August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

உடலில் என்றால் மருந்து போதும்…

நிறப்பிரிகை 7
எஸ்.வி. வேணுகோபாலன்


ப்ரீதா ’டான்ஸ் மூவ்மெண்ட் சைக்கோதெரபி’ எனும் படிப்பில் லண்டன் பல்கலைக்கழகத்தில் (கோல்ட்ஸ்மித் கல்லூரி) முதுநிலை பட்டம் பெற்றவர். சிகிச்சையாளராக சிறப்பு அனுமதி பெற்று லண்டன் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருந்த சில மனிதர்களை நெருங்கிப் பழகி, அவர்கள் மனங்களை இளக்கிக் கொடுத்து, இறுக்கம் உடைத்துப் பேசவைத்து உதவிகளும் செய்து வந்த அனுபவங்களை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அந்த மனிதர்கள் கொலைக் குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள்.
பொதுவாக யாரும் அணுகத் தயங்குவோரை இவர் அருகே போய்ப் பார்த்துப் பழகி வந்த ஒரு பெண்மணி, தனது இளம் வயதில் சொல்ல இயலாத அளவு குடும்ப வன்முறை எதிர்கொண்ட அதிர்ச்சி உறைந்த இதயத்தோடு வாழ்ந்தவர். தனது மணவாழ்க்கையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததும், தனக்கு நேர்ந்தது அவளுக்கும் நடந்துவிடக் கூடாது என்ற பதட்டத்தில் குழந்தையை இல்லாமல் செய்துவிட்டு, அந்தப் ’பாவத்தின்’ நிழலில் தன்னை இன்னும் நொறுக்கிக் கொண்டிருந்த துயரக் கதையை, குடும்ப நண்பர்களான கே ராமசுப்பிரமணியன்-வசந்தவல்லி இணையருடைய மகள் ப்ரீதா சொல்லிப் பத்தாண்டுகளுக்கு மேலாகியும் நேற்று கேட்டதுபோல் உள்ளே கனன்று கொண்டிருக்கிறது.
சமூகத்தில் அதிகம் பேசாது தவிர்க்கப்படுவதில் முக்கியமானதாக இருப்பது குடும்ப வன்முறைகள். பெண்களுக்கு எதிரானவை போலவே, குழந்தைகளுக்கு எதிரானவையும். சொல்லப்போனால் அவை இன்னும் கொடூரமானவை. அவற்றின் விபரீதங்கள், விளைவுகள் பேசப்படுவதே இல்லை. குற்றங்கள் பற்றி நிறைய பரபரப்பு செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அவற்றின் பின்னுள்ள உளவியல் விஷயங்கள், சமூக உண்மைகள், காலகாலமாக நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் தவறான கற்பிதங்கள் பற்றியெல்லாம் விவாதங்கள் நடத்துவதில்லை.
‘மொழி’ திரைப்படத்தில் உளவியல் அதிர்ச்சிக் கதைகள் சுமக்கும் பாத்திரங்கள் சில உண்டு. அதில் ஜோதிகாவின் கதை முக்கியமானது. தனது தந்தையைப் பற்றிய கோபத்தில் ‘பொதுவாகவே ஆண்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்பது அவள் கருத்து’ என்று அவரது தோழி சொர்ணமால்யா சொல்வார் ஓரிடத்தில்.
பரிவோடு பேசுதல், பாதிப்புற்றோரை உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளப் பழகுதல் என்பது சமூகம் உள்ளபடியே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். தேசிய அளவில் ஆண்டு தோறும் தற்கொலைகள் எத்தனை என்று

எடுத்துப்பார்த்தால் நிச்சயம் இன்று இரவு உணவு செல்லாது. 2020 ஓராண்டில் மட்டும் 1,53,052 பேர்! இதற்கான காரணங்களில் மூன்றில் ஒரு பங்கு, குடும்ப பிரச்சனைகள் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு இன்னும் நெடுந்தொலைவு போக வேண்டியிருக்கிறது.
சமூகத்தில் பாலின சமத்துவம் பற்றிய கல்வி குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டியது-ஆண் குழந்தைகளுக்கு முக்கியமாக! பள்ளிக்கூடங்களில் அது உறுதி செய்யப்பட வேண்டியது. பொதுவெளியில், திரைமொழியில், விவாதக்களங்களில், சாதாரண உரையாடல்களில் கூட இந்த அம்சத்தைப் பற்றிய புரிதலோடு பேசும் தன்னுணர்வு வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இன்னொரு பக்கம், ஏதோ விரக்தியில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் பெண்மணியின் குழந்தைகள் படும்பாடு விவரிக்கவே இயலாத கொடுமை. அப்படியான துயர வேளைகளில் எங்கிருந்தாவது காக்கும் கரங்கள் அந்தப் பிள்ளைகளுக்கு வாய்க்குமானால் அதைவிட ஆறுதல் அளிக்கும் செய்தி வேறொன்று இருக்க முடியாது.
அப்படியான சூழலில் தவித்த குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துக் கொண்ட தனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரைப் பற்றி அண்மையில் என் வாழ்க்கை இணையர் தோழர் ராஜி குறிப்பிட்டார். தாயைப் பறிகொடுத்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்தப் பெண்ணும், மற்றொரு குழந்தையை அவர்களது குடும்ப நண்பர் ஒருவரும் தத்தெடுத்துக் கொண்டனராம். தனது மகனுக்கு ஈடான குழந்தையையும் அவனோடே ஒன்றாகப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து இருக்கும் இந்தப் பெண்மணி தனது தாயை இளம் வயதில் அதே போலவே பறிகொடுத்தவர், அவருடைய கணவரும் அன்பான மனிதர் என்றார் ராஜி. வணக்கம் சொல்லத் தோன்றியது அவர்கள் இருவருக்கும்.
முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய அவலங்களை விவாதித்துத் தீர்வு நோக்கி சமூகம் உறுதியான காலடி எடுத்து வைக்க வேண்டும். அதனூடே உன்னதமான தலையீடுகளும், முயற்சிகளும் கொண்டாடி வரவேற்கப்பட வேண்டும்.
(நிறங்கள் இன்னும் விரியும் )

(94452 59691 – [email protected])

Spread the love