாலன்


வங்கியில் உடன் பணியாற்றிய நண்பர் முத்துகிருஷ்ணன் ஒரு நாளேட்டுச் செய்தி அனுப்பி இருந்தார். நமது தொலைக்காட்சி பட்டிமன்ற விவாதப் பொருள் போல மாற்றி வாசித்தால், அந்தச் செய்தியின் தலைப்பு இப்படி இருக்கும்:


‘நமது உடல் ஆரோக்கியத்திற்கும், மன நிம்மதிக்கும் பெரிதும் துணை புரிபவர்கள் உறவினர்களா, நண்பர்களா?’


2 லட்சத்து 80 ஆயிரம் பேரிடம் (இங்கே அல்ல!) அமெரிக்காவில் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில், குறிப்பாக முதியோர் விஷயத்தில், அவர்களது சிறப்பான வாழ்க்கைக்கு உதவியாக இருப்பது உறவு முறைகளை விடவும் அவர்கள் பேணிக்காத்து வரும் நட்புதானாம். இப்படிச் சொல்லியிருக்கிறார் மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் வில்லியம் சோபிக். அந்த ஆய்வில் வேறு சில செய்திகளும் உண்டு. மூத்த மனிதர்களுக்கு நட்புறவில் ஏதும் சிக்கல்கள் ஏற்படும்போது உடல் நலம் குன்றிப் போவதும், நண்பர்களிடையே இணக்கமான ஆதரவு உறுதிப்படுகையில் உடல் நலம் சிறப்பாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாம்.


இருக்கட்டும், பொதுவாக, உறவுக்காரர்களை விடவும் நண்பர்களே சிறந்தவர்கள் என்ற வாதங்கள் இங்கும் முன்வைக்கப்படுபவைதான். அதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. தமது நண்பருக்குக் கொஞ்சம் காசு பணம் கூட இருந்தாலோ, தம்மை விடக் கொஞ்சம் சுமாரான வாழ்க்கை அமைந்தாலோ யாரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதில்லை. உறவினர்கள் அப்படியில்லை, சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார்கள் என்பது வழக்கமான பார்வை.


இப்போது, மேலே சொன்ன ஆய்வுக்குச் செல்வோம். அன்பும், ஆதரவும், இணக்கமான துணையுமாக ஒரு நண்பர் வாய்த்திருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியான நல்ல நண்பர், தனது உறவினர்களுக்கும் உதவிகள் செய்பவராக, ஆலோசனை சொல்பவராக, பக்கபலமாகத்தானே இருப்பார்? அவர்களுக்கு அவர் உறவினர் முறைதானே? உலகம் முழுவதும் இருக்கும் சிறந்த நண்பர்கள் தத்தமது உறவினர்களுக்குச் சிறந்த உறவுகளாகத்தானே அமைந்திருப்பார்கள்?


இதற்கான விடை, நம் வழக்கமான உரையாடலில் இருக்கிறது. சிலர் தமது நெருக்கமான உறவினரை வெளி மனிதருக்கு அறிமுகம் செய்கையில், ‘இவர் எனக்கு அத்தை பையன்னு பேரு, ஆனால், அதுக்கும் மேலே, ஒரு நண்பன் மாதிரி’. அதன் பொருள் என்ன, உறவுமுறைக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத, இன்னது வேண்டும் என்று கேட்கத் தயங்குகிற எதையும் நண்பர்களிடையே மனம் திறந்து பேசிவிட முடியும் என்பதுதான்! இது நட்பின் இலக்கணம், நட்பின் உன்னதம் அல்லது நட்பின் வலு என்று வைத்துக் கொள்ளலாம். உறவினர்களுக்கு இடையே ஏன் இது சாத்தியம் இல்லை?


உறவுக்காரரை விட, நண்பர்கள் மீது அதிக மதிப்பு வைப்பதால்தான், அந்த நட்பில் விரிசல் ஏற்படும்போது மனிதர்கள் அதிக தவிப்புக்கும், உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். அது நண்பரை நோக்கிய கசப்பிலிருந்து வாழ்க்கையின் மீதான வெறுப்பாகக் கூட நகர்ந்து விடுகிறது.

சமூகத்தின் இயங்கு விதிதான் இந்த இரண்டுக்குமே காரணம். உறவுகளுக்குள் பிடிமானம் அற்று வெறுத்த மனம் வெளியே ஒரு நேயத்தை எதிர்பார்க்கும்போது நல்ல நண்பர்கள் வாய்ப்பது மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசமாக அமைகிறது. புதிய இலைகள் துளிர்க்கின்றன. பூக்கள் மீண்டும் பூக்கத் தொடங்குகின்றன. ஆனால், அங்கே ஒரு சூறைக் காற்று வீசினால், நட்பு மரம் தாங்கமாட்டாது சரிந்து விடுகிறது. உறுதியான நட்பு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது.


’குகனொடும் ஐவரானோம்’ என்ற கம்பனின் இலக்கிய வரியை எடுத்துக் கொள்வோம். வீடணனை நட்பு கொள்கையில், இராமன் சொல்வதாக வரும் செய்யுள் வரி இது. நண்பரைத் தனது தம்பியாக ஏற்றுக் கொள்ளும் மனத்திற்கான எடுத்துக் காட்டு அது. உறவினரை நண்பராகக் கொண்டாடும் மனநிலை வேறொன்று. சக மனிதர்களை நிபந்தனைகள் அற்று நேசிக்கும் மனம் கொண்டிருப்போர்க்கு நண்பர்களைப் போலவே உறவினரையும், உறவினரைப் போல நண்பரையும் கொண்டாட முடிகிறது.


(உறவும் நட்பும் வளரட்டும்…)
(94452 59691 – [email protected] )

Spread the love