September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உணவு பரிமாறும் ரோபோட்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
பீஜிங். 2022 பிப்ரவரி 4 முதல் 20 வரை சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சீன ஏற்பாட்டாளர்கள் பல நூதன புதுமைகளை நடைமுறைப்படுத்தினர். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை திறமையுடன் பயன்படுத்தும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்று சீனா. ஒலிம்பிக்ஸில் பங்கேற்க வருபவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையிலேயே கொண்டுபோய் கொடுத்த ரோபோட்டுகள் பற்றிய செய்திகள் இப்போது சர்வதேச அளவில் சமூக ஊடகங்களில் வியப்பை ஏற்படுத்திவருகின்றன.
அறையின் வாசலில் வந்து நிற்கும் ரோபோட்
உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போட்டியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை புரிந்ததால் கோவிட் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. இந்நிலையில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ரோபோட்டுகளைப் பயன்படுத்தி உணவு பரிமாறப்படுதல் உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். பீஜிங்கில் ஒரு ஹோட்டலில் தங்குபவர்களுக்கு உணவுவகைகளைக் கொண்டுவந்து கொடுக்கும் ஒரு ரோபோட்டின் காணொளியை சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
விருந்தினரின் அறை வாசலிற்கு அருகில் ரோபோட் வந்துநிற்கும். அப்போது அறையில் உள்ளவர் ஒரு பின்கோடை ரோபோட்டிற்கு அனுப்பவேண்டும். அதன் பிறகு என்னென்ன உணவுவகைகள் இருக்கின்றன என்று ரோபோட் சொல்லும். விருந்தினர் உணவைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டபிறகு கேபினை மூடிவிட்டு ரோபோட் முன்னோக்கி நகரும்.
விருந்தாளியின் உணவுத் தேவைகளை அவர் தங்கியிருக்கும் அறைக்கே சென்று வழங்குவதே இந்த ரோபோட்டுகளின் தனிச்சிறப்பு. ஸ்விட்ச் போட்டால் விருப்பமான சுவையில் விதவிதமான ஐஸ்கிரீம்கள் உட்பட பலவித உணவுகளை உடனுக்குடன் தயாரித்து வழங்கும் வசதிகளும் இருந்தன என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
மாறும் உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் கண்டுபிடிக்கப்படும் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதில் முன்னணியில் இருக்கிறது சீனா. நடைமுறைப்படுத்தியுள்ள இந்த வசதிகள் உலகிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
(73390 89961 – [email protected])

Spread the love