June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உத்திரமேரூர் கல்வெட்டும் ஆதார் அட்டை அரசியலும்

மதுக்கூர் இராமலிங்கம்
சைவ உணவு சமைப்பது எப்படி என்ற மாநாட்டிற்கு ஓநாய் தலைமையேற்பது போல, அமெரிக்கா தலைமையில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க சீனாவிற்கும் பிற சோசலிச நாடுகளுக்கும் அழைப்பு இல்லை. ஆனால், சீனாவின் ஒருபகுதியான தைவானை தனி நாடு என அங்கீகரித்து மாநாட்டிற்கு அழைத்துள்ளது அமெரிக்கா. உலகின் பலநாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து குட்டையைக் குழப்பி ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பது அமெரிக்காவிற்கு பொழுதுபோக்கு. பிற நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பும்.. அல்லது ஆயுதங்களை விற்கும். தனது சொந்த நாட்டிலேயே இனவேற்றுமையை இன்னமும் களையமுடியாத நாடு. கொரோனா கொடுங்காலத்தில் கூட ஏழைகளுக்கு சுகாதார வசதிகள் மறுக்கப்பட்ட நாடு.
இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றுகூட்டி உலக ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி என விவாதிக்க ஒரு மாநாட்டைக் கூட்டியது. காணொலி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டை நினைவுபடுத்தி ‘ஜனநாயக நெறிமுறைகள் எங்களது ரத்தத்தில் ஊறியது என்றும் குறிப்பிட்டுள்ளார். லிச்சாவி, சாக்யா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசுகள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது..இந்திய ஜனநாயகம் சுதந்திரத்திற்குப் பிறகான 75 ஆண்டுகளில் பெருமைப்படத்தக்க வகையில் வளர்ந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயகத்திற்கு செழுமையான பாரம்பரியம் உண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைப் புகழ்ந்து பேசுகிற பிரதமர் மோடி, இன்றைக்கு தன்னுடைய ஆட்சியில் ஜனநாயகத்தை பேணி வளர்க்கிறாரா அல்லது வேரில் வெந்நீர் ஊற்றுகிறாரா என்று பரிசீலித்தால், இவருடைய ஆட்சியில் ஜனநாயகம் எனும் செடியின் முகம் வாடி வதங்கியிருப்பதைத்தான் பார்க்க முடியும். குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் பல லட்சம் பேரின் வாக்குரிமையை மட்டுமின்றி வாழ்வுரிமையையும் பறிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு ஊட்டமோ, ஊக்கமோ தரும் செயலா?
தலைநகர் தில்லியில் முகாம் அடித்து வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஓராண்டு காலம் போராடினார்கள். ஆனால் அவர்களை அழைத்து பிரதமர் மோடி ஒருமுறைகூட பேச்சுவார்த்தை நடத்தவில்லை. போராட்டம் நடத்துபவர்களைக் கண்டால் அவ்வளவு வெறுப்பு! இடைத்தேர்தல்களில் விழுந்த அடிதான் சட்டத் திருத்தங்கள் வாபஸ் என்று அவரை அறிவிக்க வைத்தது. அதற்குப் பிறகும் அதுகுறித்து விவாதம் நடத்தக்கூட பாஜக அரசு தயாராக இல்லை. நாடாளுமன்றம் துவங்கும் நாளில் மாநிலங்களவையைச் சேர்ந்த 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது. அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோதும்கூட அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளர்க்கும் செயலா?
ஏராளமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படுகின்றன. டிசம்பர் 20 ஆம் தேதியன்று தேர்தல் சீர்திருத்த மசோதா விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘உத்திரமேரூர் கல்வெட்டிலே தேர்தல் குறித்து பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்’ என்று உலக அரங்கில் முழங்கிவிட்டு, இன்றைக்கு நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எந்தவிதமான விவாதமும் இல்லாமல் நிறைவேற்றுவது அறம் சார்ந்த செயலா?. இந்த செயலைக் கண்டு அந்த உத்திரமேரூர் கல்வெட்டே கண்ணீர் வடிக்கும்.
இந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது இந்த சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புட்டசாமி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, ஆதார் விவரங்களை சமூக நல திட்டங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்றும், ஆதார் தொடர்புடைய விவரங்கள் ஒருவருடைய அந்தரங்க தனியுரிமை என்றும் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தனது பிடியில்தானே உள்ளது என்ற அலட்சியத்தில் அத்தீர்ப்பு பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை.
ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பதன் மூலம் வாக்காளர்களின் சாதி, மதம், இனம் அடிப்படையில் அவர்களை பாகுபடுத்தி பிரச்சாரம் செய்ய வழி ஏற்படுவதோடு, முஸ்லிம்கள் மற்றும் அரசை விமர்சிப்போரது வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு வழி செய்யும் என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. அனைத்தையும் மதவாத நோக்கிலேயே அணுகும் பாஜகவின் அணுகுமுறை காரணமாகவே இந்த அச்சம்.
தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளிடம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைத் தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமாக பணம் வசூலித்துக் குவிக்கும் பாஜக, அதற்குத் தயாராக இல்லை. அதே சமயம், வாக்காளர்களை மதரீதியாக குறி வைக்க ஆதார் அட்டையையும், வாக்காளர் அட்டையையும் இணைக்க சட்டம் கொண்டு வருகிறது. இதன்மூலம் 5 கோடி பேரின் வாக்குகள் பறிபோகும் ஆபத்து உள்ளது என எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஆனால் அவசர அவசரமாக எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே இந்தச் சட்டத்தை நிறைவேற்றுகிறது ஒன்றிய அரசு.
மதரீதியாக வாக்காளர்களை பிளவுபடுத்துவது, வெறுப்பூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆனால் பாஜக உ.பி. தேர்தலை மனதில் கொண்டு அயோத்தியில் கோவில் கட்டுகிறோம்.. காசி விஸ்வநாதர் கோவிலை புதுப்பித்து விட்டோம்.. அடுத்து, மதுராவில் உள்ள மசூதியை அகற்றப் போகிறோம் என மக்களை கோவில் அரசியல் செய்து திசைதிருப்புகிறது. தேசத்தின் கோவில்கள் என்று நேருவால் கொண்டாடப்பட்ட பொதுத்துறையை அழிப்பது, மறுபுறத்தில் கோவிலையே அரசியலாக்குவது என்பதுதான் பாஜகவின் பாணியாக உள்ளது.
காசி விஸ்வநாதர் கோவில் விழாவில் பேசும்போது, பிரதமர் மோடி, விஸ்வநாத சாமியின் பெருமையைப் பேசுவதைவிட, அவுரங்கசீப்பை திட்டுவதில்தான் அதிக கவனம் செலுத்தினார். ‘அன்பே சிவம்’ என்பார்கள் பக்தர்கள். ‘வம்பே சிவம்’ என்கிறது பாஜக.
(94422 02726 – [email protected])

Spread the love