September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உறவுகள் தொடர்கதை-14 

உறவும் நட்பும் பாயசம்தான்!
எஸ்.வி. வேணுகோபாலன்
சைகாலஜி தேர்வு ஒன்றில், `உனக்கு மிகவும் கெடுதல் செய்யும் எதிரிகள் என்று யார் யாரைச் சொல்வீர்கள்’ என்று ஒரு கேள்வி கேட்டிருந்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். தான் மிகவும் யோசித்துப் பார்த்தும் அப்படி ஒருவர் பெயரையும் தன்னால் எழுத முடியவில்லை என்றும் சொன்னார். தருமனுக்குப் பார்ப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள்.. துரியோதனனுக்குப் பார்ப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. பாரதம் தெரிந்த குழந்தைகள் நிச்சயம் குறுக்குக் கேள்வி கேட்பார்கள்.. தருமன் ஏன் சண்டைக்கு ஒப்புக்கொண்டான்.. துரியன், கர்ணனைக் கெட்டவனாகவா பார்த்தான் என்று.
அப்படி யாரைப் பார்த்தாலும் நல்லவராகச் சொல்லவோ, யாரையும் தேறாது என்று ஒதுக்கவோ மனிதர்கள் பழகிக் கொள்வதில்லை. சொல்லப் போனால், வாழ்க்கை ஆட்டத்தில், இடது பக்கம் இருக்கும் காய்கள் சிலவற்றை வசதிக்காக வலது பக்கமும், சிலவற்றை அங்கிருந்து இந்தப் பக்கமும் மாற்றிவிடுகிறோம். உணவுப் பழக்கமே உடல் நிலைமைக்கேற்ப, வயதுக்கேற்ப மாறுவதில்லையா, ஆசையாக ருசித்த பழத்தை, இனிப்பை தூர விலக்கி வைத்து விடுவது இல்லையா, அப்படித்தான்…உறவென்ன நட்பென்ன, நிலைமைக்கேற்பப் பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதான் என்று சிந்திப்போரும் உண்டு. உடை, உணவுப் பழக்கம், திரைப்பட ரசனை போல அல்ல உறவுகளும், நட்பும்.
அண்மையில் மறைந்த அற்புத மக்கள் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களை தங்கர் பச்சான் நேர்காணல் செய்த காணொளிப் பதிவில் ‘புதுவையிலேயே இருக்கீங்களே, இடைசெவல் கிராமத்துக்குப் போகலேன்னு வருத்தம் உண்டா’ என்று. `இல்லை’ என்கிறார் நைனா. அதற்கான பதிலில் அவரது கண்கள் பேசுவதைப் பார்க்கவேண்டும். `என் வயசுக்காரன் யாரும் இப்போ இல்ல’ என்கிறார். அந்த ஒற்றை வரியில் ஒரு துயரச் சிறுகதை பொதிந்து இருக்கிறது.
சம வயதுக்காரர்கள் என்பது மிகவும் நுட்பமான ஒரு விஷயம். ஒரு செய்தியைப் புதியவர் ஒருவரிடம் சொல்வதும், சம வயது நெருக்கமானவர் ஒருவருக்குச் சொல்வதும் வெவ்வேறான அனுபவத்தைக் கொடுக்கும். கண் பாராது, கை வலிக்காது, நாள்பட்டு அன்பினால் நெய்த பல வண்ணத் துணி இந்த உறவும் நட்பும். அல்லது செதுக்கிய சிற்பம். அல்லது தீட்டிய ஓவியம். மனிதர்களின் பலவீனம், வெறுப்புணர்வு. அதனால் பிறக்கும் கோப உணர்ச்சி. ஆசை ஆசையாய் நெய்த துணியை சாம்பலாக்கி விடும். கோபக் கோடரி, சிற்பத்தை நொறுக்கிவிடும். ஓவியம் கிழித்தெறிந்து வீசப்படும். நட்பும் உறவும் சிதறிப்போகும்போது நெருக்கத்தின் அழுத்தத்திற்கேற்ப வலிக்கவும் செய்கிறது.
தங்களுக்கு நல்லது நடந்தால் குடும்பத்தில் இன்னின்னார்க்கு ஆகாது, தங்களுக்கு எப்போது கஷ்டம் வரும் என்று பார்த்துப் பாயசம் வைத்துக் குடிப்பார்கள் சிலர் என்று சலித்துக் கொள்வோர் உண்டு. தமிழ் இலக்கிய உலகம் நூற்றாண்டு கொண்டாடும் தி. ஜானகிராமன் அவர்களது அசாத்திய சிறுகதை ஒன்றின் தலைப்பே `பாயசம்’ தான்.
தனது அண்ணன் மகன் கண்ணெதிரே வளர்ந்து வெற்றிகரமாகத் தொழில்கள் நடத்தி, தனது மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் நடத்துவதை செரிக்க முடிவதில்லை சித்தப்பாவுக்கு. மனைவியை இழந்தவர் அவர். அவள் இருக்கும்போதே அவரது குணக்கேட்டைக் கண்டித்தவள் அவள். அண்ணன் மகனும் இவர்பால் அன்பு கொண்டிருப்பவன்தான். வாழ்க்கை இழந்த மகள் வீட்டில். தாங்க முடியாத வன்மத்தில் ஒரு கட்டத்தில், திருமண மண்டபத்தில் எல்லோரும் முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவதைப் பார்க்கத் திரண்டிருக்கும் வேளையில், இவர் மட்டும் யாருமற்ற சமையல் கூடத்திற்குள் நுழைந்து, மிகப் பெரிய பாயச அண்டாவைத் தூக்கி சாக்கடையில் கவிழ்த்து விடுவார். அதில் எலியொன்று விழுந்து நீந்திக் கொண்டிருந்தது என்று சாதிப்பார்.
கதையின் முடிவில், மகள் கேட்பாள், அவ்வளவு பெரிய பாத்திரத்தை எப்படி சாய்த்தாய் என்று. கற்பனைக் கதை என்று தோன்றினாலும், மானசீகமாக இப்படியாகத் தூக்க முடியாத அண்டாக்களை எடுத்துக் கவிழ்த்துவிடும் ஆத்திரம் சிலருக்குத் தோன்றிவிடுகிறது. சுமக்க முடியாத அளவு வெறுப்பும் கசப்பும் உள்ளே மலைபோல் குவிந்து விடும்போது அது நிகழ்ந்து விடுகிறது.
ஆனால், அந்தப் பாயசம் நாம் எடுத்து இலையில் பரிமாறி இருக்க வேண்டியது, தானும் ரசித்து உண்டிருக்க வேண்டியது என்ற உணர்வு தூக்கலாக இருந்தால், வாழ்க்கையின் தன்மை வேறாக அமையக் காத்திருக்கிறது.
(உறவும் நட்பும் வளரட்டுமே)

(94452 59691 [email protected])

Spread the love