August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இவனையெல்லாம் இப்பவே என்கவுண்டர்ல போட்றணும்!

கலகல வகுப்பறை சிவா,


பிட் பாக்கெட் அடிப்பது, தனியே செல்லும் பெண்களிடம் சங்கிலியைப் பறிப்பது, சிறு திருட்டுகள், போதைப்பழக்கம், குழுவாக ரவுடித்தனம் இத்தனை சமூக விரோதச் செயல்களையும் செய்யும் வளரிளம் பருவச் சிறுவன், அகிலேஷ். நாக்பூரில் ஒரு சேரிப்பகுதியில் வசிக்கிறான். அவனுடன் அவனைப் போலவே சமூக விரோதச் செயல்களைச் செய்யும் சிறார்கள் குழு இருக்கிறது. அனைவருமே பள்ளியிலிருந்து இடையே விலகியவர்கள். அவ்வப்போது தேவைகளுக்குக் கிடைக்கும் பணமும் சமூகம் காட்டும் பயமும் அவர்களைத் தொடர்ந்து சமூக விரோதச் செயல்களைச் செய்ய வைக்கின்றன.
அகிலேஷ் தன்னை ‘டான்’ என்றே அழைத்துக் கொள்கிறான். ஆள் கடத்தல், மக்களை மிரட்டுதல் என அவன் வளர வளர அவனது சமூக விரோதச் செயல்களும் வளர்ந்து கொண்டே செல்கின்றன. அவன் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. பிற சமூக விரோதக் குழுக்களுடனான மோதல்களும் அதிகரிக்கின்றன.
அகிலேஷை ஏதாவது செய்துவிட வேண்டும் என்று ஒரு புறம் ரவுடிக் கும்பல்கள் தேட, மறுபுறம் காவல் துறையும் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது.
அகிலேஷ் உயிருக்குப் பயந்து தலைமறைவாகிவிட முடிவு செய்கிறான். எங்கே சென்று ஒளிந்துகொள்வது? பகலெல்லாம் ஊருக்கு வெளியே இருந்த பாழடைந்த கட்டிடங்களிலும் இரவில் சுடுகாட்டிலும் ஒளிந்து கொள்கிறான். அருகே இருந்த கோவிலில் பிச்சையெடுப்பவர்கள் தின்று போட்ட மீதி உணவையே சாப்பிட வேண்டிய நிலை.
இவனையெல்லாம் இப்போதே என்கவுண்டரில் போட்டுத்தள்ளி விடுவதே நல்லது என்று ஊருக்குள் பலருக்கும் தோன்றியிருக்கும்.
இப்படியாகப் பலரும் அகிலேஷின் மரணத்திற்காக காத்திருந்தபோது ஒருவர் மட்டும் அவனைக் காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் விஜய் பார்சே. அகிலேஷ் வசிக்கும் சேரிக்கு அருகிலிருக்கும் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியர்.
கல்லூரியை ஒட்டியிருந்த சேரிப்பகுதியில் பெரிய திறந்த வெளி இருந்தது. அங்குதான் சேட்டைக்காரர்கள், ரவுடிகள் எனப் பெயரெடுத்த சிறார்கள் கூடிக் கும்மாளமாகப் பொழுதைக் கழிப்பார்கள். விஜய் சார் ஒரு நாள் மாலையில் சேரி வழியே சென்று கொண்டிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. திடீரென மழை பெய்ததால் ஒரு வீட்டுக் கூரையின்கீழ் ஒதுங்கி நிற்கிறார்.
திறந்தவெளியில் மழையைப் பொருட்படுத்தாமல் ஒரு தண்ணீர் கேனை எத்தி எத்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த சிறார்கள். அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய் பார்சே. மறுநாள் கல்லூரி வாயிற் காவலர்கள் மூலம் அந்தச் சிறார்களைக் கல்லூரிக்கு அழைக்கிறார் விஜய். அவர்களிடம் ஒரு கால்பந்தைக் கொடுத்து விளையாடச் சொல்கிறார்.
நாங்கள் ஏன் விளையாடவேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
நீங்கள் விளையாடினால் உங்களுக்குக் கொஞ்சம் பணம் தருவேன் என்று ஆசிரியர் கூறுகிறார். அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பணம் கிடைக்கிறதே என்று விளையாடச் சம்மதிக்கிறார்கள்.
அவர்கள் கால்பந்தை இஷ்டம்போல் உதைத்து விளையாடுவதை ரசித்துப் பார்ப்பது மட்டுமே தினமும் விஜய் சாரின் வேலை. இது சில நாட்களுக்குத் தொடர்கிறது.
ஒரு நாள் மாலை பந்தைக் கொடுக்க மறுக்கிறார் விஜய் சார். சிறார்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பந்தைத் தர மறுக்கிறார். அவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் பந்தைத் தர மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று கூறுகிறார்.
தினமும் செலவுக்குக் கிடைத்த பணம் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் தினமும் விளையாடிய பழக்கம் சிறார்களை விளையாடத் தூண்டுகிறது. என் கால்கள் பந்துக்கு ஏங்குகின்றன என்று ஒருவன் கூறுகிறான். தங்களுக்குள் பேசி அனைவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
எங்களுக்குப் பணம் வேண்டாம். பந்தை மட்டும் கொடுங்கள். விளையாடி விட்டுத் தந்து விடுகிறோம் என்று கேட்கிறார்கள். விஜய் சாரும் மகிழ்ச்சியாகப் பந்தைக் கொடுக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு முறையாக எவ்வாறு கால்பந்து விளையாட வேண்டும் என்று சொல்லித் தரத் தொடங்குகிறார் ஆசிரியர் விஜய். மிகச் சிறந்த கால்பந்து அணி அந்தச் சேரியில் உருவாகிறது.
மாநிலமெங்கும் உள்ள சேரிகளில் கால்பந்து அணி இருந்தால் ஒரு போட்டி நடத்தலாம் என்ற யோசனை விஜய் சாருக்கு வருகிறது. சேரி கால்பந்துப் போட்டி, மாநில அளவைத் தாண்டி தேசிய அளவுக்கு விரிவடைகிறது.
உலகக் கோப்பை சேரி கால்பந்துப் போட்டி குறித்து அறிந்த விஜய் சார் தேசிய அளவில் ஓர் கால்பந்து அணியை உருவாக்குகிறார். அதில் அகிலேஷையும் சேர்க்க விரும்புகிறார். ஆசிரியரின் முயற்சியால் அகிலேஷ் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைகிறான். நீதிமன்ற அனுமதியோடு உலகக்கோப்பை சேரி கால்பந்துப் போட்டியில் பங்கு பெறுகிறான்.
விளையாடக் கிடைத்த வாய்ப்ப்பும் சமூகத்தின் பாராட்டும் சமூக விரோதிகளாக இருந்த சிறார்களை மாற்றுகிறது. சிறுவர்கள் பள்ளி செல்லத் தொடங்குகிறார்கள்.
அத்தனை அவமரியாதைச் சொற்களாலும் தன்னை அழைத்த சமூகம் இப்போது ‘சார்’ என்று மரியாதையாக அழைக்கிறது என்று கண் கலங்கும் அகிலேஷை மதிப்புள்ள மனிதராக மாற்றியது கால்பந்து விளையாட்டும் விஜய் சாரின் அன்பும்தான்.
அகிலேஷ், சிவப்பு விளக்குப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்குக் கால்பந்து பயிற்சியாளராக இருக்கிறார். குயனேசல, ளுயசையவ ஆகிய சிறந்த படங்களை இயக்கிய புகழ்பெற்ற மராத்திப்பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே அகிலேஷின் கதையை துhரனே என்ற பெயரில் திரைப்படமாக ஆக்கியுள்ளார். படத்தில் விஜய் சாராக நடித்திருப்பவர் அமிதாப்பச்சன். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இப்படம் வெளியானது. அகிலேஷையும் விஜய் சாரையும் உலகிற்கு வெளிச்சப்படுத்தியது, அமீர்கானின் ‘சத்யமேவ ஜயதே’ நிகழ்வு.
வளரிளம் பருவக் குழந்தைகளிடையே இப்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள் எதுவுமே புதிதல்ல. நமக்கு முன்னால் இதே பிரச்சினைகளை உலகின் பலபகுதிகளில் ஏராளமான ஆசிரியர்கள் சந்தித்திருக்கிறார்கள். தீர்வுகளையும் கண்டிருக்கிறார்கள். அவற்றின் துணையோடு நமது வகுப்பறைகளிலும் மாற்றங்களை மலர வைக்க முடியும்.
அத்தகைய வழிமுறைகள் தெரியாததால்தான், தண்டிக்கும் உரிமை, மாற்றுச் சான்றிதழில் குறிப்பது என்று சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், உலகெங்கும் சமூக மாற்றங்களை முன்னெடுத்தவர்கள் அனைவருமே அன்பாலும் பொறுமையாலுமே மனித மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பெரியவர்களை விட குழந்தை மனதில் மாற்றங்களை விதைப்பது எளிது.
([email protected])

Spread the love