May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உத்தியாக உள்ளே இரு.. உள்ளம் வெளியே நிற்கட்டும்!

கேள்வி: உலகம் கொண்டாடும் கல்வியாளர் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் செப்டம்பர் 19. அவரின் தாக்கம் உங்கள் மீது எவ்வாறு இருந்தது என்பதை பகிரலாமே!
-எழுத்தாளர், கல்வியாளர் பேரா. ச. மாடசாமி


அறிவொளி இயக்கத்தில் செயல்பட்ட காலத்தில் அதில் எழுந்த நெருக்கடிகளின்போது வார்த்தையற்று நின்ற சந்தர்ப்பங்கள் பல. அப்போது அது குறித்த சிந்தனைகளுக்கு சரியான வார்த்தைகளைத் தந்தவர் பிரைரே.
‘அறிவொளியில் நீடிக்கலாமா விலகலாமா?’ என்ற குழப்பம் வராத நாள் இல்லை.
மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதா? அதிகாரிகளுக்குப் புள்ளிவிவரக் கணக்கு கொடுப்பதா? – எது என் வேலை என்ற கோபம் வீடு வரை தொடர்ந்த நாட்கள் அவை. “வெளியேறு! சுதந்திரமாகச் செயல்படு!” என்றொரு குரல் அடிக்கடி மனதுக்குள் இருந்து குமுறும்.
எழுத்தறிவுப் பணியில் எங்களைப் போல் வெறும் மன உளைச்சலுக்கு உள்ளானவர் அல்லர் பிரைரே. சிறைப்பட்டவர்; நாடு கடத்தப்பட்டவர். இருந்தபோதும் அரசு அமைப்புக்குள் இருந்தும் பணி ஆற்றலாம்-பணி ஆற்ற வேண்டும் என்றே பிரைரே வலியுறுத்தினார்.
அப்படிப் பணி ஆற்றும்போது உள்ளிருந்து அன்றாடக் கடமைகளைச் செய்துகொண்டே நீ கனவு காணும் பெருந்திட்டத்தைச் செயல்படுத்த விலகியுமிரு; ஒரே சமயத்தில் உள்ளேயும் இரு, வெளியேயும் இரு-என்றார் பிரைரே.
“Be tactically inside and strategically outside the system” என்பது அவர் வார்த்தை.
தின்று தீர்க்கும் தினசரி வாழ்க்கையின் சலிப்புகளுக்கிடையே, கனவுகளை இழந்து விடாமல் தொடர்ந்து இயங்குவதே புரட்சியின் ஒரு கூறுதான். அர்த்தமுள்ள பணியை, நினைத்தபடி செய்ய முடியவில்லையே என்று வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் விரக்தியுற்று வருந்துவோரிடம் பிரைரேயின் இந்த வார்த்தைகளைத்தான் இன்று நான் சேர்க்க விரும்புகிறேன்.

  • செவ்வானம் குழு
Spread the love