June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உயர்கல்வியை மடைமாற்றம் செய்ய தேசிய கல்விக் கொள்கை தீவிர முனைப்பு

பேரா.பொ.ராஜமாணிக்கம்
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ, ஒன்றிய அரசு ஜூலை 2020 முதல் அமல்படுத்த தீவிரமாக முனைப்பு எடுத்து வருகிறது. குறிப்பாக கல்லூரிக் கல்வியில் அதன் திட்டங்களைச் செயல்படுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மானியக்குழு நேரடியாகக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்புகிறது. தற்போது தேசியக் கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை தனியார் பல்கலைக்கழகங்கள், சுயநிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் அமல்படுத்தியே வருகின்றன. பல தனியார் பல்கலைக்கழகங்கள் மருத்துவம், விவசாயம், சட்டம், கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனக் கல்வியை வழங்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. நான்காண்டு பட்டப் படிப்புகளைத் துவக்கி இடையிலேயே விலகி சர்ட்டிஃபிகேட், டிப்ளமோ, பட்டம் எனப் பெறலாம் என அறிவித்து பல துறைகளை நடத்தி வருகின்றன. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இந்த முறை அமலாகி வருகிறது. தேசிய கிரெடிட் திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசோ, உயர்கல்வித் துறையோ, தமிழ்நாடு உயர்கல்வி மன்றமோ, பல்கலைக் கழகங்களோ இதனைக் கண்டு கொள்ளவில்லை.
தற்போது நவம்பர் 18, 2021 தேதியிட்ட கடிதம் மூலம் கீழ்க்கண்ட திட்டங்களை அமல்படுத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ‘தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமான தரமான கல்வி மூலம் உலகளவில் அறிவு வல்லரசாக திகழ்வ தற்கு உயர்கல்வி நிறுவனங்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். பல கல்வி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தேசிய கல்விக் கொள்கையினை அமல்படுத்தி அதன் நோக்கங்களை செயல்படுத்தி வருகின்றன. எனவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்கி தொடர்ந்து ஒரு கால அட்டவணையுடன் முன்னேற்றங்களைக் கண்காணித்து வர வேண்டும்’ என அலுவலகக் கடிதம் அனுப்பியுள்ளது.
இதில் முக்கியமான, ஆபத்தான பரிந்துரைகளைப் பார்ப்போம்:
தேசிய மதிப்பெண் வங்கி
மாணவர்களுக்குக் கிரெடிட் வழங்கும் முறையில் தேசிய அளவில் ஒரு மதிப்பெண் வங்கி உருவாக்கி உள்ளனர். இந்த கிரெடிட் மதிப்பெண் முறை என்பது ஏற்கனவே பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சுய தெரிவு மதிப்பெண் பெறும் முறை (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்) என்ற முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் படிக்கும் படிப்புகளுக்கு அகில இந்திய கிரெடிட் கிடைக்கும். ஆன்லைன் வகுப்புகளைப் படிப்பதற்கு பாடத் திட்டமும் அதற்குரிய கட்டணமும் பாடம் நடத்துபவரே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதால் கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் சவாலாக அமையும். மேலும் ஸ்வயம் என்ற போர்டல் மூலம் ஆன்லைன் கல்வி பெறுவதை 20 சதவீதத்திலிருந்து 40 சதம் என்ற அளவிற்கு உயர்த்தலாம் என்ற பரிந்துரை முறையான வகுப்பறைக் கல்வியை முடக்கும் முயற்சியே.
சேர்தல்-விலகுதல்-சேர்தல் முறை
பட்டப் படிப்பில் பலமுறை சேர்ந்து, பல முறை விலகும் வாய்ப்பினை மாணவர்களுக்குக் கொடுக்கும் கல்வி என்பது ‘செத்துச் செத்துப் பிழைப்போம் வா’ என்று அழைப்பது போன்றதுதான். ஒரு முறை கட்டணம் செலுத்தி படித்து முடித்து வரும் முறையில் உள்ள வாய்ப்புகளை இது ஒழிக்க நினைக்கிறது. அதாவது இன்று தமிழகத்தில் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி என்றிருக்கும் கட்டமைப்பை இது சிதைத்துவிடும். ஒவ்வொரு முறையும் சேர்ந்து விலகும் போதோ அல்லது வெவ்வேறு கல்லூரிகளில் விலகி விலகிச் சேரும்போதோ யார் கட்டணம் கட்டுவது? விலகி விலகிச் சேர்ந்து படிப்பது என்ற நடைமுறையில் உயர்கல்வியில் சுனாமி போன்று மாணவர்களின் இடைவிலகல் நடைபெறும்.
தொலைதூர, ஆன்லைன் கல்விமுறைத் தீவிரம்
இன்னும் பத்து வருடங்களில் உயர்கல்வி சேர்க்கையை 50 சதம் உயர்த்த வேண்டும் என மார்தட்டிக் கூறிவிட்டு இப்பொழுது அதற்குத் தேவையான உயர் கல்வி நிலையங்களை அதிகரிக்காமல் தொலை தூரக் கல்வி, ஆன்லைன் கல்வி எனப் பேசுவது ஒன்றிய அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. இது தொலைதூரக் கல்வி, ஆன்லைன் கல்வி மூலம் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் குள்ள நரித்தனமான வேலை ஆகும்.
உயர் கல்வியை சர்வதேசமயமாக்கல்
உயர் கல்வியை சர்வதேசமயமாக்க பல்கலைக்கழகங்களில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அந்நியப் பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவதற்குப் பச்சைக் கொடி காட்டப்படும் திட்டம் ஆகும். உள்ளூர் துறைகள் மூடப்படுவது தொடங்கும். அந்நிய நாட்டுப் பேராசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும். நம் நாட்டுப் பேராசிரியர்கள் ஓரம் கட்டப்படுவர். அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கும் அமைப்பாக நமது உயர்கல்வி நிறுவனங்கள் மாறிவிடும். உயர்கல்வி நிலையங்களை சர்வதேசமயமாக்குதல் என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளை ஆகும்.
நிறுவனங்கள் தர மேம்பாடு
தர மேம்பாடு குறித்த வழிகாட்டலில் ஏன் இத்தனை வகையான சம்ஸ்கிருத வார்த்தைகள்? உயர் கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே தரம் உயர்த்திக் கொள்ளும் வழிகாட்டுதலில் ஆசிரியர், மாணவர்களைத் தயார்படுத்துதல் என்பது காலங்காலமாக எல்லா உயர் கல்வி நிலையங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு காலத்தில் இலவசமாக நடந்து கொண்டிருந்த இந்த தயார்படுத்துதல் தற்போது அதற்கென கட்டணம் கட்டும் நிலைக்குச் சென்றுள்ளது. இது கட்டண உயர்வுக்குத்தான் வழி வகுக்கும்.
சேவை மனப்பான்மை
மாணவர்களுக்கு சேவை மனப்பான்மையை தேசிய சேவைத் திட்டம் மூலம் உருவாக்கி வந்தனர். தற்போது அது நிதிப் பற்றாக்குறையால் முடங்கியுள்ளது. பரிந்துரை மட்டும்தான் இருக்கிறது.
அனைத்தும் நிதி சார்ந்தது
அடிப்படைக் கட்டமைப்பு உட்பட சுயமான தர உயர்வு வழிகாட்டும் திட்டங்கள் யாவும் நிதி சார்ந்த செயல்பாடுகளே. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கொள்ளை அடிக்கவும் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பின்தங்கி தரந்தாழ்ந்து விட்டன என மதிப்பீடு செய்வதற்கும் மட்டுமே உதவி செய்யும்.
எனவே தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து உள்ள சூழலில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மூலம் மேற்கண்ட பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலர், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (தொடர்புக்கு : 96980 25569)
நன்றி : தீக்கதிர்

Spread the love