எஸ்.வி. வேணுகோபாலன்
உறவுகளைப் பேணுவது குறித்த இம்மாத சிந்தனையைத் தூண்டுபவர் என் வாழ்க்கையின் முக்கியமான மனிதர். அண்மையில் மறைந்த என் அன்புத் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள். நெருக்கமான உறவினர்களுக்கு அவரவர் பிறந்த நாள் வாழ்த்தும், அவர்கள் முன்னோர் நினைவு நாளும் இவராக அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர், தாம் மறைவதற்கு முதல் நாள் வரை, அந்த 94 வயதில் ! குரல் கேட்டல், நேரில் பார்த்தல், பரஸ்பரம் நலம் விசாரித்தல், முடிந்த உதவி செய்தல் போன்ற எளிய மந்திரங்கள் வைத்திருந்தார் வாழ்க்கையை இனிதாக அமைத்துக் கொள்ள.
அழைப்பிதழ் என்று வந்துவிட்டால், உள்ளூர் நிகழ்வு எனில் விடாது போய்க் கலந்துகொண்டு வாழ்த்தி விட்டு வருவார்.. இயலாமல் போனால் வீட்டிலிருந்து யாரையாவது அனுப்பி வைத்து விடுவார். கொரோனா தொற்று காலத்திற்கு முன்வரை, நெருக்கமாக அறிந்த மனிதர்கள் இல்லத்தில் இழப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த மாத்திரத்தில் நேரே போய் நின்று ஆறுதல் சொல்லிவிட்டுத்தான் திரும்புவார்.
கோபதாபங்கள் அற்றவர் அல்ல, ஆனால், அதை மூன்றாமவர் மூலம் சொல்லித் தெரிவிக்காமல் சம்பந்தப்பட்டவரோடு நேர்படப் பேசி சரி செய்து கொள்ளவோ, வாய்ப்பு இல்லை எனில் விட்டுவிடவோ காலப்போக்கில் பழகிக் கொண்டிருந்தார். ஆறாதரணங்களைக் கூட, ‘சரி அவர்கள் பக்கத்து நியாயம் ஏதாவது இருக்கும்’ என்று ஆற்றிக் கொண்டு அவர் பேசக் கேட்டதுண்டு. தாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்று மனத்திற்குப் பட்டால், ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாதவர்தான்..ஆனால், உறவுகள் கெட்டிப்பட்டுத் தழைக்க வேண்டும் என்று அடுத்த கணமே தன்னியல்பு நிலைக்குத் தம்மை மீட்டெடுத்துக் கொண்டு விடுபவர். தம்மை ஏமாளியாக நிறுவ ஒரு போதும் இடம் தர மாட்டார், ஆனால், நிம்மதி தொலைத்துப் புலம்புவதை விட அடுத்த கட்டத்திற்கு நகரும் ஆரோக்கியமான அணுகுமுறை கற்றிருந்தார். வருவாய்த் துறையில் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து டெபுடி கலெக்டர் பொறுப்பில் மிகுந்த கண்டிப்போடு நேர்மையின் நெருப்புச் சுடராக ஒளிர்ந்த அந்த மனிதர், எப்படி எல்லோரது அன்பையும் பெற முடிந்தது எனில், வெறுப்பின் விளிம்புக்குச் செல்லாதவராக இருந்தது ஒரு காரணமாக இருக்கக் கூடும். அவர் அடிக்கடி சொல்லும் குறள் வரி, ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்பது. வேகமாகக் கையை ஓங்கி, மெதுவாகத் தட்டி விட்டுவிட வேண்டும் என்று சொல்வார். உரத்த குரலெடுத்துக் கடிந்து கொண்டாலும், அன்பு மேவிட ஆட்கொண்டு அடுத்த முறை நாம் பிழை செய்யாதபடி நடத்துவார்.
எழுத்தாளர் ஆர்க்கே (ராமநாதன்), அண்மையில் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகள் பாருங்கள்:
உன் பொய் என்று நானும்
என் பொய் என்று நீயும்
பிறர் கொடிகளில்
உலர்த்திக் காயப்போட்ட
குண நிர்வாணங்கள்
குவிந்து கொண்டே போகிறது
எனக்கும் உனக்கும் என
இனி…செய்வதற்கு ஒன்றுமில்லை போல..
வெறுப்புச் சிலந்திகள்
தம் வலைகளைப் பின்னத்
தொடங்கி விட்டன –
நமக்குள் கொஞ்சமே மிஞ்சியிருக்கிற
கால இடுக்குகளில்!
இந்த அருமையான கவிதையின் தாக்கத்தில், நண்பர் விஸ்வநாதன் ரமேஷ் (பூர்ணம் தியேட்டர்ஸ் நடிகர்) எழுதியதிலிருந்து சில துளிகள்: ‘…வயது ஆக ஆக என் மனத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லோரும் வேண்டும். என் அன்பு எப்பொழுதும் உண்டு. நீ தயங்கினாலும் அன்பை யாசிக்க நான் தயங்கியதில்லை. கிளைகளை விரித்து உலகத்தைத் தழுவும் மரமாக நான் விழைகிறேன். அன்பில் வாழ்ந்து அன்பில் கரைந்து அன்புடன் விடைபெற்றுக் கொள்வேன் ஒரு நாள்’
அன்பில் கரைதல் என்பது காயத் தழும்புகளைக் கூட மறந்துவிட்ட மனநிலை. மகத்தான வாழ்க்கை. முயற்சி செய்து பார்ப்பதில் தவறு இல்லை.
(உறவும் நட்பும் வளரட்டும்…)
(94452 59691 – [email protected])
படம்: Venu
More Stories
அறைகூவல்
முதுமை வ(மு)ழங்கிய புதுமைகள்..!
வண்டிக்காரி